அதிமுக உட்கட்சி தேர்தல்: ஓ.பி.எஸ், இபிஎஸ் இடையே வாக்குவாதம் - நடந்தது என்ன?

அதிமுக உட்கட்சி தேர்தல்: ஓ.பி.எஸ், இபிஎஸ் இடையே வாக்குவாதம்

பட மூலாதாரம், Getty Images

இன்றைய (07.04.2022) நாளிதழ் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

அதிமுக உட்கட்சி தேர்தல்: ஓ.பி.எஸ், இபிஎஸ் இடையே வாக்குவாதம்

அதிமுக உட்கட்சித் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் இருதரப்பாகப் பிரிந்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து அதிமுக அமைப்புத் தேர்தல், டிசம்பர் 13 முதல் 23-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில், ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், மாநகராட்சி வட்ட நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் அடுத்த கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. அடுத்தகட்ட தேர்தல்கள் குறித்தும் செயற்குழு, பொதுக்குழு கூட்டுவது குறித்துமான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது.

அப்போது, மாவட்டச் செயலாளர்கள் பலர் தங்கள் ஆதரவாளர்களை நியமித்திருப்பதும் அதில் பெரும்பாலானோர் பழனிசாமி ஆதரவாளர்களாக இருப்பதும் ஓபிஎஸ் தரப்புக்கு தெரிந்ததால், நிர்வாகிகள் நியமனத்துக்கான ஒப்புதல் கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் கையொப்பமிட மறுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஓபிஎஸ், பழனிசாமி தரப்பு நிர்வாகிகள் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று தேனி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாகவும் பேச்சு எழுந்தது. கூட்டத்தில் நிர்வாகிகள் சிலர் அதை வலியுறுத்தியதால், பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில், துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஆர்.வைத்திலிங்கம் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே கோபமாக வெளியேறினார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருதரப்பையும் சில நிர்வாகிகள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய கூட்டம், இரவு 9 மணியை கடந்தும் தொடர்ந்தது," என அந்தச் செய்தி கூறுகிறது.

ஹிஜாப் விவகாரம்: அல் - கய்தா காணொளி குறித்து கர்நாடக அமைச்சர் பேசியது என்ன?

அல்-கய்தா காணொலியால் ஹிஜாப் விவகாரத்தில் சர்வதேச சரி உறுதி - கர்நாடக அமைச்சர்

பட மூலாதாரம், Getty Images

ஹிஜாப் குறித்து அல்-கய்தா கருத்து தெரிவித்திருப்பது சர்வதேச சதியை உறுதி செய்வதாக கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த செய்தியின்படி, கர்நாடக மாநிலத்தில் பிப்ரவரி மாதம் ஹிஜாப் விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, மாண்டியாவில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த இஸ்லாமிய மாணவி முஸ்கானுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது முஸ்கான் அல்லாஹூ அக்பர் என முழக்கமிட்டார். அங்கிருந்த ஆசிரியர்கள் அதில் தலையிட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அல்-கய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஆய்மான்-அல் ஜவாஹிரி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த காணொளியில் இஸ்லாமிய மாணவி முஸ்கானை அவர் பாராட்டியுள்ளது, கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பெங்களூருவில் புதன்கிழமை கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஹிஜாப் விவகாரத்தில் நடந்துவரும் சம்பவங்களை மாநில உள்துறை கூர்ந்து கண்காணித்து வருகிறது. ஹிஜாப் விவகாரத்தில் கண்ணுக்குப் புலப்படாத சிலரின் பங்கு இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன்.

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பளித்தபோது கர்நாடக உயர்நீதிமன்றமும் இதே கருத்தைக் கூறியிருந்தது. அல்-கய்தாவை சேர்ந்தவரின் காணொளி மூலம் இது உறுதியாகியுள்ளது. இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் உண்மை தெரியவரும்," எனத் தெரிவித்துள்ளார்.

அல்-கய்தா காணொலியால் ஹிஜாப் விவகாரத்தில் சர்வதேச சரி உறுதி - கர்நாடக அமைச்சர்

பட மூலாதாரம், Getty Images

வாலிபர்களை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது

மதுரையை அடுத்துள்ள அரசுப் பள்ளியில் பாடம் நடத்தும் 45 வயதான ஆசிரியையும் அவருக்கு உறுதுணையாக இருந்த 39 வயதான தொழிலதிபர் ஒருவரும், அந்த பெண்ணின் மகன் உட்பட 3 வாலிபர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டி காவல்துறை கைது செய்துள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த செய்தியில், "குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், தொழிலதிபரின் கைபேசியில் இருந்து டிஜிட்டல் ஆதாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

இருவரும் பத்தாண்டுகளுக்கு முன்னர், தங்கள் இணையர்களைப் பிரிந்து வாழத் தொடங்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். "அந்தப் பெண் தனது 19 வயது மகனுடன் வசித்து வந்தார். அவரது மகனைத் தவிர, அக்கம்பக்கத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பதின்பருவ இளைஞர்களும் அவர்களால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பதிவு செய்த சில ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் கசிந்து, வட்டாரத்தில் பரவத் தொடங்கிய பிறகே நாங்கள் இது குறித்து அறிந்தோம்," என்று காவல்துறையினர் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பாலியல் துஷ்பிரயோகம், ஆபாசமான உள்ளடக்கத்தைப் பரப்புதல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகியவற்றுக்காக மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு, ராஜபக்ஷ அரசு மீது இலங்கையில் ஆத்திரம்; தூக்கி எறிய துடிக்கும் போராட்டக்காரர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: