You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தமா? குமுறலில் கூட்டணி கட்சிகள்
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணிக்குள் சலசலப்புகள் எழத் தொடங்கியுள்ளன. `காங்கிரஸ் உள்பட ஒரு சில கட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு வற்புறுத்துகின்றனர். இதனால் தொண்டர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்' என்கின்றனர் ம.தி.மு.க நிர்வாகிகள். என்ன நடக்கிறது?
தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, திமுகவும் அதிமுகவும் தங்களின் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. இதில் அ.தி.மு.கவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்படாததால் தனித்துப் போட்டியிடுவதாக பா.ஜ.க அறிவித்துவிட்டது.
தி.மு.க, ம.தி.மு.க உரசல் ஏன்?
அதேநேரம், `தி.மு.க கூட்டணியில் இடப்பங்கீடு உரிய முறையில் வழங்கப்படவில்லை' என அதன் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, ம.தி.மு.க முகாமில் வெளிப்படையாகவே அதிருப்தி பேச்சுக்கள் எழுந்துள்ளன. பல மாவட்டங்களில் தி.மு.க, ம.தி.மு.க இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 31 ஆம் தேதி மாலை ம.தி.மு.க தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ சந்தித்துப் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக, ம.தி.மு.க தலைமைக் கழகத்தில் பேட்டியளித்த ம.தி.மு.க தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ, `` மதுரை, திண்டுக்கல் உள்பட ஆறு மாவட்டங்களில் சுமூகமாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளும் ஒரே வார்டுகளைக் கேட்கின்றன. உடன்பாடு எட்டுவதற்குத்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. மகளிருக்கு பாதிக்குப் பாதி இடங்கள் ஒதுக்கியதும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு உள்ளது. நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்'' என்கிறார்.
ராமநாதபுரத்தில் என்ன நடக்கிறது?
``என்ன நடக்கிறது?'' என ம.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` பல மாவட்டங்களில் கூட்டணிக் கட்சிகளைப் பழிவாங்கும் வேலைகளைத்தான் தி.மு.க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம், கமுதி, முதுகுளத்தூர், கீழக்கரை ஆகிய நகராட்சிகளில் ஓர் இடத்தைக்கூட தி.மு.க ஒதுக்கவில்லை. பரமக்குடியைப் பொறுத்தவரையில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 2 இடங்களில் வென்றோம். அங்கு 33 வார்டுகள் உள்ளன. அங்கு ம.தி.மு.கவுக்கு 2 இடமும் சி.பி.எம், சி.பி.எம் கட்சிகளுக்கு தலா 2 இடங்களையும் ஒதுக்கியுள்ளனர். ஆனால், நாங்கள் அங்கு 3 வார்டுகளைக் கேட்டோம்.
ராமநாதபுரம் நகராட்சியிலும் 3 வார்டுகளைக் கேட்டோம். எங்களுக்கு ஒதுக்கவில்லை. அதே நகராட்சியில் 5 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளனர். பல மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. `சிறிய கட்சிகள் யாரும் வேண்டாம்' என்ற மனநிலையில் தி.மு.கவினர் இருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது'' என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` ராமேஸ்வரம் நகராட்சியைப் பொறுத்தவரையில் எங்களுக்குக்கீழ்தான் தி.மு.க உள்ளது. அங்கு ஒரு வார்டைக் கொடுப்பதற்குக்கூட தயக்கம் காட்டுகின்றனர். கடந்த நகர்ப்புற உள்ளாட்சியில் தலைவர் பதவிக்கு நின்றோம். அந்தத் தேர்தலில் எங்களுக்கு அடுத்தபடியாகத்தான் தி.மு.க வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கேட்டது கிடைக்கவில்லை.
உதயசூரியன் சின்னமா? தனிச்சின்னமா?
கடந்த 31 ஆம் தேதி ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர், 3 வார்டுகளைக் கொடுத்துவிட்டு 2 இடங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் போட்டார். இதுகுறித்துக் கேட்டபோது, `ஓர் இடத்தில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைத்து வெற்றி பெறலாம்' எனக் கூறினர். `இது சரிவராது. உதயசூரியன் சின்னத்தில் நிற்பதற்குப் பதிலாக எங்களால் தனியாக நிற்க முடியாதா?' எனக் கேள்வியெழுப்பினோம். பின்னர் ஒருவழியாக ஒப்பந்தம் கையொப்பமானது.
கீழக்கரை நகராட்சியிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு கூறினர். முஸ்லிம் லீக், வி.சி.க ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளிடமும் இதையே தெரிவித்துள்ளனர். இதைப் பற்றி தலைமையின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம்'' என்கிறார்.
``ம.தி.மு.கவை தி.மு.க நிர்வாகிகள் நிர்பந்தம் செய்கிறார்களா?'' என ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் பேட்ரிக்கிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது, ``தலைமைக்குக் கட்டுப்பட்டு கூட்டணியை அனுசரித்து செல்கிறோம். எங்களுக்கு வாய்ப்புள்ள இடங்களை விட்டுக் கொடுப்பதற்குக் காரணம், கூட்டணியில் எந்தச் சிக்கலும் வந்துவிடக் கூடாது என்பதால்தான்'' என்கிறார்.
`` இது ஒரு பெரிய கூட்டணி. ராமநாதபுரம், கமுதி, முதுகுளத்தூர், கீழக்கரை போன்ற நகராட்சிகளில் இடம் கிடைக்காததில் மிகுந்த மனவருத்ததில் இருக்கிறோம். தலைமையின் வழிகாட்டுதலில் நடக்கிறோம். ம.தி.மு.க சின்னத்தில்தான் போட்டியிடுவோம். கட்சியின் வளர்ச்சிக்கேற்ற இடங்கள் கிடைக்கவில்லையே என்ற வேதனை தொண்டர்கள் மத்தியில் உள்ளது'' என்கிறார்.
கூட்டணிக் கட்சிகளின் அனுபவம் என்ன?
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்து அறிவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவின் தலைவர் ஆ.கோபண்ணாவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` தி.மு.க கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக சென்று கொண்டிருக்கின்றன. இன்னமும் இறுதி வடிவத்துக்கு வரவில்லை.
தற்போது வரையில் எங்கள் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து 25 மாவட்டங்களில் கையொப்பம் போட்டுவிட்டனர். சில இடங்களில் நாங்கள் கேட்கும் இடங்களை அவர்கள் ஒதுக்கவில்லை. அவர்கள் சொல்லும் இடங்களில் எங்களால் நிற்க முடியவில்லை. விரைவில் சுமூக முடிவு கிடைத்துவிடும்'' என்கிறார்.
`` மாநிலம் முழுக்க ஒரு சில இடங்களில் மட்டும்தான் சிக்கல் உள்ளது. பெரிதாக எந்தப் பிரச்னையும் வரவில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது'' என்கிறார், மத்திய சென்னை சி.பி.எம் மாவட்ட செயலாளர் செல்வா.
இதே கருத்தை வலியுறுத்திப் பேசும் சி.பி.எம் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் வீரபாண்டியன், `` சில இடங்களில் சுமூகமாகவும் சில இடங்களில் சிக்கல்களும் நீடிக்கின்றன. நல்லபடியாக பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம்'' என்கிறார்.
திருமாவளவனே நேரடியாக பேசுகிறார்
``உதயசூரியன் சின்னத்தில் நிற்பதற்கு நிர்பந்தம் செய்யப்படுகிறதா?'' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசுவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, `` உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு நிர்பந்தம் கொடுக்கவில்லை. தனிச் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என எங்கள் கட்சியின் தலைவர் கூறியுள்ளார். எங்களின் தனித்துவத்தைக் காட்டும் வகையில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம்'' என்கிறார்.
`` தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் எங்கள் கட்சியின் நிர்வாகிகள் பேசி வருகின்றனர். அதில் தேவைப்படும் இடங்களில் எல்லாம் தி.மு.க மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சருடன் எங்கள் தலைவரே பேசுகிறார். எந்தெந்த இடங்களில் வெற்றிவாய்ப்பு உள்ளதோ, அந்த இடங்களை எழுதிக் கொடுத்துள்ளோம். அவற்றில் சில இடங்களை ஏற்றுக் கொள்கின்றனர். சிலவற்றில் அவர்களே நிற்குமாறு கூறுகின்றனர். அதில் எங்களுக்கு ஏற்புடைய இடங்களில் போட்டியிடுகிறோம். உள்ளாட்சி அமைப்பில் வலிமையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்'' என்கிறார் வன்னி அரசு.
சூழலை வைத்துத்தான் முடிவெடுக்க முடியும்
`` உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கூட்டணிக் கட்சிகளை தி.மு.க வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறதே?'' என தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளரான வீ.கண்ணதாசனிடம் கேட்டோம். `` மாவட்டங்களில் உள்ள களநிலவரத்தை வைத்துத்தான் முடிவெடுக்க முடியும். யார் எந்த இடத்தில் வெற்றி பெறுவார்கள், எந்த சின்னத்தில் நின்றால் நன்றாக இருக்கும் என்பதைப் பொறுத்துத்தான் மாவட்ட நிர்வாகிகள் முடிவு செய்கின்றனர்'' என்கிறார்.
தொடர்ந்து பேசிய கண்ணதாசன், `` பல ஆண்டுகளாக ம.தி.மு.கவினர் பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளனர். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எங்களோடு நின்றனர். அவர்களுக்கு ஓர் இடம் கிடைத்தது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும், ராஜ்யசபாவுக்குத் தேர்வானார். 2021 சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.கவினர் நின்றாலும் அவர்கள் ம.தி.மு.கவின் பிரதிநிதிகள் எனச் சொல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டணி என்பதே சமயோசிதமாக முடிவெடுப்பதற்காகத்தான். இதில் பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற பேதமெல்லாம் இல்லை. அப்படிப்பட்ட எண்ணமும் தி.மு.கவுக்கு இல்லை'' என்கிறார்.
மேலும், ``மாவட்டங்களில் உள்ள செல்வாக்கைப் பொறுத்து இடங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். அப்படிப் பார்த்தால் தாம்பரம் மாநகராட்சியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவரையும் சரிசமமாக பாவித்துத்தான் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்தாலும் அனைவரையும் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டுக்கூட இடங்கள் முடிவான பிறகு வாபஸ் பெற்றுவிடலாம். அதில் எந்தவித சிரமங்களும் இல்லை'' என்கிறார்.
பிற செய்திகள்:
- கோவை சூயஸ் திட்டம்: தேர்தல் நேரத்தில் சூடுபிடிக்கும் எதிர்ப்புப் போராட்டம்; திமுக நிலை என்ன?
- இந்திய பட்ஜெட் -2022 தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?
- இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு
- யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம்
- நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை
- ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் வென்று உலக சாதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: