You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சமஸ்கிருதம் பிராமணர்களுக்கு மட்டும் சொந்தமா? உருது-இந்தி-சமஸ்கிருதம் மொழிகளின் இணக்க வரலாறு என்ன?
- எழுதியவர், மங்கலேஷ் டப்ரால்
- பதவி, மூத்த பத்திரிகையாளர், பிபிசிக்காக
தேசிய சமஸ்கிருத அமைப்பில் படித்த ஃபரோஸ் கான், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அவரது நியமனம் ஒரு பெரிய சலசலப்பை உருவாக்கும் என்றும், மாணவர்கள் அவருக்கு எதிராக தர்ணாவில் அமர்வார்கள் என்றும் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.
இலக்கணம் மற்றும் இலக்கியத்தின் அடிப்படையில் மிகச்சிறந்த மொழியாக கருதப்படும் சமஸ்கிருதம் ஏகபோகம், சிறுபான்மை மற்றும் வகுப்புவாதத்திற்கு பலியாகியுள்ளது.
உலகளவில் சமஸ்கிருதம் மதிக்கப்படுவதற்கு காரணம் இந்துக்கள் அல்லது பிராமணர்கள் மட்டுமல்ல, மாறாக ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் முஸ்லீம் அறிஞர்கள் என்பதை நாம் மறந்துவிட்டோம். அவர்கள் தான் பல மொழிகளுக்கு இடையில் இந்த சீரிய மொழியை பயன்படுத்தி, பாலங்களை உருவாக்கியவர்கள்.
இணக்கத்தை ஏற்படுத்தும் மொழிகள்
1953-54 ஆம் ஆண்டில், முகமது முஸ்தபா கான் என்ற 'மத்தாஹ்' திருத்தப்பட்ட உருது-இந்தி அகராதியை வெளியிட்டார், இது உத்தரப் பிரதேச மாநிலத்தின் இந்தி அமைப்பால் வெளியிடப்பட்டது. ஏழு தசாப்தங்களுக்குப் பிறகும், உருது-இந்தி மொழிக்காக இதை விட ஒரு சிறந்த அகராதி உருவாக்கப்படவில்லை.
பாலி, சமஸ்கிருதம், அரபி, பாரசீகம் மற்றும்இந்தி மொழிகளில் புலமை பெற்றிருந்தார் மத்தாஹ். மேலும் அவர் இந்த மொழிகளிலும் இந்தி அகராதியைத் தயாரித்திருந்தார்.
இந்தி-உருது அகராதியை மத்தாஹ் உருவாக்கிய பிறகு, உருது-இந்தி அகராதியையும் தயாரிக்க வேண்டும் என்று அவரது ஒரு இந்து நண்பர் மத்தாஹிடம் கேட்டுக்கொண்டார்.
டாக்டர் சம்பூர்நந்திற்கு இந்த அகராதி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, சமஸ்கிருத அறிஞராகவும் கோலோச்சியவர். மேலும் பனாரஸில் சம்பூர்நானந்த் சமஸ்கிருத வித்யாபீடமும் உருவாக்கப்பட்டது.
இது ஒரு உதாரணம் மட்டுமே. உண்மையில், நம் நாட்டில், மொழி மற்றும் கல்வித் துறையில், சமஸ்கிருதம், பாரசீகம், இந்தி, உருது ஆகியவற்றை கலந்து பரிமாறிக் கொள்ளும் ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. முகலாய காலத்தில் தாரா ஷிகோ எழுதிய உபநிஷதங்களின் மொழிபெயர்ப்பு மொழிகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் காட்டுகிறது. அந்த காலம், மொழிகளின் சிறப்பை எடுத்துச் சொல்லும் ஒரு முக்கியமான காலகட்டமாகும்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகும், தொலைதூர கிராமங்களில் இரண்டு அல்லது மூன்று மொழிகளின் அறிவு பெற்றிருப்பது இயல்பானதாகவே இருந்தது. எனது தந்தையைப் போல சமஸ்கிருதம், உருது மற்றும் இந்தி மொழிகளை நன்கு அறிந்தவர்களைப் பார்ப்பது அந்த நாளில் இயல்பான ஒன்றாகவே இருந்தது.
'சத்யநாராயண கதா' என்ற படைப்பை கர்வாலியில் மொழிபெயர்த்த அவர், தனது பிரத்யேக நாட்குறிப்பை உருது மொழியில் எழுதும் பழக்கம் கொண்டவராக இருந்தார்.
இந்திக்கும் உருது மொழிக்கும் உள்ள நெருக்கமானது, இலக்கியத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. பிரேம்சந்த், ரதன்நாத் சர்ஷர், பிரிஜ் நாராயண் சாக்பஸ்த், ஃபிராக் கோரக்புரி, கிருஷ்ணா சந்தர், ராஜேந்திர சிங் பேடி மற்றும் உபேந்திரநாத் ஆஷ்க் போன்ற முக்கிய எழுத்தாளர்கள் உருது மொழியில் தங்கள் உன்னதமான படைப்புகளை படைத்தார்கள். ஆனால் அவர்கள் ஏன் உருது மொழியில் எழுதுகிறார்கள் என்ற கேள்வி ஒருபோதும் எழுந்ததில்லை.
அந்த நேரத்தில் இந்தி மற்றும் உருது மொழியை ஒன்றாகப் படிப்பது இயல்பான விஷயம், இன்றும் கூட வெளிநாட்டு அறிஞர்கள் இந்தி மற்றும் உருது மொழியை ஒன்றாகப் படிக்கிறார்கள்.
பிரேம்சந்த், பரந்த வாசக சமூகத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஹிந்தி மொழிக்கு வந்தார் என்றபோதிலும், அவர் ஒருபோதும் உருதுவை விட்டு வெளியேறவில்லை. இவரது கடைசி கதையான 'கஃபான்' முதலில் உருது மொழியில் தான் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும், இந்து குடும்பங்களில் பிறந்த பல உருது கவிஞர்கள் நன்றாக எழுதுகிறார்கள். ஷீன் காஃப் நிஜாம், ஜெயந்த் பர்மார், சந்திரபான் க்யால் போன்ற பல பெயர்களை பட்டியலிடலாம். உருது மொழியின் மிகப் பரந்த பாரம்பரியத்தில், மீர் மற்றும் காலபி போன்ற கவிஞர்கள் இந்தி அல்லது கடிபோலி சொற்களை பல்வேறு இடங்களில் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் அரசியல், மொழியை ஆயுதமாக பயன்படுத்துகிறது, கொடூரமாகவும் வெறுமையாகவும் மாற்றிவிடுகிறது. ஜெர்மனியில் ஹிட்லரின் சர்வாதிகார காலத்தில் லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்ட பின்னர், தத்துவஞானி தியோடர் அடோர்னோ, 'இனி ஜெர்மன் மொழியில் கவிதை எழுதுவது சாத்தியம் இல்லை' என்று கூறினார்.
மொழிகள் மதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தி மற்றும் உருது மொழிகளிலும் இதேபோன்ற விபத்துகள் நிகழ்ந்துள்ளன, இன்று இந்தி இந்துக்களுக்கான மொழியாகவும், உருது, முஸ்லிம்களுக்கானதாகவும் மாற்றப்படுவதைக் காண்கிறோம், இதனால் உருது மொழி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
நவீன காலங்களில் சமஸ்கிருதம் கற்பிப்பது எப்படி? மொழி என்பது 'பாயும் நீர்' என்று கருதப்படுகிறது. இதில் நாட்டிற்கு ஏற்ப மாற்றங்கள் நிகழ்கின்றன. பாயும் நீர் பிரவாகிக்காமல், தேங்கி நின்றால், குட்டையாக மாறி அழுக்காக மாறுவதைப்போல, மொழிக்கும் தடை ஏற்பட்டால், அது தேங்கி, அதன் பெருமை மங்கிப்போகும்.
சமஸ்கிருதத்திலும் இதே போன்ற சிக்கலே ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அதை படிக்கும், எழுதும் மக்கள், அதனை புதிய யுகத்திற்கு ஏற்றவாறு மாற்றுவதற்கு போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை. ஆனால், எந்தவொரு புதிய சூழலையும் அல்லது புதிய வெளிப்பாட்டையும் இணைக்கும் அளவுக்கு நெகிழும் தன்மை கொண்டது சமஸ்கிருதம் என்பதுதான் அதன் ஆகச் சிறந்த சிறப்பம்சமாகும்.
துரதிர்ஷ்டவசமாக, சமஸ்கிருந்த மொழியின் நெகிழ்வுத்தன்மையை அதை கற்பிக்கும் விதத்தில் காட்டவில்லை என்பதோடு, பழைய, குறுகிய மற்றும் நிலப்பிரபுத்துவ முறையில் தொடரப்பட்டது. இதன் விளைவாக, பெரிய மொழி மாற்றங்களால் அது தீண்டத்தகாததாகவும், பொருத்தமற்ற மொழி என்றும் கருதப்படும் சூழ்நிலை உருவானது.
சுதந்திரத்திற்குப் பிறகு, சமஸ்கிருத நிறுவனங்கள் தேசிய அளவில் திறக்கப்பட்டன, ஆனால் அவற்றின் பாடத்திட்டம் அப்படியே இருந்தது. அதாவது நவீன காலத்திற்கான சமஸ்கிருத மொழியானது, இறந்த காலத்திலேயே அதாவது கடந்த காலத்திலேயே வைக்கப்பட்டது.
டாக்டர் ராதவல்லப் திரிபாடி மற்றும் பல்ராம் ஷுக்ல் போன்ற சில அறிஞர்கள் சமஸ்கிருத இலக்கியத்தின் பிற மரபுகளைக் கண்டுபிடித்து, அவை பிராமண பாரம்பரியம் மட்டுமல்ல என்பதை தெளிவுபடுத்தினர். சமஸ்கிருதம் என்பது, அழகு மற்றும் அலங்கரத்துக்கான மொழி மட்டுமே அல்ல. காலத்தின் பற்றாக்குறை மற்றும் நெருக்கடியின் சுமையை சுமக்கும் மொழி என்பதை சுட்டிக்காட்டிய விதிவிலக்குகள் என்றே சொல்ல்லாம்.
சமஸ்கிருதத்தின் உண்மையான வளர்ச்சி நவீன தாராளமயக் கண்ணோட்டத்திலிருந்தே இருக்க முடியும். குருகுலத்தில் பயின்ற ஆச்சாரியர்கள், புலமை பெற்ற மதத் தலைவர்கள் என்ற சிறிய வட்டத்திற்குள் சமஸ்கிருத்த்தை குறுக்கிவிட முடியாது. பிற மதங்களில் பிறந்தவர்களுக்கும் இடம் கொடுத்து, அவர்கள் மூலமாகவும் உலகத்தின் முக்கியமான மொழிகளில் ஒன்றாக இடம் பெற்றிருப்பதே சமஸ்கிருத மொழியின் மாண்பு.
(பிபிசி தமிழில் 20 நவம்பர், 2019 வெளியான கட்டுரை இது)
பிற செய்திகள்:
- அமெரிக்காவை தாக்கும் மற்றொரு அபாயம்: 32 பகுதிகளுக்கு ஆபத்து - விரிவான தகவல்கள்
- புதுச்சேரி எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாதிப்பு; திறந்தவெளியில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடர்
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்துக்கு இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயம்
- கொரோனா தாக்கிய கர்ப்பிணி பெண்களுக்கு தனிக்கவனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :