You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேயர், துணை மேயர் பதவிகள்: எந்த அடிப்படையில் தேர்வு நடக்கிறது? திமுக தலைமையின் கணக்கு என்ன?
- எழுதியவர், ஆ.விஜய் ஆனந்த்
- பதவி, பிபிசி தமிழ்
வார்டு உறுப்பினராக போட்டியிட சீட் கேட்கும்போது இருந்த பதற்றத்தைவிட, "தங்களுக்கு மேயர் பதவி கிடைக்குமா?" என்ற பதற்றத்துடன் அறிவாலயத்தைச் சுற்றி வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாக, திமுக வட்டாரத்தில் நகைச்சுவையாகப் பேசப்பட்டு வருகிறது.
"மேயர் தேர்வு என்பதை மிக முக்கியமான வேலையாக திமுக தலைமை பார்க்கிறது. அதற்கேற்ப பலதரப்பட்ட விசாரணைகள் நடந்து வருகின்றன" என்கின்றனர் திமுக வட்டாரத்தில்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநிலத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. இதில், சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி உள்பட பெரும்பாலான மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை தன்வசம் வைத்துக் கொள்ளவே திமுக தலைமை விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்ப மேயர் தேர்வு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
எப்படி நடக்கிறது மேயர் தேர்வு?
சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர், கரூர், கும்பகோணம், கடலூர், சிவகாசி, திண்டுக்கல், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில் என 21 மாநகராட்சிகளில் மேயராக வரப் போகிறவர்களில் சிலர் புதியவர்களாகவும் அதே நேரம் நிர்வாகத்தில் திறன் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என திமுக தலைமை நினைப்பதாக அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.
அதேநேரம், "மாநகராட்சிகளைப் பொறுத்து இந்தக் கணக்கில் சற்று மாற்றம் வரலாம்" என்றொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. "சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளின் மேயர் பதவியை இளம் வயதினருக்குக் கொடுக்க வேண்டும்" என்றொரு கருத்தும் கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சிபாரிசுகள் ஒருபுறம் இருந்தாலும், மாநகராட்சிகளில் இருந்து மேயர் பதவிக்குத் தகுதியான மூன்று பேரின் பெயர்களை திமுக தலைமைக் கழகம் கேட்டுள்ளது. ஏற்கெனவே கட்சித் தலைமையிடம் மேயர் பதவிக்கான பட்டியல் தயார் நிலையில் இருந்தாலும் மாவட்டத்தில் இருந்து வரும் பட்டியலை சரிபார்த்து முடிவெடுக்க உள்ளதாகவும் திமுகவின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரிடம் இருந்து வரும் பட்டியலை காவல்துறையில் ஒப்படைத்து விசாரணை நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணையில் மேயர் ரேஸில் உள்ளவர்களின் பின்னணி, அவர்களின் கடந்தகால வரலாறு, வழக்குகள், ஊழல் பிரச்னைகள், கவுன்சிலராக பதவி வகித்த காலத்தில் செய்த தவறுகள், குடும்பத்தில் உள்ளவர்களின் பின்னணி, வேறு கட்சிகளின் நிர்வாகிகளோடு உள்ள தொடர்பு என அனைத்தையும் அலசி ஆராயும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. காவல்துறை விசாரணையில் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாக வைத்து மேயர், துணை மேயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வேட்பாளர் யார் என்ற பட்டியல் வந்ததும் மீண்டும் மாவட்ட செயலாளர், அமைச்சர்கள் ஆகியோருடன் அமர்ந்து பேசும் பணி இறுதியாக நடக்கும். இதில், கோவை உள்பட சில மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர்கள் குறிப்பிடும் நபர்களுக்கு மேயர் பதவி கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. அடுத்த ஐந்து நாள்களில் மேயர், துணை மேயர் பதவிகளுக்கான பணிகள் நிறைவடைய உள்ளன'' என, திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"மேயர், துணை மேயர் தேர்வில் முக்கியமாகப் பார்க்கப்படுவது என்ன?'' என திமுக செய்தித் தொடர்பாளரும் தலைமைக் கழக வழக்கறிஞருமான சூர்யா வெற்றிகொண்டானிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். "மாநகராட்சிகளில் மாமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்களின் பின்னணி, அவர்களின் கட்சிப் பணி அனுபவங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியும் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக்குப் பிறகும் முடிவு செய்யப்படலாம். இந்த விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கவுன்சிலர்கள் அனைவரும் கட்டுப்படுவார்கள்'' என்கிறார்.
பிற செய்திகள்:
- யுக்ரேனில் இனி பாதுகாப்பான இடம் ஒன்று இல்லை: பிபிசி யுக்ரேன் சேவை ஆசிரியர்
- நகர்ப்புற உள்ளாட்சி: பா.ஜ.க. முன்னேறியுள்ளதா? அவர்கள் கொண்டாட காரணம் உள்ளதா?
- யுக்ரேனில் தவிக்கும் விழுப்புரம் மாணவர்: "குண்டுவெடிப்பில் நிலம் அதிர்வதை உணர முடிகிறது"
- யுக்ரேன் தலைநகரைப் பிடிக்க ரஷ்யப் படைகள் யுத்தம் - அண்டை நாடுகளில் தஞ்சமடையும் மக்கள்
- அணியாகப் போட்டியிட்டு திமுக, அதிமுகவை வீழ்த்தி பேரூராட்சியை கைப்பற்றிய சுயேச்சைகள்
- முதல் மனைவி சம்மதத்துடன் திருமணம் செய்திருந்தாலும் 2-வது மனைவிக்கு பணப்பலன் பெற உரிமை இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்