டோர்னியர் விமானம்: இந்தியாவிலேயே முதல் முதலாக பயணிகள் விமானம் தயாரித்து இயக்குவது மோதி அரசுதானா? உண்மை என்ன?

பட மூலாதாரம், KISHANREDDYBJP/ TWITTER
- எழுதியவர், ஜுகல் புரோஹித்
- பதவி, தவறான தகவல்களை வெளிப்படுத்தும் குழு, பிபிசி
கடந்த செவ்வாய்கிழமையன்று (ஏப்ரல் 12), இந்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானமான டோர்னியர் விமானம் தன் முதல் வணிகச் சேவையை தொடங்கியதாக ட்வீட் செய்தார்.
அதற்கு முந்தைய நாள் மத்திய அரசு வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில், ' அசாமில் உள்ள திப்ருகரில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் பாசிகாட் வரை செல்லும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹெச்ஏஎல் டோர்னியர் டூ-228 விமானத்தின் முதல் விமானம்', என்று அறிவித்தது. ' பொது போக்குவரத்துக்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தை இயக்கும் நிறுவனமாக அலையன்ஸ் ஏர் இருக்கும்', என்றும் அது மேலும் கூறியது.
அமைச்சர்கள் கூற்று
இதே போல், மத்திய மற்றும் மாநில அரசுகளைச் சேர்ந்த மற்ற அமைச்சர்களும் சமூக ஊடகங்களில் இதை பகிர்ந்தனர். கலாச்சார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டோர்னியர் 228 விமானம் இப்போது உடான் (UDAAN) திட்டத்தின் கீழ் இயங்குகிறது. இந்த உள்நாட்டு விமானம் நேற்று தனது முதல் பயணத்தை மேற்கொண்டது", என்று பதிவிட்டிருந்தார்.
இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு, "சிலர் 'மேக் இன் இந்தியா' பிரச்சாரத்தை கேலி செய்தனர். பிரதமர் நரேந்திரமோதியின் ஆத்மநிர்பர் இயக்கத்தின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர். இப்போது, ஹெச்.ஏ.எல். நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் தயாரான டோர்னியர் விமானம் புதிய இந்தியாவின் திறனைக் காட்டுகிறது", என்று பதிவிட்டுள்ளார்.
பல ஊடக நிறுவனங்களும் இந்த விவரணையுடன் செய்திகளை வெளியிட்டன.
இந்தக் கூற்றுகள் துல்லியமாக சரியானவையா?
இல்லை.
நாம் இதை இரண்டு கேள்விகளாக பிரித்துக்கொண்டு விடை தேடுவோம்.
முதல் கேள்வி: இந்தியாவிலேயே சொந்தமாக தயாரிக்கப்பட்டு பயணிகள் பயணித்த முதல் விமானம் எது?
இரண்டாவது கேள்வி: டோர்னியர் விமானம் குறித்த உண்மைகள் என்ன?
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் டோர்னியர் அல்ல. அது 'ஏ.வி.ஆர்.ஓ.' என்று அழைக்கப்பட்ட விமானம் என்கின்றன இந்திய அரசின் தரவுகள்.
1967ல் இந்தியாவில் முதல் விமானம் தயாரிப்பு
1967 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதியன்று, அரசு வெளியிட்ட அறிக்கையில், "இந்தியன் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷனின் விமான வழித்தடங்களில் இந்தியா தயாரித்த 14 ஏவிஆர்ஓ ரக விமானங்களில் முதல் விமானம், ஜூன் 28 ஆம் தேதியன்று கான்பூரில் நடந்த விழாவில் பாதுகாப்பு அமைச்சர் சர்தார் ஸ்வரன் சிங் சுற்றுலா மற்றும் பொது விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் டாக்டர் கரண் சிங்கிடம் ஒப்படைக்கப்படும். நாட்டில் தற்போது உருவாக்கப்படும் ஒரே பயணிகள் விமானம் ஏவிஆர்ஓ. ஒரு விமானத்தின் விலை 82.53 லட்சம் ரூபாய் ", என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், BAE SYSTEMS
உண்மையில் நிஜ உற்பத்தியாளரான பிஏஇ (BAE) சிஸ்டம்ஸ் அதன் ஏவிஆஓ (AVRO) விமானத்தைப் பற்றி கூறியது: ஹெஏஎல் தயாரித்த 89 விமானங்கள் உட்பட மொத்தம் 381 விமானங்கள் உருவாக்கப்பட்டன).
ஹெ ஏ எல் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள பல முயற்சிகள் எடுத்தும், அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அந்நிறுவனம் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆனால், இந்த விவகாரம் குறித்து அறிந்துள்ள ஓர் அரசு அதிகாரி, இதை உறுதி செய்தார். அவர், "இந்தியன் ஏர்லைன்ஸ் இந்த 'மேட் இன் இந்தியா' விமானங்களைப் பயன்படுத்தி குறிப்பிடத்தக்க அளவில் பெரிய சிவில் ஏர்லைன் ஆபரேட்டராக இருந்தது" என்றார். அவர் தன் பெயரை வெளியிடுவதற்கு சம்மதிக்கவில்லை.
நாங்கள் சுயாதீன நிபுணர்களையும் அணுகினோம்.
விமானப் போக்குவரத்து நிபுணர் கேப்டன் மோகன் ரங்கநாதன் பிபிசியிடம் கூறுகையில், இந்தியன் ஏர்லைன்ஸில் இருந்த காலத்தில் தானே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவிஆர்ஓ விமானங்களை ஓட்டியதாகத் தெரிவித்தார். இன்று அமைச்சர்கள் கூறுகின்ற விஷயங்கள் போலியானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அரசின் இந்த கூற்று தவறான கருத்தை விதைப்பதாக நான் கருதுகிறேன்" என்று இந்திய விமானிகள் கூட்டமைப்பு நிறுவனர் தலைவர் கேப்டன் மினு வாடியா குறிப்பிட்டார்.
அலையன்ஸ் ஏர், 'இந்தியாவில் தயாரித்த விமானங்களை பயணிகளை சுமந்து பறக்கும் இந்தியாவின் முதல் வணிக விமான நிறுவனமாகும்' என்று அரசின் வெளியீட்டில் முன்வைக்கப்பட்ட வாதத்தை கேப்டன் வாடியா மறுக்கிறார்.

பட மூலாதாரம், @kishanreddybjp/Twitter
மேலும் அவர் கூறுகையில், "சிவில் விமானமாகப் பதிவு செய்து, பயணச்சீட்டு மூலம் பயணிகளை ஏற்றிச் செல்லும் எந்த விமானமும் வணிக விமானம் என்று அழைக்கப்படுகிறது. பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானத்திற்கும் வணிக விமானத்திற்கும் வித்தியாசம் இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் இந்தியாவை தளமாகக் கொண்ட விமான நிறுவனங்களுக்காக ஏற்கனவே பறந்தன", என்று விளக்குகிறார்.
டோர்னியர் விமானம் பற்றிய உண்மைகள் என்ன?
கடந்தவாரம் அருணாசலப் பிரதேசத்துக்கு சேவையைத் தொடங்கிய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டோர்னியர் விமானம் பற்றிய உண்மையை ஆராய்வோம்.
பயணிகள் போக்குவரத்துக்கான விமானங்கள் உள்ளிட்ட டோர்னியர் விமானங்கள் இதற்கு முன்பே இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை பிபிசிக்கு கிடைத்த தரவுகள் காட்டுகின்றன.
அரசுக்கு சொந்தமான ஹெச் ஏ எல் நிறுவனம் 1980களில் இருந்து இந்த வகை விமானங்களை தயாரித்து வருகிறது. முந்தைய அரசு விமான சேவையான இந்தியன் ஏர்லைன்ஸ் இந்த விமானங்களில் பலவற்றை இயக்கியுள்ளது.
இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ வரலாற்றில் குறிப்பிட்டுள்ளபடி, வைஸ் அட்மிரல் (Vice Admiral ) ஜி.எம். ஹிராநந்தானி (ஓய்வு பெற்றவர்), "1980களின் முற்பகுதியில், விமானப்படை, கடற்படை, கடலோரக் காவல்படை, இந்தியன் ஏர்லைன்ஸின் ஃபீடர் விமான நிறுவனமான வாயுதூத் ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, எல்.டி.ஏ என்ற இலகுரக போக்குவரத்து விமானத்தை உள்நாட்டிலேயே தயாரிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது. அதற்கு பிரிட்டிஷ் விமானமான ஐலேன்டர், ஜெர்மானிய விமானமான டோர்னியர், இத்தாலிய விமானமான காசா, அமெரிக்காவின் ட்வின் ஓட்டர் ஆகிய நான்கு விமானங்கள் பரிசீலிக்கப்பட்டன. கடற்படை, கடலோரக் காவல்படை , வாயுதூத் ஆகியவை டோர்னியர் விமானமே பொருத்தமாக இருக்கும் என்று கருதின. ஹெச்ஏஎல் கான்பூர் பிரிவில் தயாரிப்பதற்கு டோர்னியர் வகை விமானங்களே தேர்வு செய்யப்பட்டன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, 1986 ஏப்ரல் மாதம், பாதுகாப்புத் துறை பத்திரிகையான வாயு ஏரோஸ்பேஸ் மற்றும் டிஃபென்ஸ் ரிவ்யூவின் பழைய இதழில் இருந்து ஒரு செய்தி துணுக்கு பிபிசிக்கு கிடைத்தது. இந்தியன் ஏர்லைன்ஸ் வாயுதூத் நிறுவனத்தில் டோர்னியர் விமானத்தை இணைத்தது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

பட மூலாதாரம், Pushpindar Singh, Vayu Aerospace & Defence Review
"கான்பூர் பிரிவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் தளமான கான்பூரில் உள்ள சக்கேரி விமானநிலையத்தில், 1986 ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி காலை ஹெச்.ஏ.எல் நிறுவனம் உருவாக்கிய ஐந்து டோர்னியர் 228 இலகுரக போக்குவரத்து விமானங்களில் முதல் விமானம், வாயுதூத் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது" என்று அந்த செய்தி கூறுகிறது.
அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் திட்ட ஒருங்கிணைப்பாளர் அங்கத் சிங் மேலும் கூறுகையில், "1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலே ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட டோர்னியரை கொண்டிருந்த நிலையில், 1986 ஆம் ஆண்டு முதல் ஹெச்.ஏ.எல் நிறுவனம் தயாரித்த டோர்னியர் (டூ 228), வாயுதூத் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது", என்று தெரிவிக்கிறார்.
கடந்த ஆண்டு, காலமான ராணுவ வரலாற்றாசிரியர் புஷ்பிந்தர் சிங் சோப்ராவின் தொகுப்பிலிருந்து, 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி குறிப்பிட்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். "இந்த விமானம் உட்பட, இந்த தொடர் ஹெச்.ஏ. எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது," என்று அங்கத் சிங் கூறினார்.

பட மூலாதாரம், Pushpindar Singh Collection
இருப்பினும், "இந்த குறிப்பிட்ட வகை (2022 ஏப்ரல் 12 ஆம் தேதியன்று பறக்கவிடப்பட்டது) - ஒரு விரிவான புதுப்பிப்பு. ஆனால், அது முதல் டோர்னியர் 228 கட்டமைப்பை போன்ற கட்டமைப்புடன் இருப்பது குறைவே. ஆம், இதுவே முதல் வருவாய் தரும் விமானம்".
1981 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வாயுதூத் தொடங்கப்பட்டது. இது சிறிய, அணுக முடியாத பகுதிகளுக்கு செல்லும் தன்மை உடையது. 1982 ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்த ஆவணத்தின்படி, வடகிழக்கு மாநிலங்கள் உட்பட 23 இடங்களில் செயல்பட வாயுதூத் அனுமதிக்கப்பட்டது. அங்கத் சிங் மேலும் கூறுகையில், "வாயுதூத் இந்தியன் ஏர்லைன்சில் இணைந்த பிறகு, அதன் விமானங்கள் கையகப்படுத்தப்பட்டு சிறிது காலத்திற்கு இயக்கப்பட்டன", என்று தெரிவித்தார். இந்தியாவில் வணிக விமானங்களில் பயன்படுத்தப்பட்ட முதல் 'மேட் இன் இந்தியா' விமானங்கள் பல தசாப்தங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டன என்பதே இதன் பொருள்.
பிபிசி தனக்கு கிடைத்த இந்த தகவல்களுடன் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்தை அணுகியது.

அதற்கு ஏப்ரல் 23ஆம் தேதி சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ட்விட்டர் பக்கம் வாயிலாக பதிலளித்தது.
டோர்னியர் விமானம் குறித்த தனது நிலைப்பாட்டை அமைச்சகம் தெளிவுபடுத்திய வேளையில், ஏவிஆர்ஓ விமானங்கள் குறித்து அது மௌனமாக இருந்தது. நாங்கள் நிரூபிப்பது போல், அவையே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம். அமைச்சகம் அழைத்துக் கொள்வது போல டோர்னியர் விமானம் முதல் பயணிகள் சேவை விமானம் அல்ல.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












