உ.பி மருத்துவமனையில் சடலமாக தொங்கிய செவிலியர் - நடந்தது என்ன?

உன்னாவ் மருத்துவமனை - பெண் மரணம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரவி
    • பதவி, பிபிசி ஹிந்தி, கான்பூரில் இருந்து

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் 18 வயதுள்ள செவிலியர், வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே தூக்கில் சடலமாக கிடந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என புகார் தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் அப்பெண் செவிலியராகப் பணிக்கு வந்த முதல் நாள் அது. உன்னாவ் மாவட்டத்திலுள்ள பங்கர்மாவ் பகுதியில் துல்லப்பூர்வா என்ற இடத்தில் இந்த மருந்துவமனை ஆரம்பித்து ஐந்து நாட்களே ஆகியுள்ளன. ஏப்ரல் 25 ஆம் தேதி, இந்த மருத்துவமனையை அப்பகுதியின் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

குற்றம்சாட்டும் குடும்பத்தினர்

அப்பெண்ணின் மாமா இது குறித்து கூறுகையில், "வெள்ளிக்கிழமை மாலை, அவர் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அப்போது அங்கு நோயாளிகள் யாரும் இல்லை. மருத்துவமனைக்கு அருகில் தான் அவர் ஓர் அறையில் தங்கியிருந்தார். அதனால், அவர் அறைக்கு திரும்பியுள்ளார். இரவு 10 மணியளவில், அவருக்கு மருத்துவமனையில் இருந்து அங்கு வர சொல்லி அழைப்பு வந்தது. அவரை அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டனர்," என்று குற்றம்சாட்டுகிறார்.

உன்னாவ் மருத்துவமனை - பெண் மரணம்

பட மூலாதாரம், Getty Images

இந்த தகவல் கிடைத்தவுடன் அப்பெண்ணின் தாய் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். மருத்துவமனையில் உள்ள சுவரில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது மகளின் சடலத்தை கண்டார்.

இது குறித்து அவரது தாய் கூறுகையில், "என்னுடைய மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக சனிக்கிழமை காலை மருத்துவமனையில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் மருத்துவமனையை அடைந்தபோது, எனது மகளின் உடல் அங்குள்ள இரும்பு கம்பியில் தொங்கி நிலையில் இருந்தது. பணி காரணமாக, இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்புதான், அருகில் இருக்கும் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினார்," என்றார்.

தனக்கு எட்டு மகள்கள் இருப்பதாகவும், இறந்த மகள் நான்காவதாக பிறந்தவர் என்றும் அவரது தாய் கூறுகிறார். " அவரது மூத்த சகோதரிகள் மூன்று பேரும் வேலை செய்கின்றனர். அவர்களின் அப்பா இறந்து பத்து ஆண்டுகள் ஆகின்றன. அப்போதிலிருந்து மகள்கள்தான் குடும்ப செலவுகளைப் பார்த்துக் கொள்கின்றனர்."

மேலும் அவர் கூறுகையில், "வேலை செய்யவே அவர் செவிலியர் படிப்பை படித்துமுடித்தார்", என்றார்.

காவல்துறை தரப்பு என்ன கூறுகிறது?

இந்த வழக்கு குறித்து உன்னாவ் கூடுதல் எஸ்பி சஷி சேகர் கூறுகையில், "இந்த மருத்துவமனை அப்பெண்ணின் கிராமத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. அதனால், அவர் மருத்துவமனைக்கு அருகில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார்.

அப்பெண்ணின் முகத்தில் மாஸ்க் இருந்தது. கைகளில் ஒரு துணி சுற்றி இருந்தது. இரண்டு கைகளும் மார்புக்கும் சுவருக்கும் இடையே அழுத்தப்பட்டு இருந்தது. அந்த துணி யாருடையது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தற்போது மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது." என தெரிவித்தார்.

உன்னாவ் மருத்துவமனை

பட மூலாதாரம், Getty Images

இந்த வழக்கில் 3 பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பங்கர்மாவ் இன்ஸ்பெக்டர் பிரிஜேந்திர நாத் சுக்லா தெரிவித்தார்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்றபோது, ஆப்ரேட்டர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூவரும் அங்கு இருந்ததாக அவர் கூறினார்.

அப்பெண்ணின் உடலை, இரண்டு மருத்துவர்கள் கொண்ட குழு, காணொளி மூலம் உடற்கூறாய்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் தூக்கிட்டு இறந்ததாக முதற்கட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

பாலியல் வன்கொடுமை குறித்து உறுதி செய்ய மாதிரிகள் கொண்ட ஸ்லைட், லக்னொவில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. கால் விரல்களில் ஒரு இடத்தில் சீராய்ப்பு ஏற்பட்ட அடையாளம் உள்ளது.

உன்னாவ் மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சத்ய பிரகாஷ், பபங்கர்மாவ்வில் உள்ள நியூ ஜீவன் மருத்துவமனை முதல்கட்ட தர நிலையில் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை, மருத்துவமனை மூடப்பட்டு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :