You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்தார்பூர்: இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்து 75 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த சகோதரர்களின் கண்ணீர் கதை
- எழுதியவர், முகமது ஃஜுபைர் கான்
- பதவி, செய்தியாளர் பிபிசிகாக
"எனக்கு விசா கொடுக்கும்படி இம்ரான் கானிடம் சொல்லுங்கள். எனக்கு இந்தியாவில் யாரும் இல்லை."
"நீ பாகிஸ்தானுக்கு வா, நான் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன்."
சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக சந்தித்த இரு சகோதரர்களின் உரையாடலின் ஒரு பகுதி இது.
முகமது சித்திக்கி மற்றும் முகமது ஹபீப் ஆகியோரின் இந்த தனித்துவமான சந்திப்பானது, கோடிக்கணக்கான மக்களின் கண்கள் பல ஆண்டுகளாகக்காணும் கனவாகும். நாட்டின் சுதந்திரத்துடன் வந்த பிரிவினை இவர்களுக்கு வெறும் கதைமட்டும் அல்ல.
இந்த இரு சகோதர்களும் பிரிவினையின் போது பிரிந்தனர். பெரும் குழப்பத்திற்கு இடையே இவர்களது குடும்பம் ஜலந்தரில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்றது. அவரது தந்தை இறந்துவிட்டார். சித்திக்கி தனது சகோதரியுடன் பாகிஸ்தானை அடைந்தார். ஹபீப் தனது தாயுடன் இங்கு தங்கினார். தாய் பின்னர் காலமானார்.
இவையெல்லாம் எப்படி நடந்தது என்பது அவருக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு சகோதரர்களும் கர்தார்பூர் வழித்தடம் மூலமாக சந்தித்தனர். பிரிவினையில் தொடங்கிய எண்ணற்ற கதைகளில் இதுவும் ஒன்று.
"பிரிந்த சகோதரர்களான எங்களை மீண்டும் சேர்த்து வைக்கும் விதமாக எனது சகோதரர் முகமது ஹபீப்பிற்கு பாகிஸ்தான் விசா வழங்குமாறு இம்ரான் கானை கேட்டுக்கொள்கிறேன். வாழ்வின் இறுதி மூச்சை நாங்கள் ஒன்றாகக் கழித்தால், எங்கள் பெற்றோர் ,சகோதர சகோதரிகளை பிரிந்த வலி சிறிதே குறையக்கூடும்,"
முகமது சித்திக்கி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், பைசலாபாத் மாவட்டத்தில் உள்ள சக் 255 இல் வசிப்பவர்.
அந்த சிறிய சந்திப்பு
கர்தார்பூரில் இரு சகோதரர்களின் சந்திப்பை நேரில் கண்ட சாட்சியான நாசிர் தில்லன், அவர்களின் சந்திப்பு மிகவும் உணர்ச்சிபூர்வமானதாக இருந்தது என்று கூறுகிறார். இந்த நிகழ்வில் சுமார் நூறு பேர் கலந்து கொண்டனர்.
எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். சில மணி நேரங்கள் சந்தித்துவிட்டு, மீண்டும் ஒருமுறை சகோதரர்கள் இருவரும் பிரிந்தபோது அனைவரின் கண்களும் மீண்டும் ஒருமுறை ஈரமாயின.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு சகோதரர்களுக்கு இடையே முதல் தொடர்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. இரண்டு வருடங்களில் இரண்டு சகோதரர்களும் ஒருவரையொருவர் வீடியோ கால் செய்யாத நாளே இல்லை. முகமது சித்திக்கிக்கு மொபைல் போன் பயன்படுத்தத் தெரியாது. ஆனால் அவரது குழந்தைகளும் கிராம மக்களும் இந்த விஷயத்தில் அவருக்கு உதவுகிறார்கள்.
இதேபோல், முகமது ஹபீப்பும் மொபைல் போன் பயன்படுத்துவதில்லை. ஆனால் அவரது சீக்கிய நண்பர்கள் அவருக்கு உதவுகிறார்கள். முகமது ஹபீப் சீக்கிய குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
முகமது சித்திக்கியைச் சந்திப்பதற்காக நாங்கள் அவரது கிராமமான சக் 255 ஐ அடைந்தபோது, அவர் தனது சகோதரர் முகமது ஹபீப்புடன் ஃஜூமில் பேசிக் கொண்டிருந்தார். முகமது சித்திக்கி தன் தம்பி முகமது ஹபீப்பிடம், "உன் பேரன், பேத்திகள் உன்னை மிகவும் கேட்டதாக சொல்கிறார்கள். நீ திருமணம் செய்து கொள்ளவில்லை. பாகிஸ்தானுக்கு வந்தால் நான் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன்," என்று சொன்னார்.
முகமது ஹபீப் தனது சகோதரர் முகமது சித்திக்கியிடம், "எனக்கு விசா கொடுக்கும்படி இம்ரான் கானிடம் சொல்லுங்கள். எனக்கு இந்தியாவில் யாரும் இல்லை. இந்த வயதில் நான் மிகவும் தனிமையாகிவிட்டேன். என்னால் இனி தனிமையில் வாழமுடியாது," என்றார்.
சகோதரர்கள் இருவரும் எப்படி பிரிந்தார்கள்?
முகமது சித்திக்கி குடும்பத்தைப் பிரிந்த கதையை நன்றாக நினைவில் வைத்திருக்கிறார். அப்போது அவரது வயது சுமார் 10 முதல் 12. அதேசமயம் முகமது ஹபீப்புக்கு தனது தாய், தந்தை, உடன்பிறந்தவர்களின் பெயர்கள் மற்றும் தான் வசித்த பகுதி ஆகியவை பற்றி பிறர் சொல்லிக்கேட்டதைத் தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை. அப்போது அவருக்கு சுமார் ஒன்றரை முதல் இரண்டு வயது இருக்கும்.
ஜலந்தரில் உள்ள ஜாக்ராவான் எங்கள் ஊர் என்று முகமது சித்திக்கி கூறுகிறார்.
"என் அப்பா ஒரு நில உரிமையாளர். எங்கள் வயல்களில் நிறைய முலாம்பழங்கள் இருந்தன என்பது எனக்கு நினைவிருக்கிறது. எனக்கு என் அம்மாவையும் நினைவிருக்கிறது," என்றார் அவர்.
தனது தாயார் தன் தம்பி முகமது ஹபீப்புடன் ஃபூல்வாலாவில் உள்ள தனது பிறந்த வீட்டிற்குச் சென்றதை அவர் நினைவு கூர்ந்தார். இன்றும் அந்த கிராமத்தின் பெயர் ஃபூல்வாலாதான். அது இந்தியாவின் பட்டிண்டா மாவட்டத்தில் உள்ளது.
"அவர் தனது தாய்வீட்டிற்குச்சென்ற பிறகு, எங்கள் கிராமம் தாக்கப்பட்டது. மக்கள் பீதியுடன் அப்பகுதியை விட்டு வெளியேறினர். அனைவரும் பாகிஸ்தானை நோக்கிச் சென்றனர்.எல்லோரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முயன்றனர்."
"நான் என் தந்தை மற்றும் சகோதரியுடன் இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. எனது தந்தை கலவரத்தில் எப்படி இறந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. நானும் எனது சகோதரியும் எப்படியோ பைசலாபாத்தில் உள்ள அகதிகள் முகாமை அடைந்தோம்."
"எனது சகோதரி நோய்வாய்ப்பட்டு பைசலாபாத் அகதிகள் முகாமில் இறந்துவிட்டார். அந்த நாட்களில் என் பெரியப்பா எப்படியோ எங்களைத்தேடி பைசலாபாத் அகதிகள் முகாமுக்கு வந்துவிட்டார்,"என்று முகமது சித்திக்கி தெரிவித்தார்.
"இந்த கிராமத்திலும் , சுற்றுவட்டாரத்திலும் எனக்கு யாரும் இல்லை. கலவரம் தொடங்கிய போது நானும் எனது தாயும் என் பாட்டி வீட்டில் சிக்கிக்கொண்டதாக அப்பகுதி மக்கள் என்னிடம் தெரிவித்தனர். இதற்கிடையில் பிரிவினை இறுதிசெய்யப்பட்டது. பாகிஸ்தானும் இந்தியாவும் உருவானபோது, அப்பா, சகோதரிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன. அண்ணனைப் பற்றி எதுவும் தெரியவில்லை," என்று முகமது ஹபீப் குறிப்பிட்டார்.
"என் அம்மாவால் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை.முதலில் அவருக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டது. பிறகு உலகை விட்டு அவர் மறைந்தார். அவருடைய தாய்வழி உறவினர்களும் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டனர்."
"சிறுவயதில் இருந்தே நான் எனது சர்தார் நண்பர்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். அவர்களுடன் வாழ்ந்து அவர்களுடன் வளர்ந்துள்ளேன்" என்று அவர் கூறினார்.
பிரிவினைக்குப் பிறகு அங்கு வரும் வாகனஅணிகள் சில தகவல்களைத் தருவது வழக்கம் என்கிறார் முகமது சித்திக்கி. 'என் அம்மா இறந்துவிட்டார் என்ற செய்தி எங்களுக்கு வந்தது. ஆனால் எனது அம்மாவின் தாய்வழி உறவினர்களும் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்ததால் வலுவான தொடர்பு எதுவும் இருக்கவில்லை. முகமது ஹபீப் பற்றி அவர்களுக்கு அதிகமாக எதுவும் தெரியவில்லை," என்று அவர் கூறினார்.
"எங்கள் காலத்தில் அடையாள அட்டைகள் உருவாக்கப்படவில்லை. ஆனால் ஹபீப்பை காட்டிலும் எனக்கு 10 முதல் 12 வயது அதிகம். என் வாழ்நாளின் பெரும்பகுதியை என் சகோதரனை நினைத்தபடி நான் செலவிட்டேன். என் சகோதரி மற்றும் தந்தையின் சடலங்களை நான் பார்த்துள்ளேன். அம்மா இறந்துவிட்டார் என்று தெரிய வந்தது ஆனால் என் சகோதரன் உயிருடன் இருப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் இருந்தேன்" என்றார் முகமது சித்திக்கி.
கடந்த காலத்தை நினைவு கூர்ந்த அவர், "பாகிஸ்தானில் என் பாதுகாவலராக பெரியப்பா இருந்தார். நாங்கள் பைசலாபாத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தோம். பின்னர் எங்களுக்கு சக் 255 இல் நிலம் ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு நாங்கள் இந்த கிராமத்திற்கு வந்தோம்," என்றார்.
"எனக்கு ஒரு உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடந்தது. என்னிடம் நிலம் இருந்தது. வாழ்நாள் முழுவதையும் விவசாயத்தில் கழித்தேன்."
முகமது ஹபீப் தனது குழந்தைப் பருவம் மற்றும் கடந்த காலத்தைப் பற்றி அதிகம் பேசத் தயாராக இல்லை."பெற்றோர் இல்லாத குழந்தைக்கு என்ன நடக்கும், என்ன நடந்திருக்கும். என் அம்மா என்னை விட்டுவிட்டு இறந்துபோன கிராமத்தில் என் வாழ்க்கையை கழித்தேன்,"என்று அவர் சொன்னார்.
முகமது ஹபீப் தான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது பற்றியும் பேச மறுத்துவிட்டார். "என் சர்தார் நண்பர்களும், ஃபூல்வாலா கிராமத்தினரும்தான் எனக்கு எல்லாமே. அவர்கள்தான் என் அண்ணனை சந்திக்க உதவினார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்பு எப்படி ஏற்பட்டது?
தனது சகோதரனின் நினைவு தன்னை மிகவும் வாட்டி வதைத்ததாக முகமது சித்திக்கி கூறினார்.
"என் தம்பி உயிருடன் இருக்கிறார் என்று என் இதயம் எப்போதும் சொல்லும். நான் அவரைப் பார்க்க மிகவும் ஆசைப்பட்டேன். நான் மதகுருமார்களிடமும் சென்றேன். முயற்சி செய்தால் சகோதரர் கிடைத்துவிடுவார் என்று எல்லோரும் சொன்னார்கள்."
"முழு கிராமத்திற்கும் என் கதை தெரியும். என் கதையை கிராமத்தின் ஜமீந்தார் மற்றும் தற்போதைய ஜமீந்தாரான அவரது மகன் முகமது இஷ்ராக்கிடம் சொன்னேன். முகமது இஷ்ராக் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நசீர் தில்லனுடன் என்னிடம் வந்தார். அவர் என்னிடம் எல்லாவற்றையும் கேட்டார். அதைச் கேமராவில் பதிவு செய்து படமாக்கி வெளியிட்டார்,"என்று அவர் குறிப்பிட்டார்.
"படம் வெளியான சில நாட்கள் கழித்து மீண்டும் அவரும் முகமது இஷ்ராக்கும் வந்தனர். தம்பி கிடைத்துவிட்டார் என்றும் அவருடன் பேசியதாகவும் சொன்னார்கள்.
சக் 255 இன் ஜமீந்தார் முகமது இஷ்ராக் தனது நண்பர் என்று நாசிர் தில்லன் கூறுகிறார். "துணைக்கண்டத்தின் பிரிவினையின் போது பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்துவைக்க யூடியூப்பில் 'பஞ்சாபி லெஹர்' என்ற சேனலை நானும் எனது நண்பர் லவ்லி சிங்கும் உருவாக்கியுள்ளோம். தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிந்தவர்களின் கதைகளை நாங்கள் கூறுகிறோம். அவர்களை மீண்டும் இணைக்க முயற்சிக்கிறோம், "என்று அவர் தெரிவித்தார்.
"முகமது சித்திக்கியின் கதையை யூடியூப் மூலம் கூறியபோது, அந்த வீடியோவை ஃபூல்வாலாவின் டாக்டர் ஜக்பீர் சிங் பார்த்தார். அவர் சமூக வலைதளம் மூலம் எங்களைத் தொடர்புகொண்டார். பிறகு அவருடன் போனில் பேசினோம். முகமது சித்திக்கி குறிப்பிட்ட அதே பெயரை அவர் சொன்னார்," என்று நாசின் தில்லன் விளக்கினார்.
ஷிகா என்ற பெயரில் முகமது ஹபீப் அதாவது ஹபீப் கானை எங்களுக்கு தெரியும் என்று டாக்டர் ஜக்பீர் சிங் கூறினார்.
"அவரது உண்மையான பெயர் முழு பிராந்தியத்திலும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். அவர்களில் நானும் ஒருவன். ஷிகாவின் கதையை என் வீட்டு பெரியவர்களிடமிருந்து நான் கேட்டிருக்கிறேன். தனது கதையை ஷிகாவும் என்னிடம் பலமுறை விவரித்திருக்கிறார்," என்றார் அவர்.
"எப்படியாவது அண்ணனை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஷிகா. ஆனால் அவரின் படமும் இல்லை, முகவரியும் இல்லை. இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்பு பஞ்சாபி லெஹர் என்ற யூடியூப் சேனல், இதை சாத்தியமாக்கியது."
கடந்த இரண்டு வருடங்களாக என்ன நடந்தது?
"நாசிர் தில்லன் மற்றும் ஜமீந்தார் முகமது இஷ்ராக் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முகமது ஹபீப்புடன் வீடியோ கால் மூலம் என்னை பேச வைத்தனர். உரையாடல் ஆரம்பித்ததும் முதலில் நான் கேட்டது அம்மா அப்பா பெயரைத்தான். அவர் அதை சரியாகச்சொன்னார். பின்னர் என் பெயரைக் கேட்டதும் அதுவும் சரியாக இருந்தது,"என்று முகமது சித்திக்கி கூறினார்.
தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்த விஷயங்களையும் அவர் சொன்னார். அதுவும் சரியாகவே இருந்தது.
"பாகிஸ்தானுக்கு வர வேண்டும் என்று ஹபீப் விரும்பினார். அவர் பாகிஸ்தானுக்கு வர முடியாவிட்டால், அவரைச் சந்திக்க நான் இந்தியாவுக்குச் செல்ல நினைத்தேன். ஆனால் அதற்கு பல தடைகள் இருந்தன,"என்று அவர் கூறினார்.
அதன்பிறகுதான் முகமது சித்திக்கியின் அடையாள அட்டையும் பாஸ்போர்ட்டும் தயாரிக்கப்பட்டதாக முகமது இஷ்ராக் கூறுகிறார்.
ஷிகாவிடம் ரேஷன் கார்டு எதுவும் இல்லை என்று ஜக்பீர் சிங் கூறுகிறார். "இந்தியா பாகிஸ்தான் இரு தரப்பிலும் விசா பெற முயற்சிக்கவேண்டும் என்று நானும், நசீர் தில்லனும், முகமது இஷ்ராக்கும் முடிவு செய்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கொரோனா நடுவில் வந்ததால் இது சாத்தியமாகவில்லை,"என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சந்திப்பு எப்படி நடந்தது?
"அந்த நேரத்தில் கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்தது. பிரிந்த சகோதரர்கள் ஒன்றிணைவதற்கு இந்த வழியை பயன்படுத்த தீர்மானித்தோம். குறைந்தபட்சம் அவர்கள் ஒரு முறையாவது சந்திக்கட்டும் என்று கருதினோம்," என்று நாசிர் தில்லன் குறிப்பிட்டார்.
கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்டபோது, தர்பார் சாஹிப்பில் பிரார்த்தனை செய்ய நாங்கள் முடிவுசெய்தோம். பிரிந்தவர்களை சந்திக்க வைப்பது மற்றும் பிரார்த்தனை செய்வது ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய நாங்கள் நினைத்தோம்," என்று ஜக்பீர் சிங் கூறுகிறார்.
"நாங்கள் முன்பதிவு செய்தோம் .இதில் எந்த பிரச்சனையும் இல்லை. இரு தரப்பு அரசுகளும், நிர்வாகமும் எங்களுக்கு உதவின. அதன் பிறகு ஜனவரி 10 அன்று நாங்கள் கர்தார்பூரை அடைந்தபோது, முகமது சித்திக்கி தனது குடும்பம் மற்றும் முழு கிராமத்துடன் அங்கு இருந்தார்,"என்றார் அவர்.
"நான் எனது சகோதரனுக்கு பரிசாக துணிமணிகள் எடுத்து வந்தேன். அவரும் எங்கள் அனைவருக்கும் ஆடைகளை கொண்டு வந்தார். அவர் பாகிஸ்தானுக்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடன் பாகிஸ்தானுக்கு வருமாறு நான் சொன்னபோது, அவர் என் தோளில் தலையை வைத்துக்கொண்டார். அழுது கொண்டே தன் சம்மதத்தை தெரிவித்தார்,"என்று முகமது சித்திக்கி குறிப்பிட்டார்.
"நாங்கள் இருவரும் உட்கார்ந்து அழுதோம். எங்கள் பெற்றோரை நினைவு கூர்ந்தோம். நாங்கள் தர்பார் சாஹிப்பில் சந்தித்தோம். இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் எங்கள் பெற்றோர் மற்றும் பிற உறவினர்களுக்காகவும் பிரார்த்தனை செய்தோம். அந்த நாள் எப்படி ஓடிப்போனது என்று தெரியவே இல்லை. பிரியும் நேரம் வந்தபோது, அவர் நடந்து செல்வதை நாங்கள் அனைவரும் பார்த்துக்கொண்டே இருந்தோம்."
"ஃபூல்வாலாவில் எல்லோருமே என்னை கவனித்துக்கொள்கிறார்கள். ஆனால் இப்போது (பாகிஸ்தானில்) பேரன், பேத்திகளுடன் விளையாட இதயம் விரும்புகிறது. நான் இறக்கும் போது, என் இறுதிச் சடங்குகளை என் உறவினர்கள் செய்யவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்,"என்று கூறினார் முகமது ஹபீப்.
"என்னைப்போன்ற கிழவனிடம் யாருக்கு என்ன பிரச்சனை இருக்கமுடியும். இரண்டு வேளை உணவை என் அண்ணன் கொடுத்துவிடுவார். எனக்கு விசா கொடுத்து விடுங்கள். சோகமான என் வாழ்க்கையில் என் மரணமும் சோகமாக இருக்கக்கூடாது" என்று குரல் அடைக்க அவர் கூறினார்.
பிற செய்திகள்:
- 'அன்பே, பெருமைப்படுகிறேன்' - விராட் கோலிக்காக அனுஷ்காவின் உணர்ச்சிப் பூர்வமான பதிவு
- உத்தரப்பிரதேச தேர்தல், இந்துத்துவத்துக்கு சமூக நீதி விடுக்கும் சவாலா?
- சகோதரியை மணந்த மன்னர்கள் - எகிப்து, கிளியோபாட்ரா பற்றி அறியப்படாத தகவல்கள்
- ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி மறுப்பு; தடுப்பூசி போடாததால் விரைவில் வெளியேற்றம்
- பிக்பாஸ் 5: ராஜூ, பிரியங்கா, பாவனி - இந்த சீசன் வெற்றியாளர் யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்