#MeToo பிரியா ரமணி: தீர்ப்பை கொண்டாடும் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள்

இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் புகார் கூறி பிரியா ரமணிக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை பெண் உரிமை செயல்பாட்டாளர்களும் பெண் பத்திரிகையாளர்களும் வரவேற்றுள்ளனர்.

வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட நடவடிக்கையை, பெண்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுவதாக பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

#MeTooIndia என்ற பெயரில் தொடங்கப்பட்ட @IndiaMeToo என்ற ட்விட்டர் குழு, இந்தியாவில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்கள் தங்களின் அனுபவத்தை பகிரும் நோக்குடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அந்த இயக்கத்தின் ட்விட்டர் பக்கமும், பிரியா ரமணியின் தீர்ப்பை வரவேற்றிருக்கிறது.

"விவரிக்க வார்த்தைகளே இல்லை... ஆனந்தக் கண்ணீரும் ஆதரவான குரலும் கேட்கிறது. பிரியா ரமணியின் துணிச்சலுக்காக ஆழ்ந்த நன்றிக்கடன்பட்டுள்ளோம்," என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்தபோது, மூத்த பத்திரிகையாளர் பர்கா தத்தும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஆமாம், பிரியா ரமணிக்கு எதிரான"வழக்கில் அவர் வென்றுள்ளார். தங்களுக்கு நிகழும் கொடுமைக்கு எதிராக அமைதி காத்து வந்த பெண்கள் குரல் கொடுக்க இந்த தீர்ப்பு துணிச்சலைத் தரும்," என்று பர்கா கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் நீலாஞ்சனா ராய், "தெளிவான மனதுடனும் நம்பிக்கையுடனும் பிரியா ரமணி நீதிமன்றத்தில் உறுதியாக இருந்தார். அவர் சரியான முறையில் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்," என்று கூறியுள்ளார். எம்.ஜே. அக்பருக்கு எதிராக குரல் கொடுத்த அனைத்து பெண்களுக்கும் எனது வணக்கம் என்று மேலும அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடதுசாரி தலைவரான கவிதா கிருஷ்ணன், "பிரியா ரமணி வாழ்க. உங்களை சுரண்டும் வகையில் செயல்பட்ட எம்.ஜே. அக்பர் உங்களுக்கு எதிராக வழக்காடியபோதும் நீங்கள் விடுதலை பெற்றுள்ளீர்கள். இந்த தீர்ப்பு பெண்களுக்கு மேலும் அதிகாரமளிக்கப்படுவதை ஊக்குவிக்கிறது. பல நேரங்களில் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் அமைதியாகி விடுவார்கள். அந்த நிலையை இந்த தீர்ப்பு மாற்றும் என நம்புகிறேன்," என கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் ராணா அயூப், "பிரியா... எங்களுக்காக நீங்கள் போராடியிருக்கிறீர்கள்," என்று கூறியுள்ளார்.

இதே வேளை சமூக ஆர்வலரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண், "பாலியல் தொந்தரவுக்கு ஆளானதுடன் நீதிமன்ற நடைமுறை என்ற பெயரிலும் பிரியா ரமணி துன்புறுத்தல்களை அனுபவித்தார். இதற்காக அவருக்கு எம்.ஜே. அக்பர் இழப்பீடு தர வேண்டும்," என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: