You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதியின் யூட்யூப் பக்கத்தில் இருந்து 'டெலிப்ராம்ப்டர்' நிமிடங்கள் நீக்கம் - தொடரும் சர்ச்சை
உலக பொருளாதார மாநாட்டில் கடந்த திங்கட்கிழமை காணொளி வாயிலாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றியபோது திடீரென அவர் தமது பேச்சை சில நிமிடங்கள் தொடர முடியாமல் இடைநிறுத்தியதற்கு அவரது கண் முன் இருந்த டெலிப்ராம்ப்டர் சாதன குளறுபடியே காரணம் என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
உண்மையில் அன்றைய தினம் என்ன நடந்தது?
டாவோஸில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதியின் உரையின் போது திடீரென அவர் தமது உரையை இடைநிறுத்த வேண்டியதாயிற்று.
ஒன்று முதல் இரண்டு மணி நேரமானாலும் கூட பிரதமர் நரேந்திர மோதி சளைக்காமல் எந்த இடத்திலும் எந்த விஷயத்தை பற்றியும் இந்தி, ஆங்கில மொழிகளில் சொற்பொழிவோ உரையோ ஆற்றக் கூடிய புலமை பெற்றவர் நரேந்திர மோதி என வழக்கமாக பலராலும் பாராடப்படுவார்.
ஆனால், இந்த புகழ்ச்சிக்கு பின்புலமாக அவருக்கு உதவுவது, மோதியின் கண் முன்னே சாதாரணமாக நேயர்கள் அல்லது பார்வையாளர்கள் காண முடியாத வகையில் இடம்பெற்றிருக்கும் டெலிப்ராம்ப்டர் எனப்படும் திரை காண் எழுத்து ஓட்ட சாதனம் என்றும் அதில் மோதியின் பேச்சு ஓட்டத்துக்கு தக்கவாறு அவரது அலுவலகத்தின் கணிப்பொறி ஊழியர்கள் சாதனத்தை இயக்குவர் என்றும் ஒரு விமர்சனம் உண்டு.
இதன் காரணாகவே நரேந்திர மோதி பெரும்பாலான இடங்களில் இந்தி மொழியும், ஒரு சில நேரத்தில் குறிப்பாக ஆங்கிலத்தில் பேசும் நிலை வந்தால் கூட இயல்பாக சொந்தமாக மனதில் பட்டதை உரையாற்றுவது போல பாவனை செய்து எதிரே பார்வையாளர் கண்டுபிடிக்காத வகையில் பேசுவதாகவும் கூறப்படுவதுண்டு.
இந்தியாவில் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அந்த மாநில மொழியில் ஒரு சில வார்த்தைகள் அல்லது கவிதைகள் அல்லது முக்கிய தலைவரின் வரிகளை அந்த மாநில மொழியில் நரேந்திர மோதி உச்சரித்து பார்வையாளர்களைக் கவருவது வழக்கம். அதற்கு பக்க பலமாக அவருக்கு உதவுவது இந்த டெலிப்ராம்ப்டர் என்றும் கூறப்படுவதுண்டு.
இந்த நிலையில், டாவோஸ் மாநாட்டில் திடீரென மோதி தமது பேச்சை இடைநிறுத்தம் செய்தபோது, அவர் அடுத்து என்ன உச்சரிப்பது எனத் தெரியாமல் வார்த்தைகளுக்குத் தடுமாறினாரா இல்லை வேறு ஏதேனும் பிரச்னை நடந்ததா என்பதை அறிய பலரும் முற்பட்டனர்.
ஒரு சில ஊடகங்கள், டெலிப்ராம்ப்டர் சாதனத்தின் குளறுபடியால் மோதி சில நிமிடங்கள் பேச வார்த்தை இல்லாமல் தடுமாறியதாகவும் மற்றவர்கள், அது டெலிப்ராம்ப்டர் பிரச்னை இல்லை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் ஒலி கேட்பு அல்லது மொழிபெயர்ப்பு தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால்தான் அவர் தமது பேச்சை இடைநிறுத்தம் செய்தார் என்றும் கூறினார்கள்.
இத்தனைக்கும் இந்த விவகாரம் அனைத்தும் உலக பொருளாதார மன்றத்தின் அலுவல்பூர்வ யூட்யூப் பக்க நேரலை ஒளிபரப்பில் பதிவானது.
பிரதமர் நரேந்திர மோதி திடீரென தமது பேச்சை இடைநிறுத்தம் செய்து விட்டு தனது இடதுபக்கமாக யாரையோ திரும்பிப் பார்த்து விட்டு, பிறகு பேச்சை தொடர முன்னோக்கி பார்க்கிறார். ஆனாலும், ஒரு வார்த்தை கூட மேற்கொண்டு பேசாமல் பிறகு தமது வலது பக்க காதில் பொருத்தப்பட்டிருந்த சாதனத்தை அழுத்தி மாநாட்டுத் தலைவரிடம் நான் பேசுவது கேட்கிறதா என்று கேட்கிறார். அது காண்பதற்கு அவர் எதையோ சமாளிப்பது போல தோன்றியது.
பிரதமரின் திடீர் கேள்வியைத் தொடர்ந்து, என்னால் உங்களின் பேச்சை கேட்க முடிகிறது என்று அந்த மாநாட்டுத் தலைவர் கூறவே, சுதாரித்துக் கொண்ட பிரதமர் மோதி, மீண்டும் எனது உரையை மொழிபெயர்ப்பவர் பேசுவது உங்களுக்குக் கேட்கிறதா என்றும் பேசுகிறார்.
இப்போது ஏதோ தொழில்நுட்ப பிரச்னையில் பிரதமர் சிக்கியிருப்பதை உணர்ந்த மன்றத்தின் செயல் தலைவர் கிளாஸ் ஸ்குவாப், பிரதமர் அவர்களே... சில நிமிடங்கள் காத்திருங்கள். அந்த இடைவெளியில் நான் முன்னுரையை கொடுக்கிறேன். பிறகு நீங்கள் உங்களுடைய உரையை தொடரலாம் என்று கூறி நிலைமையை சமாளிப்பதுடன் பிரதமரின் பேச்சு சில நிமிடங்கள் இடைநிறுத்தப்படுகிறது.
பிறகு சில நிமிடங்கள் கழித்து, அவர் தமது உரையை ஆரம்பத்தில் இருந்தே எந்த பிரச்னையுமின்றி பேசி முடிக்கிறார்.
முன்னதாக, அவர் உரையை தொடங்கும் முன்பு காதில் சொருகியிருந்த கேட்பொலி கருவியை வெளியே எடுத்துப் போடுகிறார். அவரது முகத்தை இயல்பாக வைத்திருக்க முயன்றிருந்தபோதும், நிகழ்வு முடியும்வரை அவர் சற்று கடுமையாகவே காணப்பட்டார்.
இந்த மாநாட்டில் அவர் ஆற்றிய உரையை விட, அந்த உரையின் தொடக்கத்தில் இடைநின்ற அந்த சில நிமிடங்கள்தான் பேசுபொருளாயின.
காரணம், மோதியால் சில நிமிடங்கள் கூட சாதனத்தின் உதவியின்றி பேச முடியாது என்று காங்கிரஸ் தலைவர்கள் வரிசையாக சமூக ஊடக பக்கங்களில் அவர் வார்த்தைகளுக்கு தடுமாறிய காணொளி கிளிப்பிங்கை பகிர்ந்து விமர்சனம் செய்தனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "டெலிப்ராம்ப்டரால் கூட இவ்வளவு பொய்களைத் தாங்க முடியவில்லை" என்று பதிவிட்டிருந்தார்.
காங்கிரஸ் இளைஞர் பிரிவு தலைவர் ஸ்ரீனிவாஸ் பிரதமர் மோதியின் இருபுறமும் டெலி ப்ராம்ப்டர்களுடன் இருக்கும் படத்தை ட்வீட் செய்துள்ளார்.
இருப்பினும், சமூக ஊடக பக்கங்களில் பகிரப்படும் காணொளியின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் ஆல்ட்நியூஸ் என்ற இணையதளத்தின் இணை நிறுவனர் பிரதீக் சின்ஹா, பிரதமர் மோதியின் உரைக்கு தடங்கலாக அமைந்தது அவரது டெலிப்ராம்ப்டர் சாதனம் என தாம் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
பிரதமரின் உரையின் தொடர்ச்சியாக வெளியான மற்றொரு ஆதாரத்திலிருந்து வெளியிடப்பட்ட காணொளியை பகிர்ந்து கொண்ட பிரதிக் சின்ஹா, "பிரதமரின் டெலிப்ராம்ப்டர் தவறு செய்திருக்க வாய்ப்பில்லை. உலக பொருளாதார மன்றத்தின் பதிவைப் பார்த்தால், பின்னால் யாரோ ஒருவர் பேசுவதைக் கேட்கலாம்.
சார், எல்லாம் இணைக்கப்பட்டுள்ளதா என்று ஒருமுறை அவரிடம் கேளுங்கள் என்று ஒருவர் பேசுவதை பிரதீக் சின்ஹா குறிப்பிடுகிறார்.
ஆனால், இந்த உரையாடல்கள் பிரதமரின் யூடியூப் சேனலில் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட காணொளியில் தெளிவாக கேட்கவில்லை," என்று அவர் கூறியுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில். "பொதுவாக டெலிப்ராம்ப்டர் முன்னால் இருக்கும். பிரதமரின் பேச்சு தடங்கலானபோது அவர் முன்பக்கமாக கவனிக்காமல் தமது குழுவினர் அமர்ந்திருக்கும் இடது பக்கமாகப் பார்க்கிறார். ஒருவேளை அவரது இடதுபக்கமாகத்தான் பிரதமர் அலுவலக குழு அமர்ந்திருக்கலாம் என கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பிரதமர் அலுவலகம் என்ன சொல்ல விரும்புகிறது என்று தொடர்ச்சியாக அதை தொடர்பு கொண்டு கேள்வி கேட்டபோதும், அதிகாரிகள் எவரும் அது குறித்து பேச மறுத்தது பல ஊகங்களுக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் பிரதமரின் உரையை நேரலை செய்த அவரது யூட்யூப் பக்கத்தில் அவரது பேச்சு தடைபட்ட அந்த சில நிமிட காட்சிகள் வெட்டப்பட்டிருந்தன.
உலக பொருளாதார மன்றத்தின் யூட்யூப் பக்கம், இணைய பக்கத்திலும் அந்த குறிப்பிட்ட காட்சிகள் வெட்டப்பட்டு பிரதமரின் முழு உரை மட்டும் சேர்க்கப்பட்டிருந்தன.
மோதியும் டெலிப்ராம்ப்டரும்
குஜராத்தி மொழியை தாய்மொழியாகக் கொண்ட நரேந்திர மோதி, இந்தி மொழி, ஆங்கிலம் ஆகியவற்றில் இலக்கணப் பிழை, எழுத்துப் பிழை மற்றும் பேச்சுப் பிழையின்றி உரையாற்றக் கூடிய ஆற்றலைக் கொண்டவர் என்று பலராலும் பாராட்டப்படுபவர். இந்த திறமை குறித்து பல நேரங்களில் அவரிடம் கேட்கப்பட்டபோதும், புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்திருக்கிறார் நரேந்திர மோதி.
ஆனால் அவரது மொழிப்புலமை உரைக்கு பின்புலமே இந்த டெலிப்ராம்ப்டர்கள்தான் என்ற விவாதம் பல ஆண்டுகளாகவே தொடர்கிறது.
2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோதி கூட்டம் நடத்தினார்.
2019ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி நடந்த அந்தக் கூட்டத்தில் மோதிக்கு முன்னால் இரண்டு டெலிபிராம்ப்டர்கள் நிறுவப்பட்டன.
நரேந்திர மோதி பேசும்போது அவருக்கு இந்தி தெரியுமா என்ற விவாதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் அவர் இந்தியைத் தெளிவாகப் பேச உதவியாக அந்த டெலிப்ராம்ப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. அதில் ஓடிய எழுத்துருக்கள் பெரிதாக காண்பிக்கப்பட்டு அதன் மூலம் பேசினார். பிறகு அதுவே பிரதமரின் உரைக்கான தேவையான அம்சங்களில் ஒன்றானது. வெளியில் இருந்து பார்ப்போருக்கு பிரதமரால் குறிப்பு ஏதுமில்லாமல் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் பேச முடியும் என்ற தோற்றத்தை அல்லது பிம்பத்தை இந்த செயல்பாடு உருவாக்கிக் கொடுத்தது.
ஆனால், அப்போதே, மக்களை கவர நரேந்திர மோதி டெலிப்ராம்ப்டரைப் பயன்படுத்துவதாக ராஷ்ட்ரிய ஜனதா கட்சி தலைவராக இருந்த லாலு பிரசாத் யாதவ் விமர்சித்தார்.
அப்போது லாலு பிரசாத் தமது ட்விட்டர் பக்கத்தில், "பிகாரில் நீதியை விரும்பும் பெரும் பிரிவு இருக்கிறது. மக்களின் வாக்குகளைக் கவரலாம் என்ற தமது திட்டம் தோல்வியடையலாம் என்ற பயத்தில் ஒரு மனிதனானல் எதையும் பேச முடியும். பிகாரில் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற பீதியால் இந்தி மொழியில் பேசக் கூட "டெலிப்ராம்ப்டரை பயன்படுத்துகிறார் மோதி," என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அப்போது பாஜக செய்தித் தொடர்பாளர்கள் மோதியின் பேச்சுக்கு டெலிப்ராம்ப்டர்கள் அவசியம் இல்லை என்று மறுத்தனர்.
இருப்பினும் மோதி கலந்து கொண்ட எல்லா கூட்டங்களிலுமே அவர் டெலிப்ராம்ப்டர்கள் பயன்படுத்தியதை அவரது பிரசார காணொளிகளும் படங்களும் உறுதிப்படுத்தின.
ஆனால், அந்த டெலிப்ராம்ப்டர் காண்பதற்கு பெரிய அளவில் இல்லாமல் ஒரு மைக் ஸ்டாண்ட் அல்லது மைக் பேட் போல இருந்தன.
அந்த காலகட்டத்தில் இது விவாதமாக இருந்தாலும், நரேந்திர மோதி எப்படி சரளமாக இந்தி மொழியில் பேசினார் என்று எல்லோரும் வியந்தனர். அதே சமயம், பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக் நரேந்திர மோதி தமது மேடை பேச்சுக்கு டெலிப்ராம்ப்டரை பயன்படுத்தினார் என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்தி மட்டுமின்றி பாட்னாவில் அவர் போஜ்புரி, மாகஹி, மைதிலி ஆகிய மொழிகளில் கூட பேசி அசத்தினார். ஆனால், அடிப்படையில் இந்த மொழிகள் எதுவுமே மோதிக்கு தெரியாது என்பதே உண்மை.
ஆனால், இதுபோன்ற உரை நிகழ்த்துவதற்கு மோதியைப் போலவே பல்வேறு சர்வதேச தலைவர்களும் டெலிப்ராம்ப்டர் சாதனத்தை பயன்படுத்துகிறார்கள்.
கம்பியில்லா சேவை, ப்ளூடூத் மூலம் லேப்டாப்பில் இணைக்கப்படும் வசதியைக் கொண்ட இந்த சாதனங்கள், உரை நிகழ்த்துவோரின் முன்னே நிறுவப்பட்டிருக்கும். அந்த சாதனம், லேப்டாப்பில் வயர்லெஸ் வசதியுடன் இணையும். மோதி பேசும்போது அவரது சொல்லோட்டத்துக்கு ஏற்றபடி லேப்டாப்பில் இருப்பவர் தமது லேப்டாப் மவுஸை ஸ்க்ரோல் செய்யச் செய்ய, மோதியின் முன்பாக இருக்கும் சாதனம் சொற்களை மேல்நோக்கி செலுத்திக் கொண்டே இருக்கும்.
இது கிட்டத்தட்ட தொலைக்காட்சி செய்தி சேனல்களில் செய்தி வாசிப்பாளர்கள் அல்லது நெறியாளர்கள் முன் உள்ள திரையில் இருக்கும் ப்ராம்ப்டர்களைப் போன்றது. இந்த பணியை செய்ய உரை நிகழ்த்துவோருக்கும் ப்ராம்ப்டரை இயக்குவோருக்கும் இடையே சிறந்த புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் அவசியம்.
பிற செய்திகள்:
- மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர் இடைநீக்கம்
- கொரோனா வைரசின் 'கவலைக்குரிய' திரிபுகள் குறித்த முக்கிய தகவல்கள்
- பசிபிக் டோங்கா, தென் அமெரிக்காவை சுனாமி தாக்கியது - மீட்புப் பணிகள் துரிதம்
- பிர்ஜு மகராஜ் : கமலின் விஸ்வரூபம் படத்தில் கதக் நடனத்திற்கு தேசிய விருது பெற்றவர்
- கிரிப்டோ கரன்சியில் பணத்தை இழந்தவர்கள் கிம் கர்தாஷியன் மீது வழக்கு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்