வீடுகட்ட வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணம் கரையானுக்கு இரையானது - அதிர்ச்சியில் விவசாயி

இன்று (18.02.2021) வியாழக்கிழமை இந்தியாவின் சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மைலவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜமலையா. இவர் ஒரு விவசாயி. இவர் வீட்டில் பன்றிகளையும் வளர்த்து வருகிறார். வேளாண் தொழிலில் பல ஆண்டுகளாக உழைத்து சிறிது சிறிதாக பணத்தை சேர்த்த வைத்து இருந்தார்.

அவருக்கு வங்கியில் கணக்கு இல்லாததால் வீட்டிலேயே இரும்பு பெட்டி ஒன்றில் அதனை பாதுகாத்து வைத்திருந்தார். அவர் இருக்கும் வீடும் மிக சிறியது. இதனால் ஜமலையா புதிய வீடு கட்ட முடிவு செய்தார். புதிய வீடு கட்டும் பணிக்கு பணம் தேவைப்பட்டதை அடுத்து பெட்டியை திறந்த ஜமலையா குடும்பத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. நீண்டகாலமாக பணத்தை பயன்படுத்தாததால் ரூபாய் நோட்டுகளை கரையான்கள் சில்லறையாக துளைத்துவிட்டன என தினத்தந்தியில் செய்தி பிரசூரமாகி உள்ளது.

பெரும் இன்னல்களுக்கு இடையே சேமித்து வைத்திருந்த ₹5 லட்சத்தை கரையான்கள் உணவாக்கி கொண்டதால் விவசாயி ஜமலையாவின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். வீடுகட்டும் தனது நீண்டநாள் கனவை கரையான்கள் கரைத்துவிட்டதாக விவசாயி வேதனையுடன் தெரிவித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

பெட்ரோல் ரூ.100-க்குக் காரணம் யார்?: பிரதமர் மோடி விளக்கம்

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை புதன்கிழமை ரூ. 100-ஐ தாண்டிய நிலையில், "இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியைக் குறைப்பதில் முந்தைய அரசு கவனம் செலுத்தத் தவறியதே பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் இப்போது பாதிக்கப்படுவதற்குக் காரணம்" என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் மாற்றியமைத்து வருகின்றன. கடந்த 9 நாட்களாக தொடர்ச்சியாக விலை உயர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100-ஐத் தாண்டி விற்பனையானது.

சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள தமிழகத்தில் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை புதன்கிழமை காணொளி வழியில் தொடக்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோதி "இந்தியா 2019-20 -ஆம் ஆண்டில் தனது எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேல் இறக்குமதி செய்தது. அதுபோல, எரிவாயு தேவையில் 53 சதவீதத்தை இறக்குமதி செய்தது. இதுபோல, அதிக அளவில் இறக்குமதியையே நாம் நம்பியிருக்க முடியுமா?

நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை என்றபோதும், இறக்குமதியை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் முன்னரே கவனம் செலுத்தியிருந்தால், நடுத்தர மக்கள் மீது இந்த அளவு சுமை ஏற்றப்பட்டிருக்காது.

நடுத்தர மக்களின் இந்த நிலையை மத்திய அரசு கருத்தில் கொண்டு பெட்ரோலில் எத்தனால் கலக்கும் விகிதத்தை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை பயன்படுத்துவதன் மீது கவனம் செலுத்தப்படுகிறது. வரும் 2030-இல் நாட்டின் எரிசக்தி உற்பத்தியில் 40 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக இருக்கும்.

இயற்கை எரிவாயு மீது பலதரப்பட்ட வரிகள் விதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அதுவும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையின் கீழ் கொண்டுவரப்படும்," என மோதி கூறியதாக அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.

ஹெலிகாப்டர் வாங்கிய பால் பண்ணை முதலாளி

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் உள்ள வடபே கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தன் போயர் அரிசி மண்டி, பால் பண்ணை, ரியல் எஸ்டேட் என பலவித தொழில்களைச் செய்துவருகிறார். அவர் தொழில் பயணமாக பல்வேறு இடங்களுக்கு பயணிக்கும்போது, சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் அவருக்கு நேரம் விரயம் ஆகிறது. இதைத் தவிர்க்க அவர் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார் என இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

ஹெலிகாப்டரை நிறுத்துவதற்கு அவருடைய வடபே கிராமத்தில் ஹெலிபேட் அமைத்துள்ளார். ஒரு விமானி, இரண்டு பொறியாளர்கள் மற்றும் ஐந்து பாதுகாவலர்களை நியமனம் செய்திருக்கிறார். அவர்களுக்கு மாதம் 10 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்க இருக்கிறார்.

'பக்கத்தில் இருக்கும் மும்பைக்கு செல்வதென்றால் என்னுடைய முழுநாளும் வீணாகப் போய்விடுகிறது.

மாதம் நான்கு முறை நான்பிற மாநிலங்களுக்குப் பயணிக்கிறேன். போக்குவரத்து நெரிசல், நேரம் விரயம் காரணமாகவே ஹெலிகாப்டர் வாங்க முடிவெடுத்தேன்' என்று அவர் கூறியுள்ளாதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: