பிகாரில் 40 வருடங்களாக மகனாக நடித்தவருக்கு தண்டனை - என்ன வழக்கு?

பட மூலாதாரம், NIRAJ SAHAI/BBC
- எழுதியவர், நீரஜ் சஹாய்
- பதவி, பிபிசி இந்திக்காக, பாட்னாவில் இருந்து
பிகாரில் மகன் போல 40 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்து, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை விற்ற நபர் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டுள்ளார்.
பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாலந்தாவில் இருந்து அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அங்கு முதியவர் ஒருவரின் வீட்டில் அவரது மகனாக 41 ஆண்டுகளாக ஒருவர் வசித்து வந்தார். வாரிசு யார் என்பதை கண்டறிய நடந்த சட்டப்போராட்டத்தில் வழக்கு தொடுத்த தாயார் சில வருடங்களுக்கு முன்பு இறந்தபோதும், குற்றம்சாட்டப்பட்ட நபர் இப்போது சட்டப்படி தண்டிக்கப்பட்டுள்ளார்.
நம்பிக்கை துரோகம், ஒரு குடும்பத்தின் உணர்சிகளுடன் விளையாடியது மற்றும் சொத்துகளை அபகரிக்க பேராசையின் உச்சகட்டத்தை அடைந்தது போன்ற எல்லாமே இந்தக்கதையில் உள்ளன. ஒரு 'த்ரில்லர்' படத்தின் கதைக்கு சற்றும் சளைத்தது அல்ல என்பது போல இந்த நிகழ்வுகள் உள்ளன. ஆனாலும், இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபருக்கு விசாரணை நீதிமன்றம் மூன்றாண்டு சிறைத் தண்டனை மட்டுமே கிடைத்துள்ளது.
நாலந்தா மாவட்டத்தின் கூடுதல் தலைமை நீதியியல் மாஜிஸ்திரேட் மான்வேந்திர மிஸ்ராவின் நீதிமன்றம், சுமார் 16 வயதில் காணாமல் போன மகனின் இடத்தில் 41 ஆண்டுகள் வாழ்ந்து ஏமாற்றிய தயானந்த் கோசைனுக்கு மூன்றாண்டுகள் சிறைதண்டனையை வழங்கியுள்ளது.
விவகாரம் என்ன?
இந்த விவகாரம் நாலந்தா மாவட்டத்தின் சிலாவ் காவல் நிலையப் பகுதியின் மோர்காவில் இருந்து தொடங்கியது. கிராமத்தில் உள்ள சுமார் 150 பிக்கா (30 ஏக்கர்) நிலத்தின் உரிமையாளரான மறைந்த காமேஷ்வர் சிங்கின் சொத்து தொடர்பான வழக்கு இது.
அவரது ஒரே மகன் கன்ஹையா சிங் 1977ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வெழுதும்போது காணாமல் போனது அவரது வாழ்க்கையில் சோகமான திருப்புமுனையாக அமைந்தது. நீண்ட தேடலுக்குப்பிறகு, சிலாவ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மகன் திரும்புவான் என்ற நம்பிக்கையில் நான்கு ஆண்டுகள் கடந்தன.
சாமியார் போல வந்த கன்ஹையா

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையே, 1981இல் ஒரு இளம் சாது பக்கத்து கிராமமான கேஷோபூருக்கு வந்தார். அவர் தன்னை காணாமல் போன கன்ஹையா என்று அழைத்துக் கொண்டு அதை அதிகளவில் பிரபலப்படுத்தினார் என்று உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
சில நாட்களில் இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அப்போது தந்தை காமேஷ்வர் சிங் உயிருடன் இருந்தார். அந்த இளைஞன் மற்றும் சிலரின் வார்த்தைகளை நம்பி அந்த சாதுவை தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். ஆனால், அந்த இளைஞனை காமேஷ்வரின் மனைவி ராம்சகி தேவி மகனாக ஏற்க மறுத்தார். இருந்தபோதும், கிராம மக்களின் அழுத்தம் காரணமாக அமைதியாக இருந்து விட்டார்.
தயானந்த் கோசைன் என்ற அந்த இளைஞர், 'கன்ஹையா சிங்' போல வீட்டில் வாழத் தொடங்கினார். ஆனால் தாய் ராம்சகி தேவி அவர் மீது நம்பிக்கை வைக்கவில்லை.
இறுதியில் பொறுமை இழந்த ராம்சகி தேவி, 1981ஆம் ஆண்டு நவம்பரில், சிலாவ் காவல் நிலையத்தில் தயானந்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்தார். 1991ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பாட்னா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. இதற்கிடையே 1995இல், காமேஷ்வர் சிங் மற்றும் அவரது மனைவி ராம்சாகி தேவி காலமானார்கள்.
தாயின் மறைவுக்குப் பின் வழக்கை நடத்திய மகள்

பட மூலாதாரம், NEERAJ SAHAI/BBC
பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு, கன்ஹையா சிங்கின் சகோதரி வித்யா தேவி சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்தார். இது தொடர்பாக வித்யா தேவியின் தரப்பை அறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அதே சமயம், அவரது வழக்கறிஞர், சொத்து அபகரிப்புக்காக நடந்த மகன் நாடகமே இந்த விவகாரம் என வித்யாவின் வழக்கறிஞர் ராஜேஷ் குமார் கூறுகிறார்.
"காமேஷ்வர் சிங்கின் வீட்டில் வசித்த கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களில் தயானந்த், சுமார் 50-55 பிகா (10 முதல் 11 ஏக்கர்) நிலத்தை விற்றார். குழாய் போடுவதற்காக அவருக்கு இழப்பீடும் கிடைத்தது. அவர் திருமணமும் செய்து கொண்டார்," என்று ராஜேஷ் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
"கன்ஹையாவின் சொந்த தாயாரே இந்த வழக்கை பதிவு செய்துள்ளார். கன்ஹையாவின் தலையில் இருந்த காயத்தின் வடு, தயானந்தின் தலையில் இல்லை என்று ராம்சகி தேவி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் கன்ஹையா டிஎன்ஏ பரிசோதனைக்கும் தயாராகவில்லை," என்று தமது தரப்பு வாதத்தை விளக்கினார் ராஜேஷ் குமார்.
போலி சான்றிதழ்

பட மூலாதாரம், Getty Images
ஜமுய் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் ஒருவர், தயானந்த் கோசைன், பிரபு கோசைனின் மூன்றாவது மகன் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கில் தயானந்த் கோசைனின் மரண சான்றிதழ் என கூறப்பட்ட ஆவணத்தை அந்த நபர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தயானந்த் கோசைனின் மரணம் 1981இல் ஏற்பட்டது என்று அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த சான்றிதழ் 2014இல் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் அதன் மீது நடந்த விசாரணையில் சான்றிதழ் போலியானது என தெரியவந்தது.
இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து, பாட்னா உயர்நீதிமன்றம் வழியாக உச்ச நீதிமன்றத்தை அடைந்தது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கியது.
வாத பிரதிவாதங்களைக் கேட்ட நாலந்தா மாவட்ட நீதிமன்றம் கடைசியில், தயானந்த் கோசைனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்தது.
"2014 முதல், அரசுத் தரப்பிலிருந்து டிஎன்ஏ பரிசோதனைக்கு கோரிக்கை இருந்தது. 2020 இல் சோதனைக்கு மறுப்பு தெரிவித்து எழுத்துபூர்வமான பதிலை அவர் நீதிமன்றத்திடம் அளித்தார். மேலும் 1977 மற்றும் 1981 க்கு இடையில் தான் எங்கு வாழ்ந்தார் என்பதையும் குற்றம் சாட்டப்பட்டவரால் சொல்ல முடியவில்லை," என்று நாலந்தா மாவட்ட அரசு தரப்பு வழக்குரைஞர் ராஜேஷ் குமார் பதக் குறிப்பிட்டார்.
இது குறித்து பேசிய மறைந்த காமேஷ்வர் சிங்கின் மகள் வித்யா தேவி, "மகிழ்ச்சி அடைய வேண்டியவர்கள் காலமாகி விட்டனர். இந்த விவகாரம் வெளிவர வேண்டும் என்பதே அம்மாவின் விருப்பம். உண்மையை வெளிக்கொண்டு வர முயற்சித்தேன், அதன் பலன் இப்போது கண் முன்னே உள்ளது. எனக்கு எந்த வித பேராசையும் இல்லை," என்றார்.
நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, தயானந்த் கோசைன் உள்ளூர் ஊடகங்களுடனான உரையாடலின் போது, "இதெல்லாம் சொத்துக்காக செய்யப்படுகிறது. சகோதரி சொத்தின் மீது கண் வைத்திருக்கிறார். அதனால் இப்படி செய்கிறார்,"என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












