சோமநாத்: இஸ்ரோவின் தலைவராகும் நான்காவது கேரள விஞ்ஞானி

சோம்நாத்

பட மூலாதாரம், ANI

இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோவின் அடுத்த தலைவராக எஸ். சோமநாத்தை நியமிக்க அமைச்சரவை நியமனக் குழு பரிந்துரை செய்துள்ளது.

தற்போது தலைவராக இருக்கும் கே. சிவனின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அவருக்கு அடுத்ததாக சோமநாத் பதவியேற்றுக் கொள்வார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் அந்தப் பதவியில் நீடிப்பார் என்று நியமனக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம், சூரியனை ஆராயும் ஆதித்யா திட்டம், சந்திரயான் - 3, மங்கள்யான் -2 ஆகிய திட்டங்கள் இவரது பதவிக்காலத்தில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருக்கும் சோமநாத் விண்வெளித்துறையின் செயலாளர் மற்றும் இஸ்ரோவின் தலைவராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறார்" என்று நியமனக் குழுவின் அறிக்கை கூறுகிறது.

இந்தப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது தமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சோம்நாத் கூறியுள்ளார்.

"தொழில்நுட்பம், கொள்கை, அமலாக்கம் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தப் போகிறேன். நாம் கவனிக்க வேண்டிய பல்வேறு பிரிவுகள் இருக்கின்றந. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை நாம்தான் ஆற்றல் மையம். இதில் புதிய அணுகுமுறையைக் கொண்டு வரவேண்டியிருக்கிறது. அதன் மூலமே இருப்பவற்றை முறையாகப் பயன்படுத்த முடியும். பல்வேறு புதிய தொழில்நுட்பங்களும் இருக்கின்றன. தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது" என்று அவர் கூறினார்.

கேரளாவைச் சேர்ந்த விஞ்ஞானியான சோமநாத் ராக்கெட் ஏவுவாகனத் தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்.

1963-ஆம் ஆண்டு பிறந்த சோம்நாத், கேரளப் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்றவர். இந்திய தொழில்நுட்ப அறிவியல் கல்வி நிறுவனத்தில் விமானப் பொறியியலில் தங்கப் பதக்கத்துடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.

இஸ்ரோ

பட மூலாதாரம், Getty Images

திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணியாற்றி வரும் இவர், தந்து தொடக்கப் பணிக் காலத்தில் பிஎஸ்எல்வி ராக்கெட் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் அணியின் தலைவராக இருந்தார்.

ஜிஎஸ்எல்வி மாக்-3 திட்டத்தில் பணியாற்றியதற்காக இஸ்ரோவின் சிறந்த செயல்பாட்டுக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

2019-ஆம் ஆண்டிலேயே இஸ்ரோவின் தலைவராக இவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

இதற்கு முன் கேரளாவைச் சேர்ந்த கஸ்தூரி ரங்கன், மாதவன் நாயர், கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இஸ்ரோவின் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள்.

2018-ஆம் ஆண்டில் இருந்து இஸ்ரோ தலைவராக இருக்கும் சிவனின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜனவரியிலேயே முடிந்துவிட்டது. இருப்பினும் முன்னதாகவே அவருக்கு ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: