வேலூரில் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி: பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி நேற்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு அவர் ரசாயன திரவத்தை குடித்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவமனை தரப்பில் இருந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தனது பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறியதாகவும் அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
55 வயதாகும் அந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
முதல்கட்ட விசாரணையில் சிறுமிக்கு ஆசிரியர் தொடந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதும் தனது வீட்டுக்கு தனியாக வர சிறுமியை வற்புறுத்தியதாகவும் தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொள்ள முயன்றோம். அவர்கள் பேசுவதற்கு தயாராக இல்லை.
பாலியல் தொல்லை செயல்பாடுகளை தடுக்க என்ன செய்கிறது அரசு?
இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் மாவட்ட குழந்தைகள் நல கவுன்சில் தலைவர் சிவ கலைவாணனிடம் பிபிசி தமிழ் பேசியது.
"வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில், காவல்துறை உதவியுடன் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்பான விழிப்புணர்வை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறோம். ஆறாம் வகுப்பு மாணவர்கள் தொடங்கி அனைவருக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதன் விளைவாக தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் பெற்றோர்கள் மூலமாகவும் மாணவர்கள் மூலமாகவும் நேரடியாக புகார்கள் கிடைக்கப்பெறுகின்றன. அதன் அடிப்படையில் காவல் துறை மூலம் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்," என்று கூறினார்.
"அரசாங்கம் எத்தனை சட்டம் கொண்டு வந்தாலும் இது மாதிரியான பிரச்னை நடந்து கொண்டேதான் இருக்கிறது. மேலும், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு அதிக பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கிறது. இருப்பினும் சட்டம் குறித்து விழிப்புணர்வை முன்னெடுத்து கொண்டிருக்கிறோம். மாணவ மாணவியருக்கு மட்டுமல்லாது இனி சிறப்பு கவனம் செலுத்தி ஆசிரியர்களுக்கும் பாலியல் தொல்லைகளினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் சட்ட நடைமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்," என்று அவர் தெரிவித்தார்.
பொதுவாக ஆசிரியர்களிடம் பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு போதை பழக்கத்திற்கு அடிமையான ஆசிரியர்களை அந்த பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான விழிப்புணர்வையும் தொடர்ச்சியாக வழங்கி வருவதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் உமா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"சிறு குழந்தைகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். வரும் மாதத்திலிருந்து பள்ளிகளில் பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க உள்ளோம்," என்கிறார் உமா.

பட மூலாதாரம், Getty Images
"அனைத்து பள்ளிகளிலும் தன்னார்வலர்களை கொண்டு பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் பள்ளிகளை கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் 100 சதவீதம் முழுமையாக பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கிறோம்," என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












