ஆப்ரிக்க யானை தாயகம் திரும்ப 16 வயது சிறுமி நடத்தும் சட்டப்போராட்டம்

பட மூலாதாரம், Nikita Dhawan
- எழுதியவர், ஸோயா மாதீன்
- பதவி, பிபிசி செய்திகள், டெல்லி
24 ஆண்டுகளுக்கு முன்பு, சங்கர் என்ற இளம் யானை ஆப்பிரிக்காவின் வனப்பகுதியில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தில் ஏற்றப்பட்டது.
தலைநகர் டெல்லியில் தரையிறங்கியதும் அந்த யானை உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டது. இப்போது, இந்த யானை மீண்டும் அதன் தாயகம் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 16 வயது நிகிதா தவான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
யூத் ஃபார் அனிமல்ஸ் என்ற லாப நோக்கற்ற அமைப்பின் நிறுவனர் 16 வயதான நிகிதா தவான். இவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சங்கர் யானை பல ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
சங்கர் யானையை மிருகக்காட்சிசாலையில் இருந்து அகற்றி மற்ற ஆப்ரிக்க யானைகள் இருக்கும் வனவிலங்கு சரணாலயத்தில் மறுவாழ்வு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த யானையை மிருககாட்சி சாலை அதிகாரிகள் தவறாக நடத்துவதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் பெற மிருககாட்சி சாலை அதிகாரிகளை பிபிசி தொடர்பு கொண்டது ஆனால் அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
நிகிதா தவானிடம் பிபிசி பேசியபோது, சங்கரின் தனிமையான வாழ்க்கை குறித்து விவரித்தார்.
"நாட்டிலுள்ள அனைத்து சிறைப்பிடிக்கப்பட்ட யானைகளின் அவலநிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நான் விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.
"இந்திய கலாசாரம் யானைகளுக்கு ஒரு உயர்ந்த அந்தஸ்தை அளிக்கிறது. அவை எல்லா இடங்களிலும், கோயில்களிலும், தனி நபர்களாலும் பராமரிக்கப்படுகின்றன. அவை இந்திய வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளன. இருந்தாலும், நாம் இன்னும் அவற்றை சரியாக கவனிப்பதில்லை," என்று நிகிதா தெரிவித்தார்.
விலங்குகள் உரிமை செயல்பாட்டாளர்கள் நீண்ட காலமாக இந்தியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட யானைகளை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.
இங்குள்ள யானைகளில் பல தனி நபர்களால் வளர்க்கப்பட்டு மோசமான நிலையில் வாழ்கின்றன. அவை மத ஊர்வலங்களுக்கும், மரம் வெட்டும் நடவடிக்கைகளுக்கும், சில சமயங்களில் பிச்சை எடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்திய உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு ஆப்ரிக்க யானைகளில் ஒன்று சங்கர் - இரண்டாவது கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஆண் யானை.
சங்கர் இப்போது இருப்பது போல எப்போதும் தனியாக இருக்கவில்லை - 1998ஆம் ஆண்டு பொம்பாய் என்ற துணையுடன் இந்தியாவுக்கு சங்கர் வந்தது.
இரண்டு இளம் ஆப்ரிக்க யானைகள் - அவற்றின் பெரிய, விசிறி வடிவ காதுகள், ஆசிய யானைகளிடம் இருந்து இவற்றை வேறுபடுத்திக் காண உதவின.
ஜிம்பாப்வேயில் இருந்து அப்போதைய இந்திய குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மாவுக்கு இந்த யானை ராஜீய பரிசாக வழங்கப்பட்டது.
இந்த யானைகள் ஆப்ரிக்காவில் எங்கிருந்து வந்தன என்பது தெரியவில்லை என்று உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறுகின்றனர்.
சில ஆண்டுகளாக, சங்கரும் பொம்பாய்யும் மிருகக்காட்சிசாலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்தன. ஒன்றையொன்று தொட்டு, வருடி, நுகர்ந்து இணக்கமாக வாழ்ந்தன.
ஆனால், 2005ஆம் ஆண்டு பொம்பாய் யானை எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டது.
இதை தனது மனுவில் நிகிதா சுட்டிக்காட்டியுள்ளார். பொம்பாயின் மரணத்திற்கான காரணத்தை பிபிசியால் கண்டறிய முடியவில்லை.
பொம்பாயின் இறப்பு முதல் சங்கர் யானை தனிமையில் வாழ்ந்து வருகிறது.
இப்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு "எஃகுத் தூண்கள் மற்றும் உலோக வேலிகளின் இருண்ட அறையில்" சங்கர் வைக்கப்பட்டிருப்பதாக நிகிதா கூறுகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் உயிரியல் பூங்காவிற்குச் சென்று சங்கரைப் பார்த்த பிறகு அதன் விடுதலைக்காகப் போராட நிகிதா முடிவு செய்திருக்கிறார்.
" எனக்குள் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தியது சங்கரின் நிலைமை. சங்கர் மிகவும் சோகமாக காணப்பட்டது," என்கிறார் நிகிதா.

பட மூலாதாரம், Nikita Dhawan
மிருகக்காட்சிசாலையில் மேலும் இரண்டு ஆசிய யானைகள் உள்ளன - லக்ஷ்மி மற்றும் ஹிரா. ஆனால் அவை சங்கரை பார்க்கவும், நுகரவும் வாய்ப்பின்றி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
சங்கரின் தனிமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விருப்பங்களை ஆராய்ந்து வருவதாக மிருகக்காட்சிசாலையின் இயக்குநர் சோனாலி கோஷ் கடந்த ஆண்டு நவம்பரில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியிருக்கிறார்.
சங்கருக்கு ஒரு துணையைக் கண்டுபிடிக்க முடியுமா அல்லது அதை திரும்ப தாயகத்துக்கு செல்ல முடியுமா என்று ஆப்ரிக்காவில் உள்ள பூங்காக்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
மிருகக்காட்சிசாலையில் மூன்று யானைகளை ஒன்று சேர்க்க முயற்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் சங்கர் "பயிற்சி பெறாத யானை மற்றும் பிடிவாத குணம் கொண்டவன்" என்பதால் அந்த ஒருங்கிணைப்புக்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது என்று மிருகக்காட்சிசாலையின் முன்னாள் இயக்குநர் ரமேஷ் பாண்டே கூறினார்.
இதற்கு சங்கரின் சூழலே காரணம் என ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
"சங்கர் தனிமைப்படுத்தப்பட்டதால் இது நடக்கிறது," என்கிறார் இந்தியாவின் லாப நோக்கற்ற உலக விலங்குகள் பாதுகாப்பு நிறுவனத்தின் வனவிலங்கு திட்ட மேலாளர் சுபோப்ரோடோ கோஷ்.
ஆண் ஆப்ரிக்க யானைகள், "சமூகப் பிணைப்புகளை உருவாக்கும்" திறன் கொண்டவை என்று அவர் மேலும் கூறுகிறார்.
காடுகளில் உள்ள யானைகள் கூட்டங்கூட்டமாக வாழ்கின்றன. அவை ஒன்றுடன் ஒன்று வாழ்நாள் முழுவதும் பிணைப்பை உருவாக்குகின்றன. சிறந்த சூழ்நிலையில் கூட, ஒரு மிருகக்காட்சிசாலையில் அத்தகைய உறவைப் பிரதிபலிப்பது கடினம்.நெரிசலான அடைக்கப்பட்ட இடங்களில் யானைகளை வைத்திருப்பது உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
பல ஆண்டுகளாக, சங்கரின் இக்கட்டான நிலை, விலங்குகள் ஆதரவு குழுக்கள் மற்றும் மீட்பு அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது,
பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட அஸ்பினால் ஃபவுண்டேஷன், சங்கரை ஆப்ரிக்காவில் பொருத்தமான இடத்தில் தங்களுடைய செலவில் மறுவாழ்வு அளிக்க முன்வந்துள்ளது.
நிகிதா தவான், "சங்கரை விடுவித்து, ஏராளமான ஆப்ரிக்க யானைகள் இருக்கும் வனவிலங்கு புகலிடம் அல்லது சரணாலயத்திற்கு அனுப்புங்கள்," என மிருகக்காட்சி சாலையை வலியுறுத்தும் ஆன்லைன் மனு அனுப்பும் இயக்கத்தை தொடங்கியுள்ளார்.
இதுவரை இதில் 96,500 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
சங்கரை இடமாற்றம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டால், அதற்கு நிபுணர்களால் பரிசோதனை செய்யப்படும். பிறகு இடமாற்றத்திற்கு சங்கர் யானை தகுதி பெறுகிறதா என்பதை தீர்மானிக்கப்படும் என்கிறார் சுபோப்ரோடோ கோஷ்.
"சங்கரை மிருகக்காட்சிசாலையில் இருந்து மீட்டு வேறெங்காவது விட்டு விடுவது இல்லை எங்களுடைய யோசனை" என்கிறார் அவர்.
யானை போன்ற உணர்வுள்ள உயிரினத்தை சிறைப்பிடித்து வைத்திருப்பது சரியா என்ற பெரிய கேள்விகளை சங்கரின் வழக்கு எழுப்புகிறது.
"யானைகள் மிருகக்காட்சிசாலைகளில் வெறுமனே வளர முடியாது," எனக்கூறும் நிகிதா கோஷ், "உலகம் முழுவதிலும் இருந்து இதை உறுதிப்படுத்தும் பல ஆய்வுகள் உள்ளன. எனவே இயற்கைக்கு மாறான இடங்களில் சித்திரவதை மற்றும் துன்பத்திற்கு உள்ளாக்கப்படுவதற்காக மட்டுமே யானைகளை பிடிப்பதில் அர்த்தமில்லை," என்றார்.
2009 ஆம் ஆண்டு, இந்திய மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், மிருகக்காட்சிசாலைகளில் யானைகளை காட்சிப்படுத்த தடை விதித்துள்ளது. மேலும், ஆறு மாதங்களுக்கு மேல் யானையை தனியாக வைத்திருப்பதையும் அந்த ஆணையம் தடை செய்துள்ளது.
ஆனால், சங்கர் போன்ற யானைகளின் நிலைமையை மேம்படுத்த இது எந்த வகையிலும் உதவவில்லை என்று செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
"சங்கரின் சுதந்திரத்திற்கு ஆதரவான தீர்ப்பு கிடைக்க நீண்ட காலம் ஆகலாம். ஆனால், இந்த வழக்கு ஒரு முன்னுதாரணமாகும். இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து யானைகளை மீட்கவும் இது முன்னோடியாகும்," என்கிறார் சுபோப்ரோடோ கோஷ்.

பிற செய்திகள்:
- இந்திய பட்ஜெட் -2022 தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?
- இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு
- யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம்
- நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை
- ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் வென்று உலக சாதனை
- திப்பு சுல்தான் மதமாற்றம் செய்த கொடுங்கோலனா? விடுதலைக்கு போராடிய வீரனா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












