எந்த வழக்கில் கைதானாலும் உயிரியல் மாதிரிகளை எடுக்கலாம்: இந்திய அரசின் புதிய சட்டம் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
- பதவி, பிபிசி தமிழ்
குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா 2022, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இனி அரசிதழில் வெளியிடப்படும் நாள் முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும். தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்தே கடும் வாத விவாதங்களுக்கு உட்பட்டுவரும் இந்த சட்டம், சொல்வது என்ன?
குற்றவியல் நடைமுறை (அடையாள) சட்டம் 1920ல் திருத்தங்களை முன்மொழிந்து, 10 பிரிவுகளைக் கொண்டு இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முதல் இரண்டு பிரிவு நீங்கலாக மீதமிருக்கும் 8 பிரிவுகளை என்ன வென்று அறிந்துகொள்வது இந்த சட்டத்திருத்தத்தை புரிந்துகொள்ள வைக்கும். (முதல் 2 பிரிவுகள், இந்த சட்டத்தின் பெயர், அமலுக்கு வரும் நாள் மற்றும் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லாட்சி குறித்த வரையறைகளையும் வழங்குபவை)
என்ன சொல்கிறது இந்த சட்டம்?
1920 சட்டத்தின்படி, குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட நபர்களின் கைரேகைகள், பாத ரேகைகள் மற்றும் புகைப்படம் ஆகிய அடையாள மாதிரிகளை சேகரிப்பது வழக்கம்.
ஆனால், இந்த மசோதாவின்படி, கூடுதலாக,
- உயிரியல் மாதிரிகள் (ரத்தம், தலைமுடி, கருவிழிப்படலம்) மற்றும் அதன் ஆய்வுகள்,
- கையெழுத்து மற்றும் பழக்கங்களைப் பதிவு செய்தல்
- குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, பிரிவு 53, 53 A இல் சொல்லப்பட்டுள்ள அடையாளங்கள் (டி.என்.ஏ. சோதனைக்காக ரத்தம், விந்து, தலைமுடி, சளி, எச்சில் ஆகிய மாதிரிகளின் பகுப்பாய்வுகள்) ஆகிய அடையாளங்களையும் சேகரித்து வைக்க முடியும்.
யார் யாருடைய மாதிரிகள்:
1920 சட்டத்தின்படி, குறைந்தபட்சம் ஓராண்டு தண்டனை பெற்றவர்கள், விசாரணைக்காக அடையாளங்களை சேகரிக்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட நபர்கள் (கைது செய்யப்பட்ட நபர்) ஆகியோரது மாதிரிகளை மட்டுமே சேகரிக்க முடியும்.
ஆனால், புதிய திருத்தத்தின்படி,
- எந்தக் குற்றத்துக்காக தண்டனை பெற்றவராக இருந்தாலும், அவரது மாதிரிகளை சேகரிக்க முடியும். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றங்களைச் செய்தவர்கள் மற்றும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக இந்த உயிரியல் மாதிரிகளை சேகரிக்கலாம்.
- தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களின் அடையாள மாதிரிகளை சேகரிக்கலாம்.
- மேலும், நீதிபதி உத்தரவின் பேரில், யாரிடமிருந்தும் (கைது செய்யப்படாத நபராக இருந்தாலும்) விசாரணைக்காக மாதிரிகளை சேகரிக்கலாம்.

பட மூலாதாரம், Screengrab
யாருக்கு இந்த அதிகாரம் உண்டு?
1920 சட்டத்தின்படி, சார்-ஆய்வாளர் நிலை அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் இருக்ககூடிய காவல்துறை விசாரணை அதிகாரி இந்த மாதிரிகளை சேகரிப்பதற்கு கோரிக்கை வைக்கலாம்.
ஆனால், புதிய சட்டத்திருத்தத்தின்படி, குறைந்தபட்சம் தலைமைக் காவலர் நிலை அல்லது அதற்கு மேல் பொறுப்பில் இருக்ககூடிய காவல் நிலைய தலைமை அதிகாரிகள் இந்த மாதிரிகளை சேகரிப்பதற்கான கோரிக்கையை வைக்க முடியும்.
எத்தனை ஆண்டுகளுக்கு தரவுகள் இருக்கும்?
இப்படி சேகரிக்கப்பட்ட தரவுகள் 75 அண்டுகளுக்கு டிஜிட்டல் முறையில் சேகரித்து வைக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர் விடுதலை செய்யப்படும் பட்சத்தில், தரவுகள் அழிக்கப்படும். அதே சமயம், தரவுகளை தொடர்ந்து வைத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட முடியும்.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிடமிருந்து இந்தத் தரவுகளை சேமித்து, பாதுகாத்து, விசாரணைகளுக்காக பகிர்வது ஆகிய வேலைகளை தேசிய குற்ற ஆவணக்காப்பகம் மேற்கொள்ளும்.
இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலஙகளவையில் தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. குறிப்பாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பேசும்போது, "காலனிய ஆட்சியின்போது தேசியவாதிகளை ஒடுக்க கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தை, 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டுவந்திருக்கிறார்கள். அதுவும், தங்களை தேசியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இந்த அரசு, அதைவிட கடுமையாக இந்த சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், LSTV
இந்தச் சட்டம் மக்களின் அடிப்படை உரிமையான தனியுரிமைக்கு எதிராக இருக்கிறது என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக இந்திய முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இதனை அரசியல் சாசனத்துக்கு எதிரான சட்டம் என்று மாநிலங்களவையில் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, "இந்தியாவில் குற்றவியல் நடைமுறைகள் இதுவரை கடுமையாக பின்பற்றப்படவில்லை" என்று குறிப்பிட்டு பேசினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் முன்மொழிந்த திருத்தங்கள் ஏதும் ஏற்கப்படாமல் இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












