இலங்கை தமிழர்கள் அகதிகளா? சட்டவிரோத குடியேறிகளா? ஸ்டாலின், நரேந்திர மோதி சந்திப்பில் பேசியது என்ன?

பட மூலாதாரம், DMK
இலங்கையில் நிலவும் நெருக்கடி காரணமாக தமிழ்நாடு நோக்கி அகதியாக தஞ்சம் கோரி வரும் இலங்கை தமிழர்களை புலம் பெயர்ந்து வந்த தமிழர்களாக கருதி வசதிகளை வழங்க அனுமதி அளிக்கும்படி தமிழக அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்டாலின் பதில் அளித்தார்.
"பிரதமரை சந்தித்தபோது, கச்சத்தீவு மீன்பிடி உரிமை பிரச்னை, யுக்ரேனில் மருத்துவப் படிப்பு விடுபட்டு போய் தாய்நாடு திரும்பிய மாணவர்களுக்கு இங்கேயே படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும், மேகேதாட்டுவில் தடுப்பணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி கொடுக்கக் கூடாது, நரிக்குறவர்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
குறிப்பாக, நீட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்டமியற்றிய பிறகும் அது தொடர்பான கோப்புக்கு ஒப்புதல் வழங்காமலும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காமலும் ஆளுநர் தாமதப்படுத்தி வருகிறார். அது குறித்து பிரதமரிடம் பேசினேன். இந்திய நெடுஞ்சாலை, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்களையும் நான் சந்தித்து தமிழ்நாடு தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும்படி கேட்டுக் கொண்டேன்" என தெரிவித்தார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
டெல்லியில் உள்ள தமிழ் கல்விக் கழகத்தின் செயல்பாடுகளுக்காக தமிழ்நாடு அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றின் செயல்திறனில் விதிமுறைகள் மீறப்படுவதாக கூறப்படுவது பற்றி விசாரணை நடத்தப்படுமா?
நிச்சயமாக நடத்தப்படும். இந்த தகவலைக் கொண்டும் நாளைய தினம் டெல்லியில் உள்ள மாடல் பள்ளியை முதல்வர் கேஜ்ரிவாலுடன் சேர்ந்து பார்வையிட உள்ளேன். அப்போது இந்த தகவல் குறித்தும் அவருடன் பேசுவேன்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அங்குள்ள தமிழர்கள் மீண்டும் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் கோரி வருகிறார்கள். அவர்களை அகதிகளாக பதிவு செய்வதாக, சட்டவிரோதமாக குடியேறியவர்களாக பதிவு செய்வதா என்ற குழப்பம் உள்ளது. அது குறித்து மத்திய அரசு தரப்பு என்ன சொல்கிறது?
இது குறித்து பிரதமரிடம் அளித்த கோரிக்கையிலும் இடம்பெற்றுள்ளது. ஏற்கெனவே இலங்கையில் வந்தவர்கள், அகதிகளாகவே அழைக்கப்படுகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த அடையாளத்தை மாற்றி வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் என்று சொல்லி நாங்கள் அவர்களுக்காக நிதியை ஒதுக்கினோம். அவர்களுக்கான திட்டப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் மேலும் சில கேள்விகளை எழுப்பினர். இருப்பினும், அதில் இரு கேள்விகளை மட்டும் ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், "அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரை நாடாளுமன்ற மைய மண்படத்தில் பேச வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி நடத்துவதாக கூறினார்கள். இன்றைய சந்திப்பின்போது சோனியா காந்தி நாடாளுமன்றத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருப்பதாக தகவல் வந்தது. அதனால் அவரையும் சந்தித்தேன். எப்போது டெல்லிக்கு வந்தாலும் அவரை சந்திக்காமல் சென்றது கிடையாது. வரும் 2ஆம் தேதி சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவுக்கு வருவதாக கூறியிருக்கிறார்கள். அவர்கள் வரும்போது அங்கும் சந்திப்பேன்," என்று தெரிவித்தார்.
டெல்லியில் திமுக அலுவலக கட்டட திறப்பு விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறவிருக்கிறது. இதற்காக திமுக சார்பில் எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு திமுக தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். டெல்லி வாழ் தமிழர்கள் மற்றும் உள்ளூர் திமுகவினர் மு.க.ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கினர்.
இதையடுத்து, மு.க.ஸ்டாலின் சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று இரவு தங்கினார். இன்று காலையில் அவரை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக எம்.பி.க்கள் சந்தித்தனர். பிறகு பிரதமர் மோதியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் ஸ்டாலின் சந்தித்தார். சுமார் 20 நிமிடங்களுக்கு இந்த சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, டெல்லியில் திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை பிரதமர் மோதியிடம் ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து, தமிழகத்துக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நாளை என்ன திட்டம்?
டெல்லியில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல்வர் கேஜ்ரிவாலுடன் சேர்ந்து மொகல்லா கிளினிக், டெல்லி அரசின் கீழ் செயல்படும் மாடல் பள்ளியை பார்வையிட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அத்துடன் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது இல்லத்தில் காலை 10.30 மணியளவிலும் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை மாலை 4.30 மணியளவிலும் சந்திக்கவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












