You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நரேந்திர மோதி இந்தியில் பேசியது தமிழக மாணவர்களுக்கு புரியவில்லை'
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - நரேந்திரமோதி கலந்துரையாடிய 'பரிக்ஷா பே சர்ச்சா'
பொது தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடிய 'பரிக்ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளுக்கு சரியாக சென்று சேரவில்லை என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
மோதியின் பேச்சு பெரும்பாலும் பெருநகரங்களில் பயிலும் மாணவர்கள் குறித்தே இருந்ததாகவும், கிராமப் புறங்களில் பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அவர் பேசவில்லை என்றும் பலர் தெரிவித்தனர்.
மேலும் பல பள்ளிகளில் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காரணத்தாலும், இணைய வசதி இல்லாத காரணத்தாலும் அவர்களால் அந்த நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதில்லை. எனவே பிரதமரின் நிகழ்ச்சியை பார்க்க முடிந்த மாணவர்களுக்கும் அது பயனில்லாமல் போனது என விவரிக்கிறது அச்செயதி.
தினமணி - சிறைகளில் ஸ்மார்ட் பூட்டு
தமிழக சிறைகளில் கைதிகளை அடைக்கும் அறைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் `ஸ்மார்ட் பூட்டுகள்` பொருத்தப்பட உள்ளன என்கிறது தினமணியின் செய்தி.
இதில் முதல் கட்டமாக, புழல் மத்திய சிறையில் பயன்பாட்டில் உள்ள திண்டுக்கல் பூட்டு உள்பட பாரம்பரியமான அனைத்து பூட்டுகளும் மாற்றப்பட்டு நவீன ஸ்மார்ட் பூட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.
தமிழக சிறைத்துறையின் கீழ் இருக்கும் 9 மத்திய சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 துணை சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 3 பெண்கள் சிறப்பு சிறைகள் உள்ளன. இந்த சிறையில் 22 ஆயிரம் கைதிகளை அடைப்பதற்குரிய கட்டமைப்புகள் உள்ளன. ஆனால் இப்போது இந்த சிறைகளில், சுமார் 14 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைகளில் உள்ளவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகளாகவும் எஞ்சிய 30 சதவீதம் பேர் தண்டனைக் கைதிகளாகவும் உள்ளனர் என்று விவரிக்கிறது அச்செய்தி.
தி இந்து - கரோனா வைரஸ்:தமிழகத்தில் முன்னெச்சரிக்கை
சீனாவில் கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், நோயாளிகளிடம் சுவாச நோய்த்தொற்றுகள், காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவைக்கான அறிகுறிகள் இருக்கிறதா என்றும், நோயாளிகளின் பயண விவரங்கள் குறித்தும் மருத்துவர்கள் கோர வேண்டும் என பொது சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
மருத்துவர்கள் கவனமாக இருக்க கோரப்பட்டுள்ளது. சுவாசத் தொற்று பிரச்சனை உள்ளவர்கள், அவர்கள் பயணம் செய்தவர்களோ இல்லையோ ஆனால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அம்மாதிரியான நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் கே.குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை சர்வதேச விமான நிலையாத்தில், பயணிகளை சோதனை செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் விவரிக்கிறது அச்செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: