நோயாளி இறந்ததால் கொலை வழக்கு: தற்கொலை செய்து கொண்ட ராஜஸ்தான் மருத்துவர் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Maridav
ராஜஸ்தான் மாநிலம் லால்சோட்டில், பெண் மருத்துவர் அர்ச்சனா ஷர்மா தற்கொலை செய்துகொண்டதையடுத்து, மாநிலம் முழுக்க மருத்துவர்களிடையே கொந்தளிப்பு எழுந்துள்ளது. இதன் விளைவாக ஏராளமான மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதேபோல, அரசு மருத்துவமனைகளிலும் இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
என்ன நடந்தது?
கடந்த திங்கள்கிழமை, ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள லால்சோட் மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவத்தின்போது உயிரிழந்தார். இதனையடுத்து கோபமடைந்த பெண்னின் உறவினர்கள், மருத்துவர்தான் இந்த மரணத்துக்குக் காரணம் என்று கூறி காவல்துறையில் புகாரளிக்க, மருத்துவர் அர்ச்சனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து, மருத்துவர் அர்ச்சனா மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரிடமிருந்து ஒரு தற்கொலைக் கடிதமும் கண்டெடுக்கப்பட்டது. அதில், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் யாரையும் கொல்லவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
மருத்துவர் அர்ச்சனா, அவரது கணவர் சுனித் உபாத்யாய ஆகிய இருவரும் இணைந்து நடத்திய மருத்துவமனையில்தான் இந்த சம்பவம் நடந்தது.
சுனித்தும் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதாவது, "இந்த பெண் நோயாளி உயிரிழப்பு விவகாரத்தில், கொலை வழக்குப் பதிவு செய்யும்படி அழுத்தம் தந்து, சிலர் தேவையில்லாத அரசியல் செய்துள்ளனர்." என்று புகாரளித்துள்ளார் சுனித்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் டாக்டர் அர்ச்சனாவுக்கு நீதிகேட்டு #Justice_For_Dr_Archana என்ற ஹேஷ்டேகின் கீழ் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
மருத்துவர்களுக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருவதாகவும், இப்படி ஒரு சம்பவம் நடந்தால்தான் அது கவனிக்கப்படுவதாகவும், சண்டிகர் பட்டமேற்படிப்பு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழக உறைவிட மருத்துவர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், ARD, Chandigarh
மேலும், "இந்த விவகாரத்தில் மருத்துவர் கொலைக்குற்றவாளி என்றால் எல்லா மருத்துவர்களும் கொலைக்குற்றவாளிகள்தான். ஏனெனில், எல்லா மருத்துவராலும், எல்லா நோயாளிகளையும் காப்பாற்ற முடியாது. எல்லோர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 302ன் கீழ் (கொலைக்குற்ற) வழக்குப் பதிவு செய்யுங்கள்" என்கிறது அந்த அறிக்கை.
அமைச்சர் தொகுதியில்
ராஜஸ்தான் மாநில, சுகாதாரத்துறை அமைச்சர் பர்சாதி லால் மீனாவின் தொகுதியில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதையும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியான நிலையில், இது தொடர்பாக மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியைப் பதிவிட்டிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அந்த ட்வீட்டில், "டாக்டர் அர்ச்சனா சர்மாவுக்கு நடந்த சம்பவம் மிகவும் சோகமானது. ஒவ்வொரு மருத்துவரும் உயிரைக் காக்கவே போராடுகிறார்கள். அடே சமயம், ஒரு நோயாளி உயிரிழந்தால், அதற்காக மருத்துவர் மீது குற்றம் சுமத்துவது முறையல்ல. மருத்துவர்கள் அச்சுறுத்தப்பட்டால், பிறகெப்படி அவர்கள் நம்பிக்கையுடன் தங்கள் பணியைத் தொடர முடியும்? இந்த முழு சம்பவமும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












