இந்தியா vs இங்கிலாந்து அண்டர்-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இன்று இறுதிப்போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இந்திய நேரப்படி இன்று மாலை 6:30 மணிக்கு 19 வயதுக்கும் குறைவானவர்களுக்கான அண்டர்-19 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது.
மேற்கிந்திய தீவுகளின் ஓர் அங்கமான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிலுள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி இன்று நடைபெற உள்ளது.
1988ஆம் ஆண்டு முதல் முறையாக அண்டர்-19 உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
அதன்பின்பு 1998ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அண்டர்-19 உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது.
யஷ் துல் தலைமையிலான இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டின் உலக கோப்பை போட்டியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதற்கு முன்பு கடைசியாக 1998ஆம் ஆண்டுதான், அண்டர்-19 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாடியது இங்கிலாந்து. அப்போது நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
ஆனால் இந்தியா இன்று தமது எட்டாவது ஆண்டில் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இதுவரை விளையாடியுள்ள ஏழு இறுதிப் போட்டிகளில் நான்கு போட்டிகளில் வென்ற இந்தியாதான் அண்டர்-19 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்ற அணியாகும்.

பட மூலாதாரம், Ani
இந்தியா முதல் முறையாக 2000ஆவது ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் முகமது கைஃப் தலைமையில் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
அதன்பின்பு 2008ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலும், 2012ஆம் ஆண்டு உன்முக்த் சந்த் தலைமையிலும், 2018 ஆம் ஆண்டு பிரித்வி ஷா தலைமையிலும் விளையாடி கோப்பையைக் கைப்பற்றியது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டம் வரை சென்ற இந்தியா வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது.
இந்த முறை எப்படியும் விட்டுவிடக் கூடாது என தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள இந்திய அணி மும்முரம் காட்டி வருகிறது.
அதேசமயம் 24 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள வாய்ப்பை தவற விடக்கூடாது என்று டாம் ப்ரெஸ்ட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் தீவிரமாக உள்ளது.
இவர்களில் யாருடைய நோக்கம் நிறைவேறும் என்பதை இன்றைய இறுதிப் போட்டி உறுதி செய்யும்.
பிற செய்திகள்:
- "நாங்கள் சகோதரர்கள், எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை" - அயோத்தி இளைஞர்களின் குரல்
- நடிகர் விஜய் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீர் சந்திப்பு ஏன்?
- நீட் விலக்கு மசோதா மீது ஆளுநரே இறுதி முடிவு எடுக்கலாமா? சட்டம் என்ன சொல்கிறது?
- ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றிப் பாதையில் இந்திய இளைஞர்கள் – யார் இவர்கள்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












