You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்தாலும் அதையும் அகற்ற உத்தரவிடப்படும்"
இன்றைய (மார்ச் 26) நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அதையும் அகற்ற உத்தரவிடப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பலபட்டரை மாரியம்மன் கோயில் சார்பில் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம் நடைபெறுகிறது. இது தங்களது இடத்துக்குச் செல்லும் பாதையை மறைக்கும் வகையில் உள்ளதால், கட்டுமானத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று நாமக்கல்லைச் சேர்ந்த பாப்பாயி என்பவர் வழக்கு தொடுத்தார்.
இதை எதிர்த்து கோயில் நிர்வாகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை வெள்ளிக்கிழமையன்று விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ''பொது பாதையை கோயில் நிர்வாகம் மட்டுமின்றி யார் ஆக்கிரமித்தாலும் அதைத் தடுக்க வேண்டும். கோயில் என்ற பெயரில் பொது இடத்தை எளிதாக ஆக்கிரமித்து விடலாம் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. பொது இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டும்படி எந்தக் கடவுளும் கேட்பதில்லை.
அப்படி கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும் அதையும் அகற்ற உத்தரவிடப்படும். கடவுள் பெயரால் நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது.எனவே பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை 2 மாதங்களில் அப்புறப்படுத்த வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் பங்கேற்றால் சம்பளம் கிடையாது - இறையன்பு
வரும் மார்ச் 28, 29 ஆம் தேதிகளில் நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றால், சம்பளம் தரப்படாது என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளதாக தினந்தந்தி செய்தி இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
பல கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக சில மத்திய வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில அங்கீகரிக்கப்படாத சங்கங்களின் உறுப்பினர்கள் பங்கேற்க இருப்பதாக அரசுக்கு தகவல்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், "அரசு ஊழியர்கள் யாரும் வேலை நிறுத்த போராட்டத்திலோ அல்லது வேலை நிறுத்தம் செய்வதாக அச்சுறுத்தலோ செய்வது அல்லது ஆர்ப்பாட்டம் போன்ற எதிர்ப்பு செயல்பாடுகளில் பங்கேற்று, அதன் மூலம் அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டை பாதிப்படையச் செய்தால் அது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஒழுங்கு விதிகளை மீறியதாக அமைந்துவிடும்.
எனவே இதுகுறித்து உங்களின் பணியாளர்களுக்கு தகுந்த அறிவுரையை வழங்குங்கள். பணியாளர்கள் எவராவது அலுவலகத்திற்கு வராமல் அந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வந்தால், அவர் அலுவலகத்திற்கு வராமலிருந்ததை அங்கீகாரமற்றதாக கருத வேண்டும்.
மேலும், போராட்டத்தில் பங்கேற்றால், அரசு ஊழியர்களுக்கு "பணியில்லை, சம்பளமில்லை" என்ற கொள்கையின் அடிப்படையில் அந்த நாளுக்கான ஊதியத்தை வழங்கக் கூடாது. போராட்டம் அறிவிக்கப்பட்ட நாட்களில் மருத்துவ விடுப்பு தவிர தற்செயல் விடுப்பு உள்ளிட்ட எந்தவித விடுப்பிற்கும் அனுமதி அளிக்கக் கூடாது.
ஒவ்வொரு துறைத் தலைவர்களும் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் வரும் அனைத்து அலுவலகத்தில் உள்ள பணியாளர்களின் வருகை குறித்த தொகுப்பு அறிக்கையை 28 மற்றும் 29-ஆம் தேதிகளில், காலை 10.15 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.", என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் சைக்கிளில் ரோந்து சென்ற பெண் ஐ.பி.எஸ் அதிகாரி
ஐபிஎஸ் அதிகாரியும், சென்னை வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையருமான ஆர்.வி.ரம்யா பாரதி வியாழக்கிழமையன்று சைக்கிளில் சென்று இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டதாக 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
அதிகாலை 2.45 மணி முதல் 4.15 மணி வரை சைக்கிளில் ரோந்து பணி செய்து வடசென்னையில் கிட்டத்தட்ட 9 கி.மீ தூரம் பயணித்து காவல்துறை அதிகாரிகளை அவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இவரது படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ரம்யா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் டி.ஜி.பி. அவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன்." என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமையன்று , ரம்யா பாரதியை போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் நோடல் அதிகாரியாக சென்னை காவல்துறை ஆணையர் நியமித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்