You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு பள்ளிகளில் ஜாதி விவரம் ஏன் ? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
இன்றைய (மார்ச் 15) நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாக தினத்தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,
''கல்வி மேலாண்மை தகவல் மையம் (எமிஸ்) இணையதளத்தின் மூலம் பள்ளிகளில் பதிவு செய்யப்படும் மாணவர் விவரங்களில் ஜாதி குறிப்பிடுவது குறித்து வெவ்வேறு விதமாக விமர்சனங்கள் எழுகிறது. முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும். அதுபோல என்ன சாதி என்று தெரிந்தால்தான், அதற்கான இடஒதுக்கீட்டு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பலன்கள் வழங்கமுடியும்.
மேலும் மத்திய-மாநில அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் அது ஏதுவாக இருக்கும். சாதியை சொல்லித்தான் ஆகவேண்டும் என்று மாணவர் சேர்க்கையின்போது பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தினால் அது தவறு. இது மாணவர்களின் விருப்பம்.
மாணவர்கள் சாதி தெரியும்போதுதான் அவர்கள் என்ன வகுப்பு? என்பதை அறியமுடியும். நாங்கள் வகுப்பைதான் எடுத்துக்கொள்கிறோமே தவிர, சாதியை பார்க்கவில்லை. அதேவேளை சமுதாய, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் தங்களுக்கான உரிமைகளை கேட்டு பெறுவதை யாராலும் தடுக்கமுடியாது.
தேவையற்ற குழப்பங்கள்
2013-ம் ஆண்டில் இருந்தே மாணவரின் சாதியை பதிவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. தி.மு.க. ஆட்சி அமைந்ததற்கு பிறகு விருப்பம் உள்ளவர்கள் சாதியை தெரிவிக்கலாம். விருப்பம் இல்லாதவர்களின் கருத்துகளையும் பதிவு செய்து வந்தோம்.
கல்வி மேலாண்மை தகவல் மையத்தை பொறுத்தவரை அதிலுள்ள 'டேட்டா பேஸ்' பதிவில் மாணவரின் சாதியும் இடம்பெற்றிருந்தது. இனி மாணவரின் சாதி அந்த பதிவில் இருக்கக்கூடாது என்று எண்ணினோம். மாணவரின் சாதி அவர் சார்ந்த பிரிவை அறிய மட்டுமே பதிவு செய்யப்படுகிறது.
எதிர்காலத்தில் ஒரு மாணவரை பற்றி தகவல் தேடும்போது அவர் என்ன வகுப்பு என்பது மட்டுமே வரவேண்டும், சாதி குறித்து தெரியக்கூடாது என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மே மாதத்தில் இருந்து சாதி என்பதே எந்த 'டேட்டா' பதிவுகளிலும் இடம்பெறக்கூடாது என்ற வகையில் செயல்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டில் இருந்து செயல்பாட்டில் இருந்து வந்த நடைமுறையை மாற்றியிருக்கிறோம்.
அதேபோல சுகாதாரத்துறை மூலம் மாணவிகள் உடல்நலம் சார்ந்த சில கேள்விகளை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அந்த கேள்விகளை மாணவர்களிடம் கேட்கலாமா? என்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. அதற்குள் இந்த தகவல் கசிந்ததின் காரணமாக தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டிருக்கிறது.
ஆராயாமல் செயல்படுத்த மாட்டோம்
எதையுமே நாங்கள் ஆராயாமல் செயல்படுத்துவது கிடையாது. எனவே எவை தேவையோ... அவை மட்டுமே அதில் இடம்பெறும். மாணவிகள் சங்கடப்படும் வகையில் கேள்விகள் இடம்பெறாது.
நேரடியாக கேட்கக்கூடாத கேள்விகளை சுற்றி வளைத்து கேட்கும் விதமாகவே நமது செயல்பாடு இருக்கும். எனவே கவலைப்பட தேவையில்லை. சங்கடப்படும்படியான கேள்விகள் நிச்சயம் இடம்பெறாது.
தமிழகத்தில் 54 பள்ளிகளில் தமிழ் வகுப்பே இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். அப்படி தெரியும்பட்சத்தில் தமிழ் வகுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். அதை வைத்துதான் அரசு வேலைவாய்ப்பாக இருந்தாலும் சரி, இடஒதுக்கீடு என்றாலும் சரி அதை பயன்படுத்த முடியும்.
அதேபோல கல்வி மேலாண்மை தகவல் மையத்தின் 'டேட்டா என்ட்ரி' பதிவு பணிகளில் சில இடங்களில் 'சர்வர்' கோளாறு பிரச்சினை இருக்கிறது. அந்த பிரச்சினையை சரிசெய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்,'' என்று தினத் தந்தி செய்தியில் உள்ளது.
தேசிய பங்கு சந்தை முன்னாள் தலைவர் சித்ராவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
தேசிய பங்கு சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல். வீட்டு உணவிற்கு அனுமதியில்லை என்று 'தி இந்து தமிழ் திசை' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தியில், ''தேசிய பங்குச் சந்தையின் தலைவராக இருந்தபோது சித்ரா ராமகிருஷ்ணன் (59), இமயமலை யோகி-யின் அறிவுரைப்படி செயல்பட்டதாக டெல்லியைச் சேர்ந்த பங்குச் சந்தை தரகர் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் 4 ஆண்டு விசாரணைக்குப் பிறகு சித்ரா ராமகிருஷ்ணனை சிபிஐ கைது செய்தது. முன்னதாக என்எஸ்இ-யில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையிலும் அவரை சிபிஐ கைது செய்தது.
தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு சித்ரா ராமகிருஷ்ணன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரை ஜாமீனில் விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது.
விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும், சித்ரா ராமகிருஷ்ணன் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் எனவும், அவரை ஜாமீனில் விடுவிப்பதுவிசாரணையை பாதிக்கும் என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. வீட்டு உணவு சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
இருப்பினும் பகவத் கீதை, அனுமன் சாலிசா மற்றும் வழிபாட்டு புத்தகங்களை எடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இவ்வாறு பிடிஐ செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி தி இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
கனடாவில் இந்தியர்கள் 5 பேர் உயிரிழப்பு - ஏன் ?
கனடாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி, 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழ் இணைய தள பக்கத்தில் வெளியாகியுள்ள செய்தியில், ''வட அமெரிக்க நாடான கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில், கடந்த 12ம் தேதி அதிகாலை, சில இந்திய மாணவர்கள் வேன் ஒன்றில் பயணித்துள்ளனர். எதிரில் வந்த லாரி மீது, வேன் வேகமாக மோதியது. இந்த விபத்தில், ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரண்பால் சிங், மோஹித் சவுகான், பவன் குமார் ஆகிய 5 இந்திய மாணவர்கள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்கள், 25 வயதுக்கு உட்பட்டவர்கள். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 2 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: ;'கனடாவில் நடந்த சாலை விபத்தில், ஐந்து இந்திய மாணவர்கள் உயிரிழந்த செய்தி, மிகுந்த வேதனை அளித்துள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும், கனடாவில் உள்ள இந்திய துாதரகம் செய்யும்' .இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.'' என்று தினமலர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- இலங்கை பொருளாதார நெருக்கடி - அவதிப்படும் இந்திய வம்சாவளி தமிழர்கள் - கள நிலவரம்
- என். சந்திரசேகரன்: தமிழன், விவசாயி, அரசுப்பள்ளி மாணவர் - இன்று பெரும் தொழில் தலைவர் - 12 தகவல்கள்
- நடிகர் அஜித் மீது உருவக் கேலியா? பதில் கொடுத்த மேலாளர் - நடந்தது என்ன?
- ஸ்டாலின் உத்தரவுக்குக் கட்டுப்படாத திமுகவினர்; கொதிக்கும் கூட்டணிக் கட்சியினர்
- பாலுறவு இன்பத்தை 40 வயதுக்குப் பிறகு அதிகரிப்பது எப்படி? - நிபுணரின் விளக்கம்
- யுக்ரேன் உள்ள வீரர்களுக்காக சீனாவிடம் ஆயுதம் கேட்டோமா? ரஷ்யா விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்