You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாணவர்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி - "சந்திரயான் -2 நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என்றார்கள்"
இந்திய பிரதமர் நரேந்திர மோதி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நியூ டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வது குறித்த சில கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் பிரதமர் மோதி.
இந்தியாவின் பல பள்ளிகளில் இந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
யாராவது என்னிடம் உங்கள் மனதுக்கு பிடித்த நிகழ்ச்சி எது என்று கேட்டால், ''பரிக்ஷா பே சர்சா 2020'' என்ற நிகழ்ச்சி என்றுதான் கூறுவேன் என பிரதமர் மோதி மாணவர்களிடம் கூறினார்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் எப்போது உரையாடினாலும் , அவர்களிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்கிறேன் என தன் உரையை ஆரம்பித்தார் மோதி.
ராஜஸ்தானை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், தேர்வை பயமின்றி எதிர்கொள்வது எப்படி என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோதி ''ஒருமுறை பின்னடைவு ஏற்பட்டால், சிறந்த நன்மைகள் எதிர்வரும் காலத்தில் நடைபெறவிருக்கிறது என அர்த்தம்.'' என்று கூறினார்.
"2001ல் நடந்த இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி குறித்து உங்களுக்கு நினைவிருக்கிறதா? நமது அணி சரிவில் இருந்தது, நிலைமை நமக்கு சாதகமாக இல்லை. ஆனால் ராகுல் டிராவிட்டும் விவிஎஸ் லக்ஷமனும் சேர்ந்து அந்த போட்டியை வென்றதை யாராலும் மறக்க முடியாது. இது நல்ல சிந்தனையின் பலனாக அமைந்த வெற்றி. இவ்வாறுதான் அனைவரும் சிந்திக்கவேண்டும்," என மாணவர்களுக்கு கிரிக்கெட் போட்டியை எடுத்துக்காட்டாக கூறி அறிவுரை வழங்கினார் மோதி.
"சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்படும் நிகழ்வுக்கு நீங்கள் செல்ல வேண்டாம், அதன் வெற்றி சாத்தியமா என்று தெரியவில்லை என பலர் என்னிடம் கூறினார்கள். வெற்றி சாத்தியமா என தெரியவில்லை அதற்காகவே நான் அங்கு செல்ல விரும்புகிறேன் என்று அவர்களிடம் கூறி சென்றேன்," என மாணவர்களிடம் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டார்.
"விவசாயிகள் பெரிய அளவில் கல்வி கற்காமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் நல்ல விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். தொழில்நுட்பம் குறித்து நன்கு புரிந்துக்கொண்டு கற்றுக்கொள்கிறார்கள். அதே போல நாம் தேர்வை நல்ல முறையில் எதிர்கொண்டு வாழ்வில் பல முன்னேற்றங்களை அடைய வேண்டும்." என்று இந்திய விவசாயிகள் குறித்து மாணவர்களிடம் பகிர்ந்துக்கொண்டார்.
"தொழில்நுட்பம் மற்றும் மொபைல் ஃபோன்களால் வீட்டில் பலர் ஒன்றாக நேரம் செலவழிப்பதில்லை. எனவே ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் தொழில்நுட்பம் இல்லாத ஒரு அறையில் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக நேரத்தை செலவிடுங்கள்," என அறிவுரை வழங்கினார்.
பிற செய்திகள்:
- அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகியது ஏன்? - முதன்முறையாக விளக்கமளித்த இளவரசர் ஹாரி
- சிறையிலிருந்து தப்பி சென்ற கைதிகள்: அதிகாரிகளை திசை திருப்ப மணல் மூட்டைகள்
- தாவூத்துக்கு முன்பே மும்பையை அச்சுறுத்திய கரீம் லாலா பற்றி தெரியுமா?
- அமெரிக்க தேர்தல் 2020: அதிபர் பதவிக்கான போட்டி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: