You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட கொரியா: "கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது" - 10 முக்கிய தகவல்கள்
கண்டம் விட்டு கண்டம் பாயும் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணையை வியாழக்கிழமையன்று வெற்றிகரமாக சோதனை செய்ததாக அறிவித்துள்ளது வட கொரியா. இந்த ஏவுகணை சோதனையில் கவனிக்க வேண்டிய பத்து முக்கிய அம்சங்கள்:
- கடந்த 2020 ஆம் ஆண்டு ஹ்வாசாங் - 17 என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணையை வடகொரிய அரசு ஒரு ராணுவ அணிவகுப்பில் அறிமுகப்படுத்தியது. அதன் மிகப்பெரிய தோற்றம் ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
- இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அமெரிக்காவை சென்றடையும் அளவுக்கு அளவுக்கு திறன் கொண்டவை. இந்த ஏவுகணையை சோதனை செய்ய வட கொரியாவுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது.
- இந்த சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனது நேரடி கவனத்தில் நடத்தியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இது அணு ஆயுதங்களை ஏந்திச் செல்ல உதவும் ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த சோதனையை ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகளின் ராணுவங்கள் கவனித்தன. இந்த ஏவுகணை 3,728 மைல்கள் தூரம் சென்று, ஒரு மணி நேரத்திற்கு பின் ஜப்பானிய கடலில் விழுந்ததாக, ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இதற்கு முன், கடந்த 2017 ஆம் ஆண்டு, நடத்தப்பட்ட தொடர் ஏவுகணை சோதனைகளில், 'ஹ்வாசாங் 15' என்ற ஏவுகணை 2,800 மைல்கள் தூரம் செல்லக்கூடியதாக இருந்தது. இதன் தூரத்தை இந்த ஏவுகணை மீஞ்சியுள்ளது.
- அந்த சமயத்தில் ஹ்வாசாங் 15 ஏவுகணை வழக்கமான எறி பாதையில் இருந்து செலுத்தப்பட்டு இருந்தால், அது 8,080 மைல்கள் தூரம் பயணித்து இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இது அமெரிக்க கண்டத்தில் உள்ள எந்த பகுதியையும் சென்றடையும் என்றும் தெரிவித்தனர்.
- வட கொரியா அணு ஆயுதச் சக்தி கொண்ட நாடாக உருவாக, அந்நாட்டு அரசு தீவிரம் காட்டுகிறது. அதனால்தான், பொருளாதார நெருக்கடியை அந்நாடு சந்தித்து வரும் வேளையிலும், இந்த சோதனையை நடத்தி இருக்கிறது என்று தென் கொரிய தலைநகர் சோலிலிருந்து செய்திகளை வழங்கும் பிபிசி செய்தியாளர் லாரா பிக்கர் கூறுகிறார். மேலும், இது போன்ற சோதனைகள் இனியும் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்ததாக தெரிவித்திருந்தன. ஆனால் வட கொரியா அது செயற்கைக்கோள் சோதனை என தெரிவித்தது.ஐக்கிய நாடுகள், அமெரிக்கா மற்றும் வட கொரியாவின் அண்டை நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
- இது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறும் செயல் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. "அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக இந்த சோதனை உள்ளது", என்று ஐ.நா பாதுகாப்பு தலைவர் அண்டோனியா குடேரிஸ் கூறுகிறார்.
- 'இது அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால ஏற்பாடு' என்று வட கொரியா அதிபர் கிம் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்