நேபாள எல்லையில் சீன ஊடுருவல்: பிபிசிக்கு கசிந்த அரசின் அறிக்கை சொல்வது என்ன?

நேபாளத்தின் ஹூம்லா பகுதி

பட மூலாதாரம், NAMKHA RURAL MUNICIPALITY

படக்குறிப்பு, நேபாளத்தின் ஹூம்லா பகுதியில் தெரியும் சீன கட்டடங்கள்
    • எழுதியவர், மைக்கேல் பிரிஸ்டோவ்
    • பதவி, பிபிசி நியூஸ்

சீனா தங்கள் எல்லைக்குள் ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசு முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான எல்லை இருக்கும் நிலையில், சீனாவின் அத்துமீறல் குறித்த நேபாள அரசின் குற்றச்சாட்டு குறித்த அறிக்கை பிபிசிக்கு கிடைத்துள்ளது.

மேற்கு நேபாளத்தின் ஹூம்லா மாவட்டத்தில் சீனா அத்துமீறுவதாக கூறப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த அறிக்கை தயாரிக்க அரசால் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் இந்த ஊடுருவல் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. அதே சமயம் பிபிசியின் கேள்விகளுக்கும் நேபாள அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்த அறிக்கை ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை. சமீபத்திய சில ஆண்டுகளில் நேபாள அரசு, சீனாவுடனான தன் உறவை மேம்படுத்திக்கொள்ள முயற்சித்து வந்தது.

நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை இமயமலையை ஒட்டி சுமார் 1,400 கி.மீ உள்ளது. இந்நிலையில், இந்த அறிக்கையின் முடிவுகள் சீனாவுடனான உறவுகளை மேம்படுத்தும் நேபாள அரசின் முயற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

எல்லைகளை நிர்ணயித்தல்

1960களின் முற்பகுதியில், இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளின் எல்லைப்பகுதிகளுமே தொலைதூரப் பகுதிகளாக இருப்பதால் அங்கு செல்வது எளிதல்ல.

தரைப்பகுதியில் எல்லையானது தூண்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சில நேரங்களில் நேபாளம் மற்றும் சீனாவின் எல்லைப்பகுதி வரையறைகளைப் புரிந்துகொள்வதே கடினம்தான்.

ஹூம்லாவில் நேபாள வீரர்களின் பழைய படம்

பட மூலாதாரம், BISHNU BAHADUR TAMANG

படக்குறிப்பு, ஹூம்லாவில் நேபாள வீரர்களின் பழைய படம்.இந்த பகுதியில் படையினரை நிறுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூம்லா மாவட்டத்தில் சீனாவின் அத்துமீறல் குறித்த தகவலைத் தொடர்ந்து, நேபாள அரசு ஒரு பணிக்குழுவை அனுப்ப முடிவு செய்தது. இந்தக்குழுவில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசின் பிரதிநிதிகள் இருந்தனர்.

நேபாள எல்லைப் பகுதியில் உள்ள லாலுங்ஜோங் பகுதி கைலாய மலைக்கு அருகில் இருப்பதால் பாரம்பரியமாக யாத்ரீகர்களை ஈர்க்கும் மையமாக இருந்து வருகிறது. குறிப்பாக இது இந்துக்கள் மற்றும் பௌத்தர்களுக்கு புனிதமான இடம்.

ஆனால், இந்தப் பகுதியில் சமய நடவடிக்கைகளை கூட சீனப் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாக னேபாள அரசின் பணிக்குழு அறிக்கை கூறியுள்ளது. மேலும், நேபாள விவசாயிகளின் கால்நடை மேய்ச்சலை சீனா கட்டுப்படுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் சீனா எல்லைத் தூண் அருகே வேலி அமைத்து, நேபாளப் பகுதியில் கால்வாயை ஒட்டி சாலை அமைக்க முயற்சிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், நேபாளப் பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் சீனக் கட்டடங்கள் உண்மையில் சீனாவின் பகுதிக்கு உள்ளேதான் கட்டப்பட்டிருக்கிறது என்றும் பணிக்குழு கண்டறிந்தது.

நேபாள உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் எல்லைப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கத் தயங்குகிறார்கள் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஏனெனில் அவர்களில் பலர் எல்லையைத் தாண்டி சீன சந்தைக்கு செல்கிறார்கள். எனவே, பாதுகாப்பை உறுதி செய்ய நேபாள ராணுவம் அங்கு ஒரு சாவடியை அமைக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

இது தவிர, நேபாளமும், சீனாவும் எல்லை தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, செயலிழந்த நிலையில் இருக்கும் செயல்முறைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிபுணர்கள் சொல்வது என்ன?

"எல்லைக்கு அருகில் வசிக்கும் மக்கள் தாங்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும். இவர்களால் மட்டுமே நேபாள எல்லையை சரியாக பாதுகாக்க முடியும்," என்று வரைபட நிபுணரும், நேபாள சர்வே துறையின் முன்னாள் தலைவருமான புத்திநாராயண் ஷ்ரேஷ்டா கூறினார்.

"சீனா இந்த அத்துமீறல் குற்றச்சாட்டை மறுக்கிறது. நேபாளத்தின் எல்லைப் பகுதியை அது கட்டுப்படுத்துவது ஏன் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பாதுகாப்பு ஒரு காரணியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

வரலாற்று ரீதியாக எல்லையில் போக்குவரத்து தொடர்பு இருந்து வருகிறது. யாத்ரீகர்கள் மற்றும் வியாபாரிகளும் இவற்றில் அடங்குவர். ஆனால் சீனா தொடர்ந்து இந்த இயக்கங்களை நிறுத்தி வருகிறது.

முன்னாள் நேபாள தூதர் விஜய் காந்த் கரன் காத்மண்டுவில் உள்ள ஒரு சிந்தனையாளர் குழுவில் பணியாற்றுகிறார். இந்த விவகாரம் குறித்து விஜய் காந்த் கூறும்போது, "சீனா, இந்தியாவைப் பற்றி கவலை கொண்டிருக்கலாம். ஏனெனில், இரண்டும் போட்டி நாடுகள் மற்றும் இருவருக்கும் இடையே எல்லை தகராறுகளும் உள்ளன." என்றார்.

மேலும், ''ஊடுருவல் குறித்து சீனா கவலைப்படுவது போல் தெரிகிறது. அத்தகைய சூழ்நிலையில், நேபாள எல்லையில் போக்குவரத்தை நிறுத்த சீனா விரும்புகிறது. நேபாளத்தில் இருந்து சீனா செல்லும் பகுதியில் திபெத் எல்லை உள்ளது. சீனாவின் அடக்குமுறையால் பலர் திபெத்தில் இருந்து வெளியேறுகிறார்கள்.

நேபாளத்தில் சுமார் 20,000 திபெத்திய அகதிகள் வாழ்கின்றனர். இந்தியாவில் இருந்தும் பல திபெத்தியர்கள் நேபாளத்திற்கு வருகிறார்கள். இந்தச் சூழலில் திபெத்தியர்களுக்கான வழிகளையும் சீனா சமீபத்திய ஆண்டுகளில் மூடியுள்ளது.

சீனாவின் பதில் என்ன?

நேபாளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனாவின் அத்துமீறல்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த அறிக்கைகள் தொடர்பாக தலைநகர் காத்மண்டுவிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. மிக சமீபத்திய ஆர்ப்பாட்டம் கடந்த மாதம்தான் நடந்தது.

இது தொடர்பாக நேபாளத்தில் உள்ள சீன தூதரகம் கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

நேபாளத்துடன் எல்லைப் பிரச்னை எதுவும் இல்லை. போலி அறிக்கையால் நேபாள மக்கள் குழப்பமடைய மாட்டார்கள் என்று நம்புகிறோம் என்று சீன தூதரகம் தான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

எனினும், வெளியிடப்படாத இந்த அறிக்கை குறித்து சீன தூதரகம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: