உலகின் பெரிய இந்து கோவில் கட்ட ரூ.2.5 கோடி நிலத்தை கொடையாக அளித்த முஸ்லிம் குடும்பம்

சித்தரிப்புப் படம் - ஜெய்ப்பூர் பிர்லா மந்திர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் - ஜெய்ப்பூர் பிர்லா மந்திர்

(இன்றைய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து அளிக்கிறோம்.)

உலகின் மிகப்பெரிய இந்து கோவில் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை பாட்னாவை மையமாகக் கொண்ட மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால் செய்துவருகிறார் என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள கைத்வாலியா பகுதியில் "விராட் ராமாயண் மந்திர்" கோவில் அமையவுள்ளது. இது கம்போடியாவில் 215 அடி உயரமுள்ள உலகப் புகழ்பெற்ற மற்றும் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர் வாட் வளாகத்தை விட உயரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பீகாரில் உள்ள ஒரு முஸ்லீம் குடும்பம் இந்த கோவிலை கட்டுவதற்காக ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால் கூறுகையில் " நிலத்தை நன்கொடையாக வழங்கிய இஷ்தியாக் அகமது கான் குவஹாத்தியில் உள்ள கிழக்கு சம்பாரனைச் சேர்ந்த தொழிலதிபர்.

இவர் இந்த கோவில் கட்டுவதற்காக தனது குடும்பத்திற்கு சொந்தமான ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இது சமூக நல்லிணக்கம் மற்றும் இரு சமூகங்களுக்கு இடையிலான சகோதரத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு " என அவர் தெரிவித்தார் என்கிறது தினத்தந்தி செய்தி.

செய்யாறு அருகே ள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் ஆசிரியர் கைது

பாலியல் தொல்லை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாலியல் தொல்லை

செய்யாறு அருகே அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தினகரன் நாளிதழ் செய்தி வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பரிதிபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்(57). செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா சட்டுவந்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, 24 மற்றும் 20 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ராமலிங்கம் கடந்த சில நாட்களாக அவர் பணிபுரியும் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என மாணவியை மிரட்டி வந்தாராம். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் மாணவி, தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் ராமலிங்கத்திடம் விசாரணை நடத்தியதில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ராமலிங்கத்தை நேற்று கைது செய்து போளூர் சிறையில் அடைத்தனர் என்று தெரிவித்துள்ளது தினகரன் நாளிதழ்.

ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான வன்முறை: இனப்படுகொலை என்கிற அமெரிக்க அறிவிப்புக்கு வரவேற்பு

Getty images

பட மூலாதாரம், Getty Images

மியான்மரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடந்த வன்முறைத் தாக்குதல் ஒரு இனப்படுகொலை என்று அமெரிக்கா அறிவித்திருப்பதற்கு வங்க தேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிஞ்சா அகதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்று தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆன்டனி பிளிங்கன் வெளியிட்ட இந்த அறிவிப்பு குறித்து வங்க தேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் உற்சாகத்தை வெளியிட்டனர். இந்த மாவட்டம் சுமார் 10 லட்சம் ரோஹிஞ்சா அகதிகளுக்கு புகலிடமாக அமைந்துள்ளது என்று தி ஹிந்து தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

"இனப்படுகொலை என்று அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றிகள் பல" என்று குடுபாலாங் முகாமில் உள்ள 60 வயது சலாவுதீன் என்ற அகதியையும் அந்த செய்தி மேற்கோள் காட்டுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: