You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவி இறப்புக்கு ராக்கிங் காரணமா?
செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவி தற்கொலைக்கு ராக்கிங்தான் காரணம் என்று அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு சட்டக்கல்லூரியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவாதூர் கிராமத்தை சேர்ந்த சிவபிரகாசம் மகள் கவிப்பிரியா (வயது19) என்பவர் செங்கல்பட்டு சட்டக் கல்லூரி விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி அவர் தனது விடுதி அறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கவிப் பிரியாவை நீண்டநேரமாக காணவில்லை என்பதால் அவரது அறைக்கு சென்று பார்த்த சக மாணவிகள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். ஆனால், கவிப்பிரியா இறந்துவிட்டார்.
மன உளைச்சல்
இதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் தாம் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதால் விடுதியை காலி செய்துவிட்டு ஊருக்கே வந்து விடுவதாக தன் தந்தையிடம் தொலைபேசியில் கூறியுள்ளார் கவிப்பிரியா. ஆனால் தேர்வு நடைபெற இருப்பதனால் தேர்வு முடியும் வரை பொறுத்து இருக்கும்படி நண்பர்களும் பெற்றோர்களும் கூறியுள்ளனர். சக மாணவிகள் ரேக்கிங் செய்ததாலேயே தங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தன் மகள் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்கும் வரை சடலத்தை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என அவரது தந்தை சிவப்பிரகாசம் கூறியுள்ளார் மேலும் தன் மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையல்ல என்றும், தங்களுக்கு எல்லாம் அவ்வளவு தைரியம் சொல்லக்கூடியவள் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது கண்கலங்கினார் அவரது தந்தை.
"ராகிங் கொடுமையால் சட்டக்கல்லூரி மாணவி கவிப்பிரியா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு காரணமானவர்களை தண்டிப்பதோடு கவிப்பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி.
இரண்டு புகார்கள்
சட்டக்கல்லூரி மாணவி ராகிங் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியர் மூலமாக கல்வித்துறை சார்ந்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மேலும் பெற்றோர் தரப்பில் இருந்து 2 புகார்கள் கொடுத்திருக்கிறார்கள்.
முதல் புகாரில் மாணவி பாலியல் தொந்தரவினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்றும், மற்றொரு புகாரில் மாணவி தற்கொலைக்கு ராகிங்தான் காரணமா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார்களின் மீது முறைப்படி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். முதற்கட்டமாக கவிப்பிரியாவின் உடற்கூராய்வில் பாலியல் தொந்தரவு நடந்ததற்கான உடல் ரீதியான அறிகுறி ஏதும் இல்லை.
மேலும் 100% தற்கொலைதான் செய்து கொண்டார் என்பது நிரூபணமாகியுள்ளது. எனவே இறப்பில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இரண்டாவதாக ராகிங் புகார் குறித்து காவலர்கள் விசாரிப்பதை விட கல்வியாளர்கள் தலைமையில் ஏற்படுத்தப்படும் குழுவினர் விசாரிப்பதே மிகச் சிறப்பாக இருக்கும். அதை மாவட்ட ஆட்சியர் மூலம் அமைக்கப்பட்ட கல்வித் துறை சார்ந்த குழு மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு கல்வி குழுவில் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கௌரி ரமேஷ் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உடன் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறைக்கும் கல்லூரி சார்பாக முழு ஒத்துழைப்பு தரப்படும் என சட்டக் கல்வி இயக்குநர் விடுத்த செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்