You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமில் கோவில்பட்டி விவசாயி மகன் அரவிந்த்
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய ஜுனியர் ஹாக்கி அணிக்கான பயிற்சி முகாம் பெங்களூருவில் கடந்த 14ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சேர்ந்த நிஷிதேவ்அருள், அரவிந்த், கவியரசன், திலீபன், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என தமிழ்நாட்டில் இருந்து 5 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இவர்களில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டில் அருகே திட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜ் - சீனியம்மாள் தம்பதியின் மூத்த மகன் அரவிந்தும் ஒருவர். அரவிந்தின் தந்தை விஜயராஜ் விவசாய கூலித் தொழிலாளியாக உள்ளார். அவரது தாய் சீனியம்மாள் தீப்பெட்டி ஆலையில் வேலை செய்கிறார். அரவிந்த் இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு சென்றது, எங்களது பொருளாதார நிலையைக் கடந்து, பெருமிதமாக இருக்கிறது என்கின்றனர் அவரது பெற்றோர்.
சாதனையால் மறைந்த கஷ்டங்கள்
இது குறித்து அரவிந்தின் தாயார் சீனியம்மாள் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''எனது கணவர் கிடைக்கும் விவசாய வேலைக்கு செல்வார்.
நான் விவசாய காட்டு வேலைக்கும், தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு வேலைக்கும் செல்கிறேன். இந்த வருமானத்தில்தான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். அரவிந்த் 6ம் வகுப்பு படிக்கும் போது ஹாக்கி விளையாட ஆரம்பித்தான். அவன் விளையாடுவதைப் பார்த்து, நல்லா விளையாடுகிறான். விடாமல், ஊக்கப்படுத்துங்கள் என்று பலரும் சொன்னார்கள்.
அரவிந்திற்கும் ஹாக்கி மீதுதான் ஆர்வம் அதிகம் இருந்தது. ஆகையால், பிள்ளையின் ஆசையை நிறைவேற்ற, எங்களது குடும்ப சூழ்நிலைக்கு மீறி எங்களால் முடிந்ததை செய்கிறோம். பல நேரங்களில் பயிற்சி மற்றும் உபகரணங்கள் வாங்க பணம் கேட்கும் போது, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி கொடுப்போம்.
மூத்த வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் உதவுகின்றனர். அவர்களால், சென்னை ஓய்.எம்.சி.ஏ. ராமநாதபுரம் விளையாட்டு விடுதியில் தங்கி, பள்ளி படிப்பினை முடித்தான். கடந்த ஆண்டு முதல், கோவில்பட்டி ஹாக்கி விளையாட்டு விடுதியில் தங்கி, பயிற்சி பெற்று வருகிறான். கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறான்.
உள்ளுர் போட்டிகளில் விளையாடி பாராட்டு பெற்றதோடு, கடந்த ஆண்டு, கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு அணியில் அரவிந்த் விளையாடினான்.
இதை நேரில் பார்த்தும் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அதைப் பார்த்து கண்ணீர் வந்துவிட்டது. இப்போது இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளான். இதைப் பார்த்து, நாங்கள் பட்ட எல்லா கஷ்டமும் மறந்து, ரொம்ப பெருமையா இருக்கு. நம்பிக்கையாவும் இருக்கு,'' என்கிறார் சீனியம்மாள்.
அரவிந்தின் தம்பி மணிமாறனும் ஹாக்கி வீரராக உள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் மணிமாறன் திருநெல்வேலி அரசு விளையாட்டு விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
பார்வையாளராக தொடங்கிய ஹாக்கி பயணம்
கோவில்பட்டியில் நடைபெறும் ஹாக்கி போட்டிகளை பார்வையாளர் பகுதியில் இருந்து, ஒரு ரசிகராக பார்த்து, தானும் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது என்கிறார் அரவிந்த்.
அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''பெற்றோர் மற்றும் ஊரில் உள்ள மூத்த வீரர்கள் தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகின்றனர். இதனால் எனது ஹாக்கி விளையாட்டிற்கு களமும் வாய்ப்பும் கிடைக்கிறது. பள்ளியில் படிக்கும் போது சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள அரசு விளையாட்டு மாணவர் விடுதியில் தங்கி படித்து, ஹாக்கி பயிற்சி பெற்றேன். தொடர்ந்து, கோவில்பட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு மாணவர் விடுதியில், கடந்த ஓராண்டாக பயிற்சி பெற்றுவருகிறேன். அங்கு கொடுக்கப்பட்ட பயிற்சி என் திறனை மேம்படுத்தியது மட்டுமின்றி, தமிழ்நாடு அணியிலும் இடம் கிடைக்க காரணமாக இருந்தது.
குறிப்பாக பயிற்சியாளர்கள் முத்துக்குமார், தினேஷ் ஆகியோரின் பயிற்சியால், இன்றைக்கு இந்திய பயிற்சி முகாமில் இடம் பெற்றுள்ளேன். ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. அம்மா, அப்பா இருவரும் ரொம்ப கஷ்டப்பட்டு எனக்கு பணம் அனுப்பினர். அவர்களின் உழைப்பும் ஊக்கமும் சாதித்தே ஆக வேண்டும் என்கிற உத்வேகத்தை ஏற்படுத்தியது. வரும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஹாக்கி அணியில் விளையாட வேண்டும் என்பது தான் எனது இலக்கு.''என்கிறார் அரவிந்த் உற்சாகத்துடன்.
கோவில்பட்டி - ஹாக்கிப்பட்டி ஆகியது எப்படி?
கடந்த 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக மீண்டும் இந்திய அணி மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டி வீரர்கள் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இது இளம் தலைமுறைக்கு உத்வேகத்தை அளித்துள்ளதாக மூத்த வீரர்கள், பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் மற்றும் கடையநல்லூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர், குரு சித்ர சண்முகபாரதி பிபிசி தமிழிடம் கூறுகையில், ''இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியின் வரலாற்றில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு தனி இடம் உண்டு. சுமார் நூறாண்டுகளாக கோவில்பட்டி நகரில் ஹாக்கி விளையாடப்படுகிறது. இங்கு ஊருக்கு ஒரு ஹாக்கி கிளப் இருக்கிறது. ஒவ்வொரு கிளப் வீரர்களும் தேசிய, சர்வதேச அளவிலான திறன் பெற்ற வீரர்களாக இருப்பார்கள். அடிக்கடி போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
இந்திய ஹாக்கியின் தந்தை தயான்சந்த் 1952ம் ஆண்டும் கோவில்பட்டிக்கு வந்து, வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். முன்னாள் கேப்டன் தன்ராஜ்பிள்ளை, முகது ரியாஸ் உள்ளிட்ட பல சர்வதேச வீரர்கள் இங்கு வருகை தந்துள்ளனர். வீரர்களின் ஆர்வம் மற்றும் திறமையினால், கோவில்பட்டி நகரம் ஹாக்கிபட்டி என்றும் விளையாட்டு வீரர்களால் அழைக்கப்படுகிறது.
இதை நிரூபிக்கும் வகையில் உலக அளவில் உள்ள ஹாக்கி கிளப்கள், இந்திய ஹாக்கி அணி மற்றும் தேசிய அளவில் புகழ்பெற்ற ஹாக்கி அணிகளில் கோவில்பட்டி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
களிமண் மைதானத்தில் இருந்து செயற்கை புல்வெளிக்கு ஹாக்கி மாறியதும் கோவில்பட்டியில் இருந்து தேசிய, சர்வதேச ஹாக்கி அணிக்கு வீரர்கள் செல்வது குறைந்து, ஒரு தொய்வு ஏற்பட்டது. இப்போது மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. ஓரே நேரத்தில் 5 வீரர்கள் இந்திய ஜூனியர் அணியில் இடம் பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
குறிப்பாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ந்தேதி முதல் 25ந்தேதி வரை தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. அதில், 27 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. அதில், தமிழ்நாடு அணியில் கோவில்பட்டியை சேர்ந்த 9 களமிறங்கி விளையாடினர். கோவில்பட்டியை சேர்ந்த நிஷிதேவ் அருள் அணியின் கேப்டனாக வழி நடத்தினார். காலியிறுதி போட்டி வரை தமிழ்நாடு அணி சிறப்பாக விளையாடி அசத்தியது.
வீரர்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்தனர். அவர்களில், நிஷிதேவ்அருள், அரவிந்த், கவியரசன், திலீபன், நெல்லையை சேர்ந்த சதிஷ் ஆகியோர் இந்திய ஜூனியர் பயிற்சி முகாமில் பங்கேற்பது பெருமிதமாக இருக்கிறது. இது இளம்தலைமுறை வீரர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.'' என்கிறார்.
சாதனை வீரர்களின் பட்டியல்
ஹாக்கி விளையாட்டைப் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹாக்கி மாணவர் சிறப்பு விளையாட்டு விடுதி கிருஷ்ணாநகரில் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
முன்னதாக 2015ம் ஆண்டு கோவில்பட்டியில் 7 கோடி 50 லட்ச ரூபாய் செலவில் சர்வதேச அளவிலான செயற்கைபுல்வெளி மைதானமும் அமைக்கப்பட்டது. இதையடுத்து, கோவில்பட்டி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஹாக்கி வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இங்கு பயிற்சி பெற்ற கோவில்பட்டி மாரீஸ்வரன், அரியலூர் கார்த்தி இருவரும் கடந்த 2020ம் ஆண்டு இந்திய ஜூனியர் அணியில் தேசிய அளவிலான பயிற்சி முகாமிற்கு சென்றனர்.
மாரிஸ்வரன், உலக கோப்பை இந்திய ஜூனியர் அணியில் வீரர்களின் தேர்வு பட்டியிலில் இடம் பெற்றார். அவர் தற்போது மத்திய கலால் துறையில் பணி நியமனம் பெற்றார். கடந்த ஆண்டு செல்வா, அஜித் ஆகியோர் இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டனர். செல்வாவிற்கு இந்திய கடற்படையில் பணி நியமனம் கிடைத்தது. இவர்கள் மட்டுமின்றி சர்வதேச, தேசிய அளவிலான கிளப் அணிகளில் பங்கேற்ற சாதனை வீரர்களின் பட்டியல் நீண்டது என்கின்றனர் அங்குள்ள மூத்த வீரர்கள்.
சர்வதேச அளவிலான பயிற்சிகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதியில் சர்வதேச அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்கிறார் இந்த விடுதியின் பயிற்சியாள முத்துக்குமார். தொடர்ந்து அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''கல்லூரி மாணவர்களுக்கான ஹாக்கி சிறப்பு விளையாட்டு விடுதி தமிழ்நாட்டில் இங்கு மட்டுமே உள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 17 - 25 வயதுடைய கல்லூரி மாணவர்கள் 30 பேர் இந்த விடுதியில் தங்கி, பயிற்சி பெற்று வருகின்றனர். விடுதி தொடங்கிய 5 ஆண்டுகளில் 9 வீரர்கள் இந்திய ஹாக்கி அணி மற்றும் தேசிய பயிற்சி முகாமிற்கு தேர்வு பெற்றுள்ளனர். இப்போது தேர்வாகியுள்ள 5 விரர்களுக்கும் இந்திய ஹாக்கி அனியில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இவர்கள் விடுதிக்கு வரும் போது திறமையுடன் வந்தனர். அவர்கள் மேலும் மெருகேறி இந்திய பயிற்சி முகாமிற்கு சென்றுள்ளனர். இன்னும் மேம்பட்டு வருவார்கள்.
இங்கு பயிற்சி பெறும் பெரும்பான்மையானவர்கள் எளிய பின்னணியில் இருந்து வந்துள்ளனர். விளையாட்டிற்கு திறமை, ஆர்வம் இருந்தால் போதும், பொருளாதாரம் உள்ளிட்ட வேறு எதுவும் தடையில்லை என்று இவர்கள் நிருபித்து வருகின்றனர். குறிப்பாக, கோவில்பட்டி அரவிந்த் போல் திலிபன், கவியரசன் உள்ளிட்டோரும் எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். கவியரசன் கோவில்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தந்தையை இழந்த அவர், பொருளாதாரத் தடைகளைக் கடந்து சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் போல பலரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.'' என்கிறார் பயிற்சியாளர் முத்துக்குமார்.
பிற செய்திகள்:
- கேரளாவில் 40 மணி நேரத்திற்கும் மேல் மலை இடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு
- சசிகலா மீதான ஊழல் வழக்கு: ஐஜி ரூபா குற்றச்சாட்டால் என்ன நடக்கும்?
- பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைக் கையாண்டதில் தவறுகள்: ஒப்புக்கொண்ட முன்னாள் போப்
- ஹிஜாப் Vs காவி துண்டு: கர்நாடகாவில் தீவிரமாகும் ஆடை விவகாரம் - அடுத்தது என்ன
- பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் அறிவிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
- கோடநாடு எஸ்டேட்: ஸ்டாலின் அரசுக்கு ஆதாரத்தை திரட்டுவதில் பின்னடைவா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்