சமஸ்கிருத உறுதிமொழி: மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வலுக்கும் எதிர்வினை

    • எழுதியவர், ஆ.விஜய் ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

மதுரை மருத்துவக் கல்லூரியில் ஹிப்போக்ரடிக் உறுதிமொழிக்கு மாறாக, சமஸ்கிருதத்தில் மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்த விவகாரத்தில் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

'தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவின் பேரிலேயே இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது' என்கின்றன மருத்துவ சங்கங்கள். என்ன நடந்தது?

மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமையன்று (ஏப்ரல் 30) முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ரத்னவேல் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, மாணவர்கள் மருத்துவ உடை அணிந்த பின்னர் 'ஹிப்போக்ரடிக்' உறுதிமொழியை வாசிக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக சமஸ்கிருதத்தில் 'மகரிஷி சரக சபதம்' என்ற உறுதிமொழி எடுக்க வைக்கப்பட்டனர். மாணவர் ஒருவர் வாசிக்க அதனை பிற மாணவர்களும் கூறியுள்ளனர். இதற்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. 'தேசிய மருத்துவ ஆணையத்தின் இணைய தளத்தில் ஆங்கிலத்தில் இருந்த உறுதிமொழியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

பின்னர், அதனை மருத்துவக் கல்லூரியின் மாணவர் சங்க நிர்வாகி, முதலாம் ஆண்டு மாணவர்களிடம் கொடுத்துள்ளனர். இது தவறுதலாக நடந்துவிட்டது' என கல்லூரி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அரசு நடவடிக்கை

இந்த விவகாரத்தில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட சிலர் மீது மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுக்கலாம் எனப் பேசப்பட்டு வந்த நிலையில், கல்லூரி முதல்வரை கட்டாயக் காத்திருப்பில் வைத்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவர்களும் மற்றும் மருத்துவ கல்வி முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவர்களும் ஹிப்போக்ரிடிக் உறுதிமொழி ஏற்கவைப்பது காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவ கல்லூரியில் நேற்று நடைபெற்ற வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் 'ஹிப்போக்ரடிக்' உறுதிமொழிக்கு மாறாக 'மகரிஷி சரக சபதம்' என்னும் சமஸ்கிருத உறுதிமொழியை ஏற்க வைத்தது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும்.

இதன்பொருட்டு மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார். மேலும், தன்னிச்சையாக விதிகளை மீறி மகிரிஷி சரக சபதம் எனும் உறுதிமொழியை மாணவர்களை எடுக்க வைத்ததற்கு துறைரீதியாக விசாரணை நடத்துவதற்கு மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். இனி வரும் காலங்களில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் எப்போதும் பின்பற்றப்படும் ஹிப்போக்ரடிக் உறுதிமொழியை தவறாது ஏற்பதற்கு மருத்துவக் கல்வி இயக்குநர் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராமணர்களையும் பசுக்களையும்

மதுரை மருத்துவக் கல்லூரி விவகாரம் தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், ''இது கடுமையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு அரசும் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில்தான் கல்லூரி நிர்வாகம் இவ்வாறு செயல்பட்டுள்ளது. ஏற்கெனவே நாடு முழுவதும் சரக சபதம் என்ற உறுதி மொழி பல்வேறு திருத்தங்களுடன் வந்துள்ளது. அதன்படி, பிராமணர்களையும் பசுக்களையும் உயர்வாக நினைக்க வேண்டும் என அந்த உறுதிமொழி கூறுகிறது. பசுவுக்கும் நவீன மருத்துவத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது எனத் தெரியவில்லை.

தற்போது திருத்தப்பட்ட உறுதிமொழியில் அந்த வாக்கியங்கள் இல்லையென்றாலும் பழைய உறுதிமொழியை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதில் சமஸ்கிருத திணிப்பும் இருக்கிறது. இதன்மூலம் நவீன மருத்துவத்தை நீர்த்துப் போக வைக்கும் வேலைகள் நடக்கின்றன. அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதைக் குறிப்பிடும் வகையில் அரசின் நடவடிக்கை என்பது அமைந்துள்ளது'' என்கிறார்.

முன்னதாக, ஆயுர்வேதத்தின் தந்தை என அழைக்கப்படும் மகரிஷி சரகரின் பொன்மொழிகளை மருத்துவ மாணவர்கள் உறுதிமொழியாக எடுக்க வேண்டும் எனக் கூறி தேசிய மருத்துவ ஆணையம் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. இதன்மூலம் மருத்துவத் துறையை மத்திய அரசு காவிமயமாக்க முயல்வதாக கண்டனம் எழுந்தது.

அதேநேரம், கிரேக்க மொழியில் எழுதப்பட்ட ஹிப்போகிரடிக் உறுதிமொழியானது, மருத்துவத்தின் தந்தை எனக் கொண்டாடப்படும் ஹிப்போகிரட்டீஸ் என்பவரால் எழுதப்பட்டது. இதற்கு மாற்றாகத்தான் சரகரின் பொன்மொழிகளை தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்தது. 'இது தவறான வழிகாட்டுதலாக அமையும்' என இந்திய மருத்துவ சங்கமும் குற்றம் சாட்டியிருந்தது.

என்ன சொல்கிறார் பிடிஆர்?

சமஸ்கிருத உறுதிமொழி ஏற்ற மாணவர்கள் பற்றி தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "'தற்போது மாணவர்கள் ஏற்றுக் கொண்ட இந்த உறுதிமொழி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மருத்துவர்கள் பின்பற்றக்கூடிய உறுதிமொழி நடைமுறையைத்தான் பின்பற்ற வேண்டும். அரசியல்வாதிகளாகிய நாங்கள் அரசு பொறுப்பேற்கும்போது, உலகம் முழுவதும் பின்பற்றப்படும் பாரம்பரிய நடைமுறையைத்தான் பின்பற்றி வருகிறோம். இதைத்தான் நானும் பரிந்துரை செய்ய விரும்புகிறேன்,' என்றார்.பிறகு பேசிய மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்னவேல், 'இந்த நிகழ்ச்சிக்கான உறுதிமொழியை மாணவர்களாக இணையத்திலிருந்து எடுத்து, எங்களுடைய கவனத்திற்கு கொண்டு வராமலேயே செய்துவிட்டனர். இதன் விளைவு தெரியாமல் செய்துவிட்டார்கள் என நினைக்கிறேன்' என்றார்.

கல்லூரி முதல்வர்தான் பொறுப்பு - இயக்குநர்

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, ''கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்து அவரை நீக்கியுள்ளோம். தற்போது கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதுவே தண்டனைதான். இதையடுத்து அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். மேலும், '' சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது எந்தவகையில் சரியானது என நேற்று கேள்வி எழுப்பினர். ஹிப்போகிரடிக் உறுதிமொழி என்பது 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரியில் 250 மாணவர்களுக்கு மகரிஷி சரக சபதம் என்ற உறுதிமொழியை எடுக்க வைத்துள்ளனர். இது தெரிந்தோ, தெரியாமலோ நடந்ததாகக் கூறினாலும் அதற்கு கல்லூரி முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும். அந்தவகையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது'' என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: