உலகளாவிய லட்சியங்களுடன் இந்தியாவில் ட்விட்டருக்கு மாற்றாக போட்டியிடும் 'கூ' செயலி

koo
படக்குறிப்பு, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 'கூ' செயலி நிறுவப்பட்டது.
    • எழுதியவர், நிகில் இனாம்தார்
    • பதவி, பிபிசி வணிக நிருபர்

இந்திய மைக்ரோ பிளாக்கிங் செயலியான 'கூ' ட்விட்டரை தோற்கடிக்க முடியுமா?

அதுதான் இலக்கு என்கிறார் அச்செயலியின் இணை நிறுவனர் மயங்க் பிடவட்கா. இந்த ஆண்டு இந்தியாவில் ட்விட்டரின் 2.5 கோடி எனும் வலுவான பயனர் தளத்தை விஞ்சும் என்று 'கூ' செயலி எதிர்பார்க்கிறது என்று அவர் கூறுகிறார்.

இது 2021ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் 2 கோடி பதிவிறக்கங்களைத் தொட்டுள்ளது.

"நாங்கள் இப்போது ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் செயல்படுகிறோம். இந்த ஆண்டு இந்தியாவின் அதிகாரப்பூர்வமான 22 மொழிகளும் செயல்பட விரும்புகிறோம்," என்று பெங்களூரில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் இருந்து அவர் பிபிசியிடம் கூறுகிறார்.

இந்திய அரசுக்கும் அமெரிக்காவின் மைக்ரோ பிளாக்கிங் (micro-blogging) தளமான ட்விட்டருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில், ட்விட்டருக்கு மாறாக 'கூ' செயலி, கடந்த ஆண்டு கவனத்தை ஈர்த்தது.

அரசுக்கு எதிரான கலகத்தைத் தூண்டும் கணக்குகள் என்று இந்திய அரசு கூறும் கணக்குகளை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்திடம் பிரதமர் நரேந்திர மோதியின் அரசு வலியுறுத்தியது. இதற்கு தொடக்கத்தில், ட்விட்டர் இணங்கி பின்னர் "போதுமான ஆதாரம் இல்லை" என்று கூறி, அக்கணக்குகளை மீட்டெடுத்தது.

இந்தியாவில் உள்ள அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அச்சுறுத்தியதால், இந்த பிரச்னை தொடர்ந்தது.

பேச்சு சுதந்திரம் மற்றும் தனியுரிமை பற்றிய கவலைகளைத் தூண்டிய புதிய டிஜிட்டல் விதிமுறைகள் தொடர்பான சர்ச்சைக்கு கூடுதலாக இந்த விவகாரம் இருந்தது. விதிகள் தனியுரிமை பாதுகாப்பை மீறுவதற்கு விதிமுறைகள் கட்டாயப்படுத்தும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அரசு மீது வழக்கு தொடர்ந்தது.

ட்விட்டரின் விதிமீறல் மற்றும் டிஜிட்டல் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதால், எரிச்சலடைந்த மோதியின் பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரே இரவில் கூ செயலிக்கு மாறிவிட்டனர். ட்விட்டரில் அதிக எண்ணிக்கையில் பின்தொடர்பவர்களைக் கொண்ட நரேந்திர மோதி ட்விட்டரில் நீடிக்கிறார்.

இந்தியாவில் ஆங்கிலம் மொழி பேசுபவர்கள் அல்லாத பயனர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் 'கூ' செயலி, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டது. இது 2021ஆம் ஆண்டில் நைஜீரியாவில் ட்விட்டரை தடை செய்தபோது, அங்கும் விரிவடைந்தது. இப்போது 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் 100 மில்லியன் பயனர்களை அடைய விரும்புகிறது.

அபர்மேயா ராதாகிருஷ்ணா என்ற 'ஏஞ்சல்' முதலீட்டாளர் (ஸ்டார்ட்-அப் நிறுவங்களில் பங்கு வாங்கிக்கொண்டு முதலீடு செய்பவர்) மற்றும் தொழில்முனைவோருடன் இணைந்து பிடாவட்கா, கூ செயலியை நிறுவினார்.

அபர்மேயாவின் சவாரி-பகிர்வு வணிகமான TaxiForSure ஐ 2015ஆம் ஆண்டில் இந்திய நிறுவனமான ஓலா (Ola) $200 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. இருவரும் இணைந்து, இந்தியா மொழிகளில் அறிவுப் பகிர்வு தளமான Vokal என்ற செயலியையும் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு முதல், கிரிக்கெட் வீரர்களையும் பாலிவுட் நட்சத்திரங்களையும் கூ செயலி ஈர்த்துள்ளது. மேலும் தற்போது 5,000 ஆக இருக்கும் "சிறப்பு கணக்குகளின்" எண்ணிக்கை இந்த ஆண்டின் இறுதியில் மூன்று மடங்காக உயரும் என எதிர்பார்க்கிறது.

ஆனால், இந்த செயலி அரசு பிரசாரத்தை அதிகப்படுத்துவதாகவும், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்காமல் இருக்கிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கூர்மையாக ஒருமுனையாக்கப்பட்ட இந்தியாவில் சமூக ஊடகங்கள் மற்றொரு போர்க்களமாக மாறியுள்ளது. மேலும் இந்து தேசியவாத பா.ஜ.கவின் ஆதரவாளர்கள் மோதியை விமர்சிப்பவர்களாகவோ அல்லது எதிர்ப்பவர்களாகவோ பார்க்கப்படுபவர்களை இடைவிடாமல் ட்ரோல் செய்வதாக நீண்டகாலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன.

koo

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதிக்கு ட்விட்டரில் ஏராளமான பின்தொடர்ப்பாளர்கள் உள்ளனர்.

'கூ' செயலியின் வழிகாட்டுதல்கள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் பாரபட்சமான அல்லது புண்படுத்தும் உள்ளடக்கத்தை வெளிப்படையாக தடைசெய்கின்றன. ஆனால், ஒவ்வொரு நொடியும் "கூஸ்" (அதாவது, டீவிட் என்பதற்கு இணையான அச்செயலியின் சொல்) உருவாக்கப்படுவதால், ட்விட்டர் உட்பட மற்ற சமூக ஊடகங்களில் உள்ளதைப் போலவே, சரிபாக்கும் வேலை மிகவும் கடினமாக உள்ளது.

இதனை மனிதர்கள் சரிபார்ப்பதை காட்டிலும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்றும், கலகம் வாய்ந்ததாகக் கருதும் தகவல்களைக் பயனர் சமூகம் சுட்டிக்காட்டதன் மூலம் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்றும் பிடாவட்கா கூறுகிறார்.

'கூ' செயலியில் "பா.ஜ.கவைச் சேர்ந்த பலரும்" இருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால், அது வலதுசாரியின் சார்ப்பாகவும், தாராளமயத்திற்கு எதிர்ப்பு குரல்களின் எதிரொலியாக இருக்கிறது என்பதை அவர் ஏற்கவில்லை.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநில முதல்வர்கள் உட்பட 19 பிற கட்சிகளின் எதிர்க்கட்சித் தலைவர்களை இந்த செயலி உள்ளனர் என்று அவர் மேலும் கூறுகிறார்.

"எப்போதும் சில தொடக்ககால துணை ஏற்பாடுகள் (adoptors) இருக்கும். ஆனால், நீங்கள் எப்படி தொடங்குகிறீர்கள், தொடக்கத்தில் என்ன நடக்கிறது என்பது உங்கள் முழுப் பயணத்தையும் வரையறுக்கக் கூடாது", என்று பிடாவட்கா கூறுகிறார். "தொழில்முனைவோராக, மக்கள்தொகையில் ஒரு பகுதியினர் மட்டுமே பயன்படுத்தும் ஒன்றை உருவாக்க எங்களுக்கு எந்த காரணமும் இல்லை." என்கிறார்.

ஆனால், ட்விட்டருக்கு மாற்றாக 'கூ' செயலியை உள்நாட்டு, 'தேசியவாதி' என்று விளம்பரப்படுத்துவதற்கு, மோதியின் அரசுக்கு ஒரு தெளிவான காரணம் உள்ளது என்று டிஜிட்டல் உரிமை ஆர்வலரான நிகில் பஹ்வா கூறுகிறார். என் ட்விட்டரை தடை செய்ய வேண்டிய அவசியம் எதிர்காலத்தில் ஏற்பட்டால், அந்த செயலி அதற்கு மாற்றாக இருக்கும்.

சைபர்ஸ்பேஸை அரசு கட்டுப்படுத்தும் சீனாவின் "ஸ்ப்ளின்டர்நெட்" (splinternet) போலவே, இந்தியா பல ஆண்டுகளாக, அதிக டிஜிட்டல் தலைமையுரிமையையும், இணையத்தின் கட்டுப்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று பஹ்வா கூறுகிறார்.

இந்த பரவலான டிரண்ட்கள் "இந்தியருக்குச் சொந்தமான இயங்குதளங்களுக்கு (கூ செயலி போன்றவை) மேலும் பின்னடைவை வழங்கும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

தரவு மற்றும் பாதுகாப்பைச் சுற்றியுள்ள கொள்கைகளால் நிர்வகிக்கப்படும் உலகளாவிய பெரிய தொழில்நுட்பம் "இந்தியாவில் வளர கடினமாக இருக்கும்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

பயனர்களுக்கு பாதுகாப்பான இடத்தை உருவாக்கும் அதே வேளையில், உள்ளடக்கத்தை எவ்வாறு சிறந்த முறையில் கட்டுப்படுத்துவது என்ற சிக்கலைத் தீர்க்க முடிந்தால், கூ செயலிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று அவர் நம்புகிறார். இதற்கு ட்விட்டர் நீண்டகாலமாகப் போராடி வருகிறது.

Koo

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுமார் 25 மில்லியன் இந்தியர்கள் ட்விட்டரைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், இந்த செயலி பல்வேறு அரசியல் பார்வைகளைக் கொண்ட பயனர்களை ஈர்க்க இன்னும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இப்போதைக்கு, தாராளமயம் அல்லது சட்டத்திற்கு எதிரான குரல்கள் ட்விட்டரை விட்டு வெளியேறவோ அல்லது இரு தளங்களிலும் கணக்கு வைத்திருக்கவோ விரும்பாமல் இருக்கலாம்.

பதிவு செய்வதற்கு அலைபேசி எண் மூலம் அங்கீகாரத்திற்கான பயன்பாட்டின் தேவையும் ஒரு சவாலாக இருக்கும் என்று பஹ்வா கூறுகிறார். ஏனெனில் இது உள்ளடக்கத்தை சிறப்பாக நிர்வகிக்க கூ செயலிஅனுமதிக்கும் அதே வேளையில், ட்விட்டர் அதன் பயனர்களுக்கு வழங்கும் "பெயர் அல்லது சுயவிவரம் மறைக்கும் வசதியை நீக்குகிறது"., என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், ஆங்கிலம் அல்லாத மொழிகள் பேசுபவர்களுக்கு ஒரு தயாரிப்பை உருவாக்குவதில் கூ செயலியின் தனித்துவமான கவனம் அதை ஒரு கட்டாய தயாரிப்பாக ஆக்குகிறது.

கடந்த சில மாதங்களாக, ஒரே நேரத்தில் பல மொழிகளிலும், ஒரே திரையிலும் 'கூ' பயன்படுத்த செய்யும் வசதியை மக்களுக்கு வழங்குவது போன்ற பல சோதனைகளை இந்த நிறுவனம் செய்துள்ளது.

பொதுவாக சமூக ஊடகங்களில் தங்கள் ரசிகர்களுடன் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் பாலிவுட் நடிகர்கள், பல மொழிகளில் பரவலான பார்வையாளர்களைச் சென்றடைய இந்த வசதியைப் பயன்படுத்துகிறார்கள் என்று பிடாவட்கா கூறுகிறார்.

தற்போது இந்தியாவில் 'ஷேர்சாட்'டுடன் கூ செயலி போட்டியிடுகிறது. அதன் பயனர் தளத்தைப் பொறுத்தவரை அந்நிறுவனம் மிகப் பெரிய போட்டியாளர். இது இந்திய மொழிகளில் விரிவடையும் போது, அதன் பயனர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்.

நைஜீரியாவில் அதன் தளத்தின் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள பிடவட்கா, ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தாத வெளிநாடுகளுக்கு செயலியை விரிவாக்க செய்ய திட்டமிட்டுள்ளார்.

"பெரிய மக்கள்தொகை மற்றும் தற்போதுள்ள சமூக ஊடக தளங்களில் ஊடுருவல் குறைவாக இருப்பதால் தென்கிழக்கு ஆசியா மிகவும் சிறப்பாக இருக்கிறது. அது நிச்சயமாக எங்கள் பட்டியலில் உள்ளது" என்று பிடவட்கா கூறுகிறார்.

"உலகில் 20% பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகின்றனர். உலகில் 80% பேர் ஆங்கிலம் பேச மாட்டார்கள். அந்த முழு சந்தையும் எங்களுக்கு திறந்திருக்கும்." என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: