மு.க.ஸ்டாலின் - திராவிடச் சிந்தனை இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்கு கசப்பாக இருக்கிறது

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

(இலங்கை, இந்தியாவில் இன்றைய நாளின் நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியானவற்றில் கவனிக்க வேண்டிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.)

கருப்பையும் சிவப்பையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, பெரியார் திடலில் திராவிடர் கழக மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை குறித்து 'தினத்தந்தி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், "பெரியார் திடலுக்கு நான் வந்திருப்பது புதிதல்ல, என் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். அதிலும் நம்முடைய பாசமிகு ஆசிரியரை (திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி) பாராட்ட வந்திருக்கிறேன். அவரைப் பாராட்டுவது என்பது ஒரு இயக்கத்தின் தலைவரை, ஒரு கருத்தியலின் தலைவரை பாராட்டுவதாகும்" என தெரிவித்தார்.

மேலும், திராவிடச் சிந்தனை இன்று இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்கு கசப்பாக இருக்கிறது எனவும், 'திராவிட மாடல்' என்று சொல்வது சிலருக்கு எரிச்சலைத் தருகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கருப்பையும் சிவப்பையும் யாராலும் எந்தக் கொம்பனாலும் பிரிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

மேலும், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களைத் தீட்டினால், நியமனப் பதவியில் இருப்பவர்கள் அதைத் தடுப்பதா? மக்களை விட ஆளுநர்கள் அதிகாரம் பொருந்தியவர்கள் என்று நினைக்கிறார்களா? அப்படி ஒரு எண்ணம் அவர்கள் மனதில் இருந்தால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்" எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாக்களித்த மக்களுக்கு மின்தடையை திமுக அரசு பரிசாக வழங்கியிருக்கிறது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் மின்தடை புகார்

பட மூலாதாரம், TANGEDCO

படக்குறிப்பு, பிரதிநிதித்துவப் படம்

வாக்களித்த மக்களுக்கு மின்தடையை திமுக அரசு பரிசாக வழங்கியிருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாக, 'இந்து தமிழ் திசை' நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில், "கடந்த 10 ஆண்டுகளில் மின் மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த 11 மாதத்தில் வாக்களித்த மக்களுக்கு மின்தடையை பரிசாக வழங்கி உள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நாங்கள் பேசியபோது அதற்கு மின்சாரத்துறை அமைச்சர் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினார், ஆனால் தற்போது கோட்டைவிட்டார் என தெரிவித்துள்ளார்.

சித்திரைத் திருவிழாவுக்கு சரியாக ஏற்பாடு செய்யாததால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கூடுதலாக வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கூறினோம். ஆனால், இதுபோன்ற மக்கள் பிரச்னைக்கு தீர்வுகாண பேசும் போதெல்லாம் அரசு தொடர்ந்து மெத்தன போக்கு காட்டி வருகின்றது. இந்த 11 மாத கால ஆட்சியில் திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்'' என தெரிவித்துள்ளார்.

16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை

யூடியூப் சேனல்களுக்கு தடை

பட மூலாதாரம், Getty Images

தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகள் குறித்து தவறான தகவலை வெளியிட்டதாக, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் 6 சேனல்கள் உள்பட 16 யூடியூப் சேனல்களுக்கும், ஒரு ஃபேஸ்புக் கணக்குக்கும் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது என 'தினமணி' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவில் பதற்றத்தை உருவாக்கவும், சமூக நல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவிக்கவும், அமைதியைக் கெடுக்கவும் இந்த சேனல்கள் தவறான, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளியிட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகள், 2021-இன்படி, இதில் ஒரு சேனல்கூட சம்பந்தப்பட்ட தகவல்களை செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவில்லை. இந்தியாவிலிருந்து ஒளிபரப்பப்படும் யூடியூப் சேனலில் குறிப்பிட்ட ஒரு மதத்தினரை பயங்கரவாதிகளாகவும் வெவ்வேறு மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும் தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான யூடியூப் சேனல்கள், சமூகத்தில் பல்வேறு பிரிவினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், உறுதிப்படுத்தப்படாத செய்திகளையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் 6 யூடியூப் சேனல்கள் இந்திய ராணுவம், ஜம்மு - காஷ்மீர் விவகாரம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டது தெரியவந்ததால், அந்த சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இலங்கை ஜனாதிபதி வரும் 30ஆம் தேதிக்குள் பதவி விலகாவிட்டால் பாரிய மக்கள் போராட்டம்"

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம், Getty Images

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரும் 30 ஆம் தேதிக்குள் பதவி விலகாவிட்டால், பெருமளவிலான மக்களை கொழும்பில் திரட்டி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று பிரதான எதிர்க்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறாமல் பலத்த பாதுகாப்புடன் உள்ளார். இது வெட்கப்பட வேண்டியதொரு விடயமாகும்.

மக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் கண்டியிலிருந்து கொழும்புக்கான பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலதா மாளிகையில் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் அங்கிருந்து பேரணி ஆரம்பமாகும்.

நாளை கண்டியிலிருந்து மாவனெல்ல வரையும், 27 ஆம் திகதி மாவனெல்லையிலிருந்து கலிகமுவ வரையும், 28 ஆம் திகதி கலிகமுவையிலிருந்து தனோவிட வரையும், 29 ஆம் திகதி தனோவிடவிலிருந்து யக்கலவரையும், 30 ஆம் திகதி யக்கலையிலிருந்து பேலியகொட வரையும் பேரணி இடம்பெறவுள்ளது.

பேரணி நிறைவடைந்த மறுநாள் மே மாதம் முதலாம் திகதி கொழும்பில் பாரிய மக்கள் கூட்டம் இடம்பெறும். அதற்கமைய எமது பேரணி நிறைவடையும் நாள் வரை ஜனாதிபதிக்கு கால அவகாசத்தை வழங்குகின்றோம்.

ஏப். 30 ஆம் திகதியும் ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் முதலாம் திகதி பாரிய மக்கள் வெள்ளத்தை திரட்டி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம்" என்றார்.

ஐஎம்எஃப் - இலங்கை பேச்சுவார்த்தை: சீனா அதிருப்தி

கடன் மீள்கட்டமைப்பு குறித்து இலங்கை தற்போது எடுத்துள்ள முடிவானது எதிர்காலத்தில் இருதரப்பு கடன்களில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், கடன் மறுசீரமைப்பு கட்டமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான இலங்கையின் முடிவானது, இலங்கைக்கான 2.5 பில்லியன் டொலர் சீன நிதி உதவி குறித்த பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தியுள்ளது எனவும் இலங்கைக்கான சீனாவின் தூதுவர் சீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான செய்தியை 'தமிழ் மிரர்' நாளிதழ் வெளியிட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், "எவ்வாறு இருப்பினும், இலங்கை கேட்டுக்கொண்டதற்கு இணங்க சீனா ஒப்புக்கொண்டபடி பழைய கடன்களை தொடர்ந்து வழங்கும், இப்போதும் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் குறித்த கோரிக்கையை சீனா பரிசீலித்துக்கொண்டுள்ளது.

எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் சீனாவின் ஆதரவு தொடரும். சீனா, இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்" என தெரிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :