You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுச்சேரியில் ராகுல் காந்திக்கு தவறாக மொழிபெயர்த்த முதல்வர் நாராயணசாமி தரும் காரணம் என்ன?
புதுச்சேரியில் மீனவப் பெண் ஒருவர் பேசியதை தவறாக மொழி பெயர்த்தது ஏன் என முதல்வர் நாராயணசாமி விளக்கமளித்துள்ளார்.
நடந்து என்ன?
தேர்தல் பிரசார பயணமாக நேற்று ராகுல் காந்தி புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்திருந்தார். அவர் புதுச்சேரி வந்தவுடன் முதற்கட்ட பயணமாகப் புதுச்சேரி சோலை நகர் கடற்கரையோர மீனவ கிராமத்திற்குச் சென்று மீனவ பெண்கள் மற்றும் மீனவ மக்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது மீனவர்களின் பிரச்னைகள் குறித்து ஒவ்வொருவரிடமும் நேரடியாக கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் மக்கள் கூறும் கருத்துக்களை ராகுல்காந்திக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மொழிபெயர்ப்பு செய்தார்.
தொடர்ச்சியாக மீனவர்களிடமும், மீனவ பெண்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ராகுல்காந்தியிடம் நிகழ்ச்சி முடியும் தருவாயில், புதுச்சேரி சோலை நகரைச் சேர்ந்த அம்பிகா என்ற வயதான பெண்மணி ஒருவர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார் அவை அனைத்தையும் முதல்வர் நாராயணசாமி மொழிபெயர்த்துக் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதியவர் அம்பிகா, "கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் கடல்நீர் உட்புகுவதால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எங்களுக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை," என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், முதல்வர் நாராயணசாமியை குறிப்பிட்டு, "அவரே எங்களை ஒரு காலமாவது புயலுக்கு வந்து பார்த்து இருக்கிறாரா?," என்று கேள்வி எழுப்பினார்.
இதனை ராகுல்காந்திக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்த நாராயணசாமி, "புயல் காலங்களில் நான் இங்கே வந்து பார்வையிட்டுச் சென்றதை தான் அவர் குறிப்பிடுகிறார்," எனத் தெரிவித்தார்.
மீனவ பெண் தன்னை பற்றிக் கூறிய புகாரை ராகுல்காந்தியிடம் புதுச்சேரி முதல்வர் மாற்றிக் கூறுகிறார் என்று கூறி சமூக வலைத்தளத்தில் அந்த காணொளிக் காட்சி வைரலானது.
மாற்றி பேசியது ஏன்?
பின்னர் முதல்வர் நாராயணசாமி எதற்காக அந்த பெண் பேசியதை மாற்றி மொழிபெயர்ப்பு செய்தேன் என்பது குறித்து விளக்கமளித்தார். மேலும் நிவர் புயலின் போது பாதிக்கப்பட்ட இந்த மீனவ பகுதிக்கு அப்பகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டனுடன் நேரடியாக வந்து ஆய்வு செய்த வீடியோ ஆதாரத்தைத் தனது டிவிட்டர் பக்கத்திலும், செய்தி ஊடகத்திற்கும் வெளியிட்டார் அவர்.
"தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புரளி செய்தியில் அப்பெண் கூறியது முற்றிலும் ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்பதற்கான சான்றை இப்புகைப்படத்தில் நீங்கள் பார்க்கலாம். கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி முத்தியால்பேட்டை மற்றும் ராஜ்பவன் தொகுதிகளில் உள்ள கரையோர கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டு, மனித உயிர்கள், விலங்குகள் மற்றும் படகு, இயந்திரம் போன்ற சொத்துக்களின் பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன," என்று தெரிவித்துள்ளார் முதல்வர்.
மேலும் அப்பெண் நிவர் புயல் வந்த பொழுது முதல்வர் அவர்கள் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதியில் வந்து பார்க்கவில்லை என்று ராகுல்காந்தியிடம் கூறினார். அவர்கள் கேள்விக்குப் பதிலளிக்கும் முறையில், ராகுல்காந்தியிடம் நான் இங்கு வந்தேன் என்பதை தெரிவிக்கவே, அவ்வாறு பதிலளித்ததாக நாராயணசாமி தெரிவித்தார்.
இந்நிலையில், தான் தவறுதலாக ராகுல்காந்தியிடம் குறிப்பிட்டுவிட்டதாகவும் ஆனால் அதை முதல்வர் திருத்தி சரியாக ராகுல்காந்தியிடம் கூறியதாகவும் முதியவர் அம்பிகா காணொளி வாயிலாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
மேலும் முதியவர் அம்பிகாவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது 70 வயதை கடந்த அவர் வயோதிகம் காரணமாக மாற்றி கூறிவிட்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: