புதுக்கோட்டை சிறுவன் உயிரிழப்பு: சம்பவ தினத்தன்று நடந்தது என்ன? - கள ஆய்வு

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
புதுக்கோட்டை துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்திலிருந்து வந்த குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக செய்தி சேகரிகக் களத்திற்கு சென்றபோது, பயிற்சி தளத்தில் சுடப்படும் குண்டுகள் சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி வந்து விழுவது வாடிக்கையாக இருந்துள்ளது என கிராம மக்கள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கிச் சூடும் பயிற்சி தளத்திலிருந்து கடந்த டிசம்பர் 30-ம் தேதி காவல் துறையினர் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது பயிற்சியின்போது சுடப்பட்ட குண்டு 11 வயதான புகழேந்தி என்கிற சிறுவனின் மீது பாய்ந்தது.
இதனைத் தொடர்ந்து சிறுவன் புகழேந்திக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த ஜனவரி 3-ம் தேதி புகழேந்தி உயிரழந்தார். இந்த நிலையில் பசுமலைப்பட்டியில் உள்ள தமிழ்நாடு காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் செயல்படுவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இதனைத் தொடர்ந்து பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் தற்காலிகமாக மூடப்பட்டது. இது தொடர்பாக அப்போது பயிற்சியில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாச்சியர் தண்டபானி விசாரணை நடத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்பித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டி என்கிற இடத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு காவல்துறையினர் மட்டுமல்லாது மத்திய பாதுகாப்பு படையினரும் சமயங்களில் இராணுவத்தினரும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமாக இருந்துள்ளது.
பயிற்சி மையத்தில் அதிகாலையிலே பயிற்சி தொடங்கிவிடும். பயிற்சி நடைபெறுகிற போது சுற்றியுள்ள மலைகளில் சிவப்பு கொடி முன்னெச்சரிக்கைக்காக நடப்பட வேண்டும், பொதுமக்கள் வந்தால் எச்சரிக்கை செய்ய காவலர்கள் விசிலுடன் நிறுத்தப்பட வேண்டும், சம்பவ இடத்தில் மருத்துவ குழு அடங்கிய ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட வேண்டும் என்கின்றன காவல்துறையின் வழிமுறைகள்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
கடந்த டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பசுமலைப்பட்டியில் துப்பாக்கி பயிற்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அன்று தமிழக காவல்துறையினரும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பயிற்சி நடைபெறும் எல்லையையும் தாண்டி தொலைவில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களை துப்பாக்கி குண்டுகள் தாக்கியிருக்கிறது.
பயிற்சி தளத்தில் 350 மீட்டர் தொலைவில் இலக்கு வைத்து பயிற்சி மேற்கொள்ளப்படுகையில் பசுமலைப்பட்டியிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் இருக்கும் நார்த்தாமலையில் உள்ள புகழேந்தியின் வீட்டில் வந்து குண்டு தாக்கியது தான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சம்பவத்தை நேரில் பார்த்த நார்த்தாமலையைச் சேர்ந்த ராசாத்தி பிபிசி தமிழிடம் பேசுகையில், 'காலை எட்டு மணி இருக்கும்போது புகழேந்தி வீட்டில் அவனுடைய அம்மா மற்றும் தங்கை அழுகின்ற சத்தம் கேட்டு சென்று பார்த்தோம். அப்போது புகழேந்தி தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து கிடந்தான். அப்போது நான் தான் வீட்டிலிருந்து வெளியில் தூக்கி வந்தேன். துப்பாக்கி குண்டு தலையில் தாக்கியது அப்போது தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதித்த பிறகு தான் தெரியவந்தது. இது போல குண்டுகள் வந்து விழுவது வழக்கம். எங்கள் வீட்டு கூரையிலும் ஒருமுறை குண்டு வந்து விழுந்துள்ளது. அதன் தடம் தற்போதும் இருக்கிறது. இதே பகுதியில் ஒரு சிறுமிக்கும் கடந்த சில வருடங்கள் முன்பு குண்டு தாக்கியுள்ளது. குழந்தைகள் வெளியில் தான் அதிகம் விளையாடுகிறார்கள். யார் மீது எப்போது குண்டு வந்து தாக்கும் என அச்சமாக உள்ளது. மக்கள் பாதுகாப்பிற்கு அந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்பட வேண்டும்' என்றார்.
இந்த பயிற்சி தளத்தில் பயிற்சியின் போது சுடப்படும் குண்டுகள் சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி வந்து விழுவது வாடிக்கையாக இருந்துள்ளதாக நார்த்தாமலை கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். புகழேந்தியைப் போல கடந்த காலங்களில் வேறு சிலரும் இந்த பயிற்சி தளத்திலிருந்து வந்த குண்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நார்த்தாமலை அடுத்து உள்ள சித்துப்பட்டியில் வசித்து வருகிறார் முருகேசன். இவர் கடந்த 1998-ம் ஆண்டு முதல் ஊராட்சி செயலராக பணி புரிந்து வருகிறார். கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி அவ்வாறு முருகேசன் ஊரப்பட்டி என்கிற இடத்தில் பணியில் இருந்தபோது பசுமலைப்பட்டி பயிற்சி தளத்தில் சுடப்பட்ட குண்டு ஒன்று முருகேசன் நெஞ்சில் பாய்ந்து முதுகெலும்பில் ஏறியுள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய முருகேசன், 'துப்பாக்கி பயிற்சி நடைபெற்ற இடத்திற்கும் ஊரப்பட்டிக்கும் 3 கி.மீ தொலைவு இருக்கும். குண்டு அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த எனக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. 19 நாட்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குண்டு அகற்றப்பட்டது.
அப்போது ஒரு லட்சம் ரூபாய் வரை என் சிகிச்சைக்காக செலவு செய்தேன். ஆனால் எனக்கு நிவாரணமோ, இழப்பீடோ வழங்கப்படவில்லை. எனக்கான இழப்பீடு தொகையை நான் கேட்கவில்லை. என் சிகிச்சைக்காக நான் செலவு செய்த தொகையில் ஒரு பகுதியையாவது கேட்டுப் பெறலாம் என ரூ.60,000 கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு மனு வழங்கியிருந்தேன். அதற்குப் பதில் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் என் மருத்துவ செலவு தொகை பெற உயர்நீதிமன்றத்தில் 2002-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தேன். 20 ஆண்டுகளாக அந்த வழக்கு நடைபெற்று வருகிறது.' என்றார்.

புகழேந்தி மரணமடைந்தைத் தொடர்ந்து அந்த பயிற்சி தளம் நிரந்தமாக மூடப்பட வேண்டும் என புகழேந்தியின் உறவினர்களும் ஊர் மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய புகழேந்தியின் உறவினர் ரமேஷ், 'இது போல் நடப்பது முதல்முறையல்ல. ஏற்கனவே பல்வேறு இடங்களில் இது போல் குண்டுகள் வந்து விழுந்துள்ளன. ஆடு, மாடுகள் கூட குண்டுகளால் அடிபட்டுள்ளன. ஆனால் தற்போது தான் இந்த பிரச்னை வெளியில் தெரிந்துள்ளது. வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த சிறுவன் மீது குண்டு வந்து விழுந்துள்ளது. இதுவே கடைசியாக இருக்க வேண்டும். அந்த துப்பாக்கி பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்பட வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.10 லட்சம் இழப்பீடு போதாது, இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். புகழேந்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்' என்றார்.
தங்களின் போராட்டத்தை தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் நிரந்தரமாக மூடப்படும் என அதிகாரிகள் வாய்மொழி உத்திரவாதம் அளித்துள்ளதாக தெரிவிக்கும் கிராம மக்கள் அதை விரைவில் செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
பிற செய்திகள்:
- 7 ஆண்டுகளில் 122 தற்கொலைகள்: சாதிய பாகுபாட்டில் சிக்கியுள்ளனவா மத்திய பல்கலைக்கழகங்கள்?
- 3 நாட்களில் 5,900 விமானங்கள் ரத்து - கொரோனாவால் தொடரும் பயணச் சிக்கல்
- சென்னையில் மருத்துவர்கள் உள்பட 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி: தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு
- திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என இளம்பெண்ணை கொலை செய்த மூன்று திருமணமான நபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












