You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
என். சந்திரசேகரன்: தமிழர், விவசாயி, அரசுப்பள்ளி மாணவர் - இன்று பெரு நிறுவன தலைவர் - 12 தகவல்கள்
என். சந்திரசேகரன் டாடா சன்ஸ் குழுமத் தலைவராக இருப்பவர். தற்போது ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் குழுமம் வாங்கிய பிறகு அந்த விமான நிறுவனத்தின் தலைவராகவும் மார்ச் 14ஆம் தேதி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில பிறந்தவர் என். சந்திரசேகரன். தற்போது மும்பையில் மனைவி லலிதா, மகன் பிரணவுடன் வசித்து வருகிறார். இவரைப் பற்றிய முக்கிய தகவல்களை இங்கே வழங்குகிறோம்.
1. சந்திரசேகரனுக்கு 59 வயது. 1987ஆம் ஆண்டு முதல் டாடா குழுமத்தில் பணியாற்றி வருகிறார். இவரை நன்கு அறிந்தவர்கள் "சந்திரா" என அழைக்கிறார்கள்.
2. தமிழ்நாட்டின் நாமக்கல்லில் உள்ள மோகனூரைச் சேர்ந்த இவர், விவசாய குடும்பப் பின்னணியைக் கொண்டவர்.
3. இவரது தந்தை ஸ்ரீநிவாசன் வழக்கறிஞர். தாத்தா காலத்துக்குப் பிறகு குடும்ப சொத்துகளை கவனித்து வந்தார். தந்தையுடன் தங்களுக்கு சொந்தமான 15 ஏக்கர் தோப்புக்குச் சென்று வாழை, கரும்பு, நெல் சாகுபடி பணிகளில் இவரது குடும்பம் ஈடுபடும்.
4. வாழ்க்கையில் உயர வேண்டுமானால், சிக்கனம், நேர்மை மற்றும் விடாமுயற்சியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தனது தந்தை சொல்லிக் கொடுத்த மூன்று தாரக மந்திரங்களதான் தன் வாழ்வின் வெற்றிக்கு ரகசியம் என்று அடிக்கடி கூறுவார் சந்திரசேகரன் என்று அவருடன் பணியாற்றியவர்கள் நினைவுகூர்கின்றனர்.
5. தீவிர புகைப்படக்கலைஞர், மாரத்தான் ஓட்டத்தில் ஆர்வம் மிக்கவர். பழைய பாடல்கள் கேட்பதில் இவருக்கு அதிக பிரியம் உண்டு. கிரிக்கெட்டிலும் ஈடுபாடு மிக்கவர். ஆம்ஸ்டர்டாம், பாஸ்டன், பெர்லின், நியூயார்க், டோக்யோ, மும்பை ஆகிய நகரங்களில் நடந்த மாரத்தான் ஓட்டங்களில் இவர் பங்கெடுத்துள்ளார்.
6. பள்ளிக்கல்வியை மோகனூர் அரசு பள்ளியிலும் மேல்நிலை கல்வியை ஆங்கில வழி கல்வியிலும் படித்தவர். திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பிஎஸ்சி, கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் எம்சிஏ படிப்பை முடித்தார். ஆரம்ப கல்வியை மேற்கொண்டபோது பள்ளி செல்ல தினமும் 3 கி.மீ தூரத்துக்கு சந்திரசேகரன் தனது சகேதரர்களுடன் நடந்தே செல்வார்.
7. தனது 46ஆவது வயதில் டாடா குழுமத்தின் இளம் தலைமை செயல் அதிகாரி ஆனார். பதவியேற்றவுடன் டாடா குழுமத்தை 23 கிளைகளாக பிரித்து அவற்றின் தலைமை நிர்வாகிகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்து வழங்கினார்.
8. ஞாபகத்திறன் அதிகம் மிக்கவராக அறியப்படும் சந்திரசேகரன், தமது நிறுவனத்தில் குறைந்தது 5,000 பேரின் முதல் பெயர்களையாவது அறிந்து வைத்திருப்பார் என அவருடன் பணியாற்றும் ஊழியர்கள் கூறுகின்றனர்.
9. டாடா குழும தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது தேசிய மென்பொருள் சேவை நிறுவனங்களின் சங்கமான நாஸ்காமில் 2012 முதல் 2013வரை தலைவராக சந்திரசேகரன் இருந்துள்ளார்.
10. தனக்கு பிடித்தமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை பெயர் சொல்லி அழைக்காமல் பாஸ், பாஸ் என்றே அழைப்பது சந்திரசேகரனின் வழக்கம்.
11. டாடா குழுமத்தில் சந்திரசேகரன் மட்டுமின்றி அவரது சகோதரர் என் கணபதி சுப்பிரமணியமும் உயர் பொறுப்பில் இருக்கிறார். இவர் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி (சிஓஓ) ஆக இருக்கிறார். 39 ஆண்டுகளாக இவர் டாடா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
12. சந்திரசேகரனின் மற்றொரு சகோதரர் என். ஸ்ரீனிவாசன், தமிழ்நாட்டின் பெரும் தொழில் நிறுவனமான முருகப்பா குழுமத்தின் நிதிப்பிரிவு இயக்குநர் ஆக இருக்கிறார். பட்டய கணக்காளரான ஸ்ரீநிவாசன், கார்பரெட் நிதி விவகாரங்களில் நிபுணத்துவம் மிக்கவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்