You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹரித்துவார் சம்பவம்: `நாஜி ஜெர்மனியை நினைவூட்டுகின்றன' - மோதி அரசுக்கு கடிதம் எழுதிய முன்னாள் அதிகாரிகள்
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
உத்தராகண்ட் மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள் வெளியிடப்பட்டதை சுட்டிக்காட்டி ஓய்வுபெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் குழு இந்திய அரசுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளது.
`நாஜி ஜெர்மனியில் நடந்ததை நினைவூட்டுவதாக இந்த வெறுப்புப் பேச்சுக்கள் அமைந்துள்ளன' என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த டிசம்பர் 17 முதல் 19 வரையில் `தர்ம சன்சத்' என்ற இந்துமத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் சிலர் பேசியுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக, `உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்' என தலைமை நீதிபதிக்கு 76 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
`இதுபோன்ற வெறுப்புப் பேச்சுக்கள் இனியும் நடக்காமல் தடுப்பதற்கு நீதிமன்றத்தின் தலையீடு தேவை' எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேநேரம், ஹரித்துவார் சம்பவம் தொடர்பாக சிசிஜி (Constitution Conduct Group) எனப்படும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழி நடக்க வலியுறுத்தும் குழுவும் திறந்த மடல் ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்தக் கடிதத்தில் மத்திய, மாநில அரசுகளில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.எஃப்.எஸ் என பல நிலைகளில் பணியாற்றிய அதிகாரிகள் கையொப்பமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, சிசிஜி அமைப்பின் அங்கத்தினர்களில் ஒருவரான மேற்குவங்க மாநில முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர் ஜி.பாலச்சந்திரனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
`` சிசிஜி அமைப்பின் மூலமாக கடந்த 5 ஆம் தேதி இந்த திறந்த மடல் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 270 பேர் வரையில் கையொப்பமிட்டுள்ளனர். இந்திய அரசின் பாதுகாப்பு, நிர்வாகம், காவல் உள்பட பல்வேறு அரசுப் பணிகளில் இருந்தவர்களைத் தவிர, சமூக ஆர்வலர் கிருஷ்ணா, டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, எழுத்தாளர் கீதா ஹரிஹரன், ஐ.ஏ.எஸ் பணியில் குறுகிய காலம் இருந்துவிட்டு `மஸ்தூர் கிஷான் சக்தி சங்கடன்' என்ற அமைப்பை நடத்தி வரும் அருணா ராய், நடிகை நந்திதா தாஸ், ஜனநாயக ஆசிரியர் அமைப்பை நடத்தி வரும் நந்திதா நாராயணன், ஜே.என்.யூ பேராசிரியர் பிரபாத் பட்நாயக் உட்பட பலரும் இதில் கையொப்பமிட்டுள்ளனர்,'' என்கிறார்.
`` ஹரித்துவார் சம்பவம் தொடர்பாக திறந்த மடல் எழுதலாம் என இந்திய கடற்படையில் தலைமைத் தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற அட்மிரல் ராமதாஸிடம் இருந்து எங்களுக்கு ஒரு கோரிக்கை வந்தது. சிசிஜி அமைப்பினரும் இணைந்தால் இந்தக் கடிதம் வலிமை பெறும் என்றார்கள். அதன் அடிப்படையில் நாங்களும் இணைந்து இந்தக் கடிதத்தை திறந்த மடலாக ஊடகங்களுக்கு அனுப்பினோம்'' என்கிறார் பாலச்சந்திரன். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
இந்தக் கடிதத்தில் நீங்கள் சொல்ல வருவது என்ன?'
`` ஹரித்துவார் என்ற இடத்தில் டிசம்பர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நிகழ்த்தப்பட்ட சில வெறுப்பைத் தூண்டும் உரைகள், அதாவது, `இஸ்லாமிய சமூகத்தினரைக் இனக்கொலை செய்துவிட வேண்டும்' எனப் பேசப்பட்ட உரையை ஏகமனதாகக் கண்டிக்கிறோம். `ஒரு சமூகத்தையே கொல்ல வேண்டும்' என்ற அடிப்படையில் இந்துத்துவ அமைப்புகளில் உள்ள சில பேர் பேசியுள்ளனர். இது தனி நபர்களின் உரிமைகள் தொடர்பான சட்டத்துக்குப் புறம்பானவை. குறிப்பாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை. இதன்பேரில் தேவையான சட்டபூர்வமான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை. இதுகுறித்து சரியான பதிலையும் அளிக்கவில்லை. இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலம் இவை ஒன்றுமில்லாதவையாக அதிகார மட்டம் ஊதித் தள்ளப் பார்க்கின்றது என்பது உண்மையாகிறது.''
மேலும், ``இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு 76 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்திய குற்றச்சட்டத்தின் உட்பிரிவுகள் 120 பி, 121 ஏ, 124 ஏ, 153 ஏ, 153 பி, 295ஏ மற்றும் 298 ஆகியவற்றின்கீழ் இத்தகைய வெறுப்பு உரைகளைப் பேசியவர்களின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளனர்.''
இந்த சம்பவம் குறித்து சிசிஜி அமைப்பினர் முன்வைக்கும் கோரிக்கை என்ன?
``நாங்கள் டெல்லி, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள ஆட்சியாளர்களைக் கேட்பது ஒன்றுதான், சட்டத்தின்படி, வெறுப்பு உரை ஆற்றியவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அரசியமைப்பின்படி உருவாக்கப்பட்ட மக்களாட்சி என்பதுவும், மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளும், மதசார்பின்மை என்பதை ஒரு பகுதியாகக் கண்டுள்ள நமது அரசமைப்பை அர்த்தமற்றதாக ஆக்கிவிடும்.
இந்தியா என்ற தேசத்தை நாம் எந்தவகையில் கண்டுள்ளோமோ, அது மறைந்துவிடும். நாஜி ஜெர்மனியில் நடந்ததை நினைவூட்டுவதாக இந்த உரைகள் உள்ளன; ரத்தத்தை உறைய வைக்கின்றன. இந்த நேரத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் அமைதியாக இருப்பதோ, செயலாற்றாமல் இருப்பதோ, அவர்களும் இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதாகப் பொருள்படும். இந்தக் குற்றங்கள் மனித இனத்துக்கு எதிரானவையாக உள்ளன.''
உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் எழுதிய கடிதம், சிசிஜி எழுதிய கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறீர்களா?
``இந்த நாடு மக்களாட்சி தத்துவத்தில் அடிப்படை நம்பிக்கை கொண்டவர்களால் எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் இயங்க வேண்டும் என்பது விதி. அப்படிப்பட்ட செயல்முறை எங்கெல்லாம் தவறுகின்றதோ, அங்கெல்லாம் சுட்டிக் காட்டுவதற்கு ஆட்கள் தேவை. அவ்வாறு சுட்டிக் காட்டாவிட்டால் இதுபோன்று தவறு செய்கிறவர்கள் எந்தவிதமான அச்சமுமின்றி இந்தத் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள்.
இதன் காரணமாக இன்று இல்லாவிட்டாலும் இன்னும் சில வாரங்களில், சில மாதங்களில், சில வருடங்களில் நாங்கள் ஏற்கெனவே கூறியுள்ளதுபோல எந்தவொரு அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் இயங்குகின்ற இந்தியாவை நாங்கள் பார்க்கிறோமோ, அந்த இந்தியா மறைந்துவிடும். அதனால் பாதிக்கப்படுவது இந்தியாவின் அனைத்து மக்களும்தான். அதனால்தான் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்புகின்றோம்''.
ஹரித்துவாரில் என்ன நடந்தது?
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு 'தர்ம சன்சத்' என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர தியாகி (முஸ்லிம் மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறியவர்.) மற்றும் இந்து தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அந்த மாநாட்டில் பேசிய இந்து மத ஆதரவாளர்கள், சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராகவும், வன்முறைகளை தூண்டும் வகையிலும் பேசியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், கார்வால் டிஐஜி கரண் சிங் நக்யால், ''தர்ம சன்சத் மாநாட்டில் வெறுப்பு பேச்சு பேசப்பட்டது குறித்து விசாரிக்க, 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.
இந்த நிலையில், மூடிய கதவுகளுக்குள் நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைப்பதற்கு எதிராக ஜனவரி 16ஆம் தேதி "பிரதிகார் சபா" அல்லது எதிர்ப்புக் கூட்டத்தை நடத்துவதாக ஹரித்துவார் "தரம் சன்சத்" அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
- ஆபத்தான ஒமிக்ரானை லேசானது என்றழைக்கக் கூடாது - உலக சுகாதார அமைப்பு
- "நாடு ஊழல் நிறைந்ததாக இருக்கிறது"- பாஜக எம்.பி வருண்காந்தி விமர்சனம்
- சுல்லி டீல்ஸ், புல்லி பாய் செயலிகள்: ஒரே மாதிரி வழக்குகள் - டெல்லி, மும்பை போலீஸ் கையாண்டது எப்படி?
- கஜகஸ்தான்: அரசு எதிர்ப்பாளர்களை ஒடுக்க ரஷ்ய படை விரைந்தது - டஜன் கணக்கான போராட்டக்காரர்கள் பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்