கோடநாடு, சாத்தான்குளம் வழக்குகளின் நீதிபதிகள் இடமாற்றம் எழுப்பும் கேள்விகள்?

சட்டம் நீதி இந்தியா

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு முழுவதும் 55 மாவட்ட நீதிபதிகளை பணியிடமாற்றி சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில் கோடநாடு கொலை - கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதே போல சாத்தான்குளம் காவல் நிலைய ஜெயராஜ் - பெனிக்ஸ் கொலை வழக்கை விசாரித்து வந்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் முக்கியமான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகளை பணி இடமாற்றம் செய்வது வழக்கு விசாரணையில் தொய்வை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாத்தான்குளம் வழக்கின் விசாரணையை ஐந்து மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

அப்போது இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பத்மநாபன் ஆஜராகி கூடுதல் சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்பதால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

சாத்தான்குளம் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்களிடம் விசாரித்தபோது, `சாட்சியங்களின் விசாரணை தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீதிபதியை மாற்றாமல் இருந்திருக்கலாம் என்று தான் நாங்களும் விரும்புகிறோம். ஆனால் நீதித்துறையின் நடைமுறை அவ்வாறாக உள்ளது` என்றனர்.

வழக்கமான நடைமுறை

அரி பரந்தாமன்
படக்குறிப்பு, முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், `மாவட்ட நீதிபதிகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்வது வழக்கமான நடைமுறை. நீதிபதிகள் ஒரே இடத்தில் பணியிலிருந்தால் தனிப்பட்ட ஆதாயத்திற்காக செயல்படும் சாத்தியங்கள் அதிகரிக்கும் என்பதால் தான் இந்த பணியிட மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு இதற்கான பரிந்துரைகளை தயார் செய்வார்கள். நீதிபதிகள் மீது குற்றச்சாட்டு அல்லது தனிப்பட்ட காரணங்கள் போன்ற சூழல்கள் தவிர்த்து மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பணியிடமாற்றம் நிகழும்.

ஆனால் முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு பணியிடமாற்றத்திலிருந்து விதிவிலக்குகள் அளிக்கலாம். விசாரணை நீதிமன்றங்கள் தான் வழக்குகளின் சாட்சியங்களை முழுமையாக பதிவு செய்து விரிவான விசாரணை நடத்துவதால் நீதித்துறையின் முக்கியமான ஒரு அங்கமாக உள்ளது. இது போன்ற பணியிட மாற்றங்கள் நீதிபதிகள் கையாழும் வழக்குகளின் தன்மையைப் பொறுத்து மேற்கொள்ளப்படுவதில்லை,` என்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் ப.பா.மோகன், `முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் வழக்கு முடியும் வரை பணியிடம் மாற்றாமல் இருக்க வேண்டிய தேவை உள்ளது. முக்கியமான பல வழக்குகளுக்கு கடந்த காலங்களில் விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

விசாரணை நீதிபதி எவ்வாறு சாட்சியங்களை முழுமையாக விசாரிக்கிறார் என்பதை பொறுத்து தான் வழக்கின் போக்கும் முடிவும் அமையும். நீதிபதி சாட்சியங்களை புரிந்து கொள்வது முக்கியம். ஒரு வழக்கில் பல நீதிபதிகள் மாற்றப்படும் போது வழக்கின் வேகம் குறையும். புதிய நீதிபதி வழக்கின் தன்மையை புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கும்.

ஒரு நீதிபதி வழக்கிலிருந்து மாற்றப்பட்டால் விசாரணை முதலில் இருந்து நடைபெறாது. முந்தைய நீதிபதி விட்டுச் சென்ற கட்டத்திலிருந்து தொடரப்படும். இதனால் நீதிபதிகள் அப்போது வரை விசாரிக்கப்பட்ட சாட்சிகளை அறிந்திருக்க மாட்டார்கள்.

சாத்தான்குளம்
படக்குறிப்பு, சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் குடும்பத்தினர்

நீதித்துறையில் பணியிட மாற்றம் என்பது இயல்பான ஒன்று. மேலும் அனைத்து வழக்குகளுக்கும் நீதிபதிகளை மாற்றக்கூடாது என்று கோரிக்கை வைக்க முடியாது. அது நடைமுறை சாத்தியமில்லாதது. ஆனால் சாத்தான்குளம் போன்ற முக்கியமான வழக்குகளுக்கு விதிவிலக்கு வழங்கியிருக்கலாம்.

அரசு தரப்போ இல்லை காவல்துறை தரப்போ தான் இந்த கோரிக்கைகளை உயர்நீதிமன்றத்தில் முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்தார்களா என்று தெரியவில்லை,` என்றார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய எவிடென்ஸ் கதிர், `ஒரு வழக்கில் பல நீதிபதிகள் மாற்றப்படுவதும் வழக்கு முடிவுக்கு வர தாமதமாவதற்கு முக்கியமான காரணம். நீதிபதிகள் பணியிட மாற்றத்தின்போது அவர்களின் கையாழும் வழக்குகளின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புதிய நீதிபதி வழக்கு கோப்புகளின் மூலம் தான் சாட்சியங்களின் வாக்குமூலங்களை அறிவார். சில நேரங்களில் புதிதாக பொறுப்பேற்கும் நீதிபதிகள் விசாரணையை மீண்டும் நடத்திய உதாரணங்களும் உண்டு. விசாரணை நீதிமன்றங்களில் வழக்குகள் பல ஆண்டுகள் தேங்கிவிடுவதற்கு இது போன்ற பணியிட மாற்றங்களும் காரணம். முக்கியமான வழக்குகளை கையாழும் நீதிபதிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும். இதை ஒரு கொள்கை முடிவாக எடுக்க வேண்டும்,` என்றார்.

இது தொடர்பாக கருத்து பெற தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரை தொடர்பு கொண்டபோது அவருடைய இணைப்பை பெற முடியவில்லை. அவரின் கருத்து கிடைக்கப்பெற்றவுடன் இந்த செய்தியில் இணைக்கப்படும்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :