You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனடா உறைபனியில் இறந்த குஜராத்திகள்: பிபிசி கள ஆய்வில் கண்ட உண்மைகள்
- எழுதியவர், ராக்ஸி காக்டேகர் சாரா & பார்கவ் பாரிக்
- பதவி, பிபிசி குஜராத்தி
குஜராத்தில், காந்திநகர் மாவட்டம், கலோல் வட்டத்தில் உள்ள டிங்குச்சா கிராமத்தில் நுழைந்தவுடன், ஆளரவமற்ற ஒரு பங்களா எல்லோரையும் வரவேற்கும். கடந்த சில நாள்களாக இந்த பங்களா ஊடகத்தினர் சூழ்ந்து நிற்கும் பரபரப்பான இடமாக ஆகியிருக்கிறது.
காரணம், இந்த வீட்டைச் சேர்ந்த 4 பேர் கனடா நாட்டில் காணாமல் போயிருக்கின்றனர். இவர்கள் நான்கு பேரும் சட்டவிரோதமாக கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றபோது மைனஸ் 35 டிகிரி பனியில் உறைந்து இறந்து போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஜகதீஷ் பட்டேல், அவரது மனைவி வைஷாலி பட்டேல், அவர்களது மகள் விஹாங்கா மற்றும் 3 வயது மகன் தார்மிக் ஆகியோர்தான் அந்த 4 பேர். கவலை தோய்ந்திருக்கும் அந்த கிராமத்துக்கு பிபிசி குழு சென்றது.
பிபிசியிடம் பேசிய ஜகதீஷ் பட்டேலின் தந்தை பல்தேவ்பாய், "10 நாள்கள் முன்புதான் அவர்கள் கனடா சென்றனர். தங்களுக்கு கனடா விசா கிடைத்துவிட்டதாக தொலைபேசியில் என்னிடம் கூறினான். கனடா சென்று சேர்ந்த பிறகு விரிவாகப் பேசுவதாகக் கூறினான். ஆனால், அதன் பிறகு பேசவில்லை. உறவினர்கள் மூலம் விவரம் தெரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தோம்," என்றார்.
பல்தேவ் ஒரு விவசாயி. அவருக்கு 20 பிகா நிலம் இருக்கிறது. தந்தைக்கு விவசாயத்தில் உதவி வந்த ஜகதீஷ், தனது குழந்தைகளுக்கு நல்ல கல்வி தரவேண்டும் என்று அருகில் உள்ள கலோல் நகரில் குடியேறினார். அங்கே மின்சாதனப் பொருள் கடை ஒன்றும் நடத்திவந்தார் என்று கூறிய பல்தேவ், அவர்கள் எப்போது கனடா விசாவுக்கு விண்ணிப்பித்தார்கள் என்பது தமக்குத் தெரியாது என்கிறார்.
10 நாள்கள் முன்பு, பார்வையாளர் விசாவில் அவர்கள் கனடா சென்றதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால், ஐந்து நாள்களுக்கும் மேலாக அவர்களிடம் இருந்து தொடர்பு இல்லை என்கிறார்கள்.
அவர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் போகவே, இந்திய வெளியுறவுத் துறையை தொடர்புகொள்ள முடிவு செய்து ஒரு இமெயிலும் அனுப்பினார்கள் என்கிறார் பெயர் வெளியிடவிரும்பாத கிராமவாசி ஒருவர்.
கலோலில் ஜகதீஷுக்கு சொந்த வீடு இருக்கிறது என்று கூறிய அவர், கிராமத்தில் தந்தைக்கு விவசாயத்தில் உதவுவது மட்டுமல்லாமல், விழாக்காலங்களில் துணிமணிகள் விற்பதும் அவருக்கு வழக்கம் என்கிறார். கலோல் நகரிலேயே ஆண்கள் துணிக்கான மொத்த வணிகர் அவர் என்றும் கூறுகிறார் அந்த கிராமவாசி.
"இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும், யாரோ ஒரு நெருங்கிய உறவினர் வெளிநாட்டில் இருந்தால்தான் பெருமை. ஒவ்வொரு குடும்பத்திலும் யாரோ ஒருவர் வெளிநாட்டுக்குச் செல்லவேண்டும் என்ற அழுத்தம் இங்கே உண்டு. குடும்பத்தில் யாரும் வெளிநாட்டில் இல்லாத ஒரு இளைஞனுக்கு திருமணத்துக்குப் பெண் கிடைப்பது கடினம்," என்கிறார் பெயர் வெளியிடவிரும்பாத இன்னொரு கிராமவாசி.
இது ஏன் என்று பிபிசி செய்தியாளர் விசாரித்தார்.
இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அமெரிக்க விசா பெறுவது தொடர்பான விதிகள் அத்துப்படி என்கிறார் இன்னொரு கிராமவாசி. அவர்களுக்கு பலதரப்பட்ட விசாக்களுக்கு இடையில் உள்ள வேறுபாடு, எந்த விசா இருந்தால் கிரீன் கார்டு அல்லது அமெரிக்கக் குடியுரிமை கிடைக்கும் என்பது தெரியும்.
பயணத்துக்கு ஓரளவு பணம் திரட்ட முடியாதவர்கள்தான் இந்த கிராமத்தில் உட்கார்ந்திருப்பார்கள். மற்றவர்கள் எல்லோரும் வெளிநாட்டுக்கு கிளம்பிவிட்டிருப்பார்கள் என்கிறார் அப்படி விவரம் தெரிந்த கிராமவாசி ஒருவர்.
இந்த கிராமத்தை சேர்ந்த என்.ஆர்.ஐ. ஒருவர் தந்த நிதியில் சுடுகாட்டுக்குத் தேவையான கட்டுமானம் செய்து வருவதாகவும், இந்த ஊரில் 1.5 கோடி ரூபாய் செலவில் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் கட்டுமான ஒப்பந்ததாரரான கே.எல். பட்டேல்.
அவர்கள் எப்படி அமெரிக்கா போகிறார்கள்? பிறகு என்ன செய்கிறார்கள்?
இந்த ஊரில் வளர்கிற ஒவ்வொரு குழந்தையும், வெளிநாட்டுக்குச் செல்லவேண்டும் என்ற கனவோடே வளர்கிறது என்கிறார் ஒரு ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர். இங்குள்ள ஒவ்வொருவரும் தங்களை அமெரிக்காவில் ஏதோ ஒரு வகையில் நுழைத்துவிடும் ஏஜென்டுக்கு பணம் கொடுப்பதற்காகவே பாடுபட்டு பணம் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என பிபிசியிடம் கூறினார் அவர்.
"ஏற்கெனவே பல சந்தர்ப்பங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவுக்கு சென்ற பலரும்கூட இப்போது நன்றாகவே இருக்கிறார்கள்" என்கிறார் அவர்.
1998ல் அமெரிக்காவுக்கு சென்ற அம்ரத் பட்டேல் இரண்டே ஆண்டுகளில் கிரீன் கார்டு பெற்றுவிட்டார். பிறகு தமது குடும்பத்தையும் அமெரிக்காவுக்கு அழைத்துக்கொண்டார். இப்போது அவர்கள் சட்டப்படியான அமெரிக்கக் குடிமக்கள். அவர்கள் உணவு தொடர்புடைய தொழிலில் இருக்கிறார்கள். அவர் ஓய்வு பெற்றுவிட்டார். இப்போது ஆண்டுக்கு ஐந்து மாதம் கிராமத்தில் செலவிடுகிறார். இங்கிருந்து அமெரிக்கா செல்கிற யாருக்கும் கொஞ்சம் ஆரம்பகால ஒத்தாசை தேவைப்படும். தன்னைப் போன்ற சமுதாய ஆட்கள் அவர்களுக்கு உதவி செய்வார்கள் என்கிறார் அவர்.
ஆரம்பத்தில் அமெரிக்கா செல்கிற எவரும் முதலில் கடைகளில், கவுன்டர்களில் திறனற்ற தொழிலாளிகளாகவே வேலை செய்வார்கள். பிறகு கற்றுக்கொண்டு வேறு வேலைகளுக்குச் செல்வார்கள். இங்கிருந்து போகிற எல்லோருமே சட்டவிரோதமாகத்தான் போகிறார்கள் என்று சொல்ல முடியாது என்கிறார் அவர். சட்டப்படி போகிற பலர் இருக்கிறார்கள் என்கிறார் அவர்.
ஜகதீஷ் பட்டேல் குடும்பத்துக்கு என்ன ஆனது?
கனடா சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், ஜகதீஷ் பட்டேலின் பெற்றோர் ஊரில் இருந்து கிளம்பி அகமதாபாத் போய்விட்டனர். இப்போது இந்திய அரசிடம் இருந்து அதிகாரபூர்வமான தகவல் ஏதாவது வருமா என்று காத்திருக்கின்றனர்.
வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து அதிகாரபூர்வமான தகவல் ஏதும் வரும் என்று இதுவரை காத்திருப்பதாக பிபிசியிடம் கூறினார் டிங்குச்சா கிராமத்தின் அரசு அதிகாரி ஜெயேஷ் சௌதாரி.
"கனடா எல்லையில் இறந்து போனவர்களாக சர்வதேச ஊடகங்களில் குறிப்பிடப்பட்டவர்களின் சடலங்கள் பற்றிய தகவல்களும், இந்த கிராமத்தைச் சேர்ந்த காணாமல் போன நான்கு பேரின் அடையாளங்களும் ஒத்துப் போகின்றன என்பதை மட்டும்தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும்," என்றார் அவர்.
பிற செய்திகள்:
- பிபிசி ஸ்போர்ட்ஸ் ஹேக்கத்தான் என்றால் என்ன?
- இளவரசி லத்தீஃபா: மாயமாகிப் போன துபாய் ஆட்சியாளரின் மகள்
- தமிழக தேர்தல்: 1957இல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது எப்படி?
- வீடுகட்ட வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தை கரையான் தின்ற சோகம்
- ஆஸ்திரேலியாவில் செய்திகளை முடக்கும் ஃபேஸ்புக்: அதிகரிக்கும் முரண்- என்ன நடக்கிறது?
- புதுச்சேரியில் ராகுல் காந்திக்கு தவறாக மொழிபெயர்த்த முதல்வர் நாராயணசாமி தரும் காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: