ரோஜாப் பூ தினம்: அதிகரித்துள்ள வருமானம் மகிழ்ச்சியில் ‘லிட்டில் இங்கிலாந்தின்’ விவசாயிகள்

ரோஜாக்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஏ.எம். சுதாகர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் உலகம் முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடை பெறுகிறது.

லிட்டில் இங்கிலாந்து என்று அழைக்கப்படும் ஓசூர்

கிருஷ்ணகிரி ஓசூரை லிட்டில் இங்கிலாந்து என்பார்கள்.

அதன் குளிர்ச்சியான காலநிலைக்காக இந்த பெயர் வந்தாலும் இங்கு பூக்கும் ரோஜாக்கள் தான் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகி காதலர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பூக்கச் செய்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சுற்றியுள்ள பாகலூர், பேரிகை , தளி மற்றும் கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் 2500 ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு ஏக்கர் நிலத்தில் சிகப்பு ரோஜா , கலர் ரோஜா (சிவப்பில் பிற நிறங்கள் கலந்த மாதிரியான வண்ணங்கள்) என இரு பிரிவகளாக பிரித்து பயிரிடப்படுகின்றன.

கிரான்ட் கலா, பர்ஸ்ட் ரெட் , லவ்லி ரெட் , பிரைம் டைம் , டிவோஷனல் ரெட் , அவலான்ஞ் ரெட் , ஹாட் சாட் , சவரின் , அயன் மேஜிக் என பல்வேறு வண்ணத்திலான பூக்கள் பூக்கும் செடிகள் பயிரிடப்படுகின்றன.

ஒரு ஏக்கரில் 35 ஆயிரம் ரோஜா செடிகள் வரை வளர்க்கலாம் .

ஒரு ரோஜாசெடி, நடவுக்கு பிறகு 150 நாட்களில் பூத்து விற்பனைக்கு தயாராகும். பூ பறித்த பின் மீண்டும் 50 நாட்களில் ரோஜா மலரும் .

ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ஏழரை லட்சம் ரோஜாக்கள் வரை தொடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பூக்கும் .

ஒரு செடிக்கான உற்பத்தி செலவு மூன்று ரூபாய் 50 காசுகள் வரை ஆகும்.

இதில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்துக்காக ஓசூரில் இருந்து மட்டும் பெங்களூரு மலர் வர்த்தக மையம் மூலம் சிங்கப்பூர், மலேசியா ,ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து, இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளுக்கு சுமார் 60 லட்சம் முதல் 75 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படும்.

roja

மேலும் அன்னையர் தினம், மகளிர் தினம், மே தினம் , கிறிஸ்துமஸ் , புத்தாண்டு , நாட்களில் கூடுதலாக ஏற்றுமதியாகும்.

அதிகரித்துள்ள வருமானம்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்திருப்பதால் இந்த ஆண்டு வருமானம் வழக்கத்தைவிட சற்று கூடுதலாக உள்ளது என்கிறார் ரோஜா தோட்ட தொழிலாளர் கிருஷ்ண மூர்த்தி.

roja

"வழக்கமாக வருடம் முழுவதும் எங்களுக்கு ரோஜா தோட்டத்தில் வேலை இருக்கும் ஆனால் காதலர் தினம் என்றால் கூடுதலான வேலை கிடைக்கும் கூடுதலான வேலை பார்க்கும் பொழுது எங்களுக்கு அதிகமான அளவில் வருமானம் கிடைக்கிறது. இந்த ஆண்டு கொரோனா தாக்கம் சற்று குறைந்திருப்பதால் கடந்த இரண்டு ஆண்டுகள் போல் இல்லாமல் இந்த ஆண்டு வருமானம் அதிகமாக கிடைத்திருக்கிறது," என்றார் அவர்.

தொடர்ந்து ரோஜா உற்பத்தியாளர் திம்மராயப்பாவிடம் பேசியபோது, "கடந்த நவம்பர் மாதம் பெய்த பலத்த மழையால் ரோஜா மலர் தோட்டத்தில் மிக பாதிப்பு ஏற்பட்டது அதோடு ' டவுனி மைல்டியூ' என்ற நோய் தாக்கி செடிகளும் பூக்களும் பாதிக்கப்பட்டு உற்பத்தி மிகவும் குறைந்து போனது இருந்தாலும் காதலர் தின கொண்டாட்டத்திற்காக எங்கள் மாவட்டத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 லட்சம் மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளோம் எங்களுக்கு ரோஜா உற்பத்தி குறைந்தாலும் விலை அதிகமாக கிடைத்ததால் இந்த காதலர் தினத்தை பொறுத்தவரை எங்களுக்கு மகிழ்ச்சிதான்," என்றார்.

roja

ஓசூரிலிருந்து அதிகப்படியாக ஏற்றுமதியாகும் ரோஜாக்கள்

இந்திய அளவில் அதிக ரோஜா உற்பத்தியாகும் இடம் ஓசூர்தான் என்கிறார் தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குனர் பால சிவபிரசாத்.

''காதலர் தினத்துக்காக வெளிநாடுகளுக்கு ஓசூரில் இருந்து அதிகளவில் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

இந்திய அளவில் அதிக அளவில் ரோஜா உற்பத்தியாகும் இடம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தான் கிட்டதட்ட 2500 ஏக்கர் அளவில் பசுமைக்குடில் அமைத்து அதில் ரோஜா சாகுபடி செய்து வருகிறார்கள் தற்போது ஈக்வெடார் , நெதர்லாந்து , ஹாலந்து , கென்யா, எத்தியோப்பியா, நாட்டு மலர்கள் தான் தரத்தில் முதலிடம் வகிக்கிறது அடுத்த இடத்தில் நம் ரோஜாக்கள் உள்ளன.

வருடா வருடம் காதலர் தினம் என்பது ரோஜா உற்பத்தியாளர்களின் மிக முக்கிய தினமாகும் ஒரு ஆண்டில் வரக்கூடிய லாபத்தில் 60 சதவீதம் இந்த காதலர் தினத்தில் மட்டுமே வருமானம் ஈட்டக்கூடிய தினமாக உள்ளது

சிங்கப்பூர் ஆஸ்திரேலியா ஜப்பான் நியூசிலாந்து மலேசியா ஆகிய நாடுகளுக்கு ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இருப்பினும் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பெய்த மழையினால் மலர் உற்பத்தி குறைந்துள்ளது உதாரணமாக 100 வரவேண்டிய இடத்தில் 60 பூக்கள் தான் வந்துள்ளன ஆனாலும் உற்பத்தி குறைந்தாலும் விலை மிக அதிகமாக கிடைத்ததால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

உள்ளூர் சந்தையில் ஆந்திரா கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் முகூர்த்த நாட்கள் தற்போது இருப்பதினால் ரோஜாவின் விலை உயர்ந்துள்ளது உதாரணமாக ஒரு ரோஜாவின் விலை ரூபாய் 15 லிருந்து இருபத்தி ஐந்து ரூபாய் வரை ஏற்றுமதி சந்தையில் செல்கிறது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

காதலர் தினத்தை பொருத்தவரை சிவப்பு ரோஜாக்களுக்கு தான் மதிப்பு அதிகம் உற்பத்தியில் இருந்து 90 சதவீதம் சிகப்பு ரோஜாக்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது மற்றும் பல வண்ண ரோஜாக்கள் 10 சதவீதம் மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுகிறது." என்கிறார்.

இந்த ஆண்டு ரோஜா உற்பத்தியை பொறுத்தவரை விவசாயிகளுக்கு வருமானம் தரும் ஒன்றாகதான் இருந்துள்ளது என்றும் கூறுகிறார் பால சிவ பிரசாத்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: