You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சண்முகநாதன் மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்: "கருணாநிதியின் நிழல்; எனது உயிர்"
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளராக 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய சண்முகநாதன் காலமானார். அவருக்கு வயது 80.
உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
எப்போதும் சபாரி சூட்டில் காணப்படும் சண்முகநாதன் கருணாநிதியின் பொது நிகழ்ச்சிகள் அனைத்திலும் உடனிருந்து அவரது உரைகளைக் மிகவும் உன்னிப்பாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
அவர் கருணாநிதியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கிய கதை சற்று மாறுபட்டது. அரசுப் பணியில் இருந்த சண்முகநாதன், 1960-களில் கருணாநிதியின் கட்சிப் பொதுக் கூட்டங்களில் குறிப்பெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
2014-ஆம் ஆண்டு சண்முகநாதனின் இல்லத் திருமண விழாவில் பேசியபோது இதுபற்றி கருணாநிதியே அவரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்ட நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
"ஒருமுறை என் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு போடும் அளவுக்கு அப்படி என்ன நான் பேசிவிட்டேன் என்பதை அறிய, போலீஸிடமிருந்த எனது பேச்சு நகலை வாங்கிப் பார்த்தேன். என்னுடைய பேச்சு, பேராசிரியர் அன்பழகனின் பேச்சு மற்றும் திமுகவினரின் பேச்சுகளெல்லாம் அப்படியே எழுத்து வடிவமாகப் பதிவாகி யிருந்தது. யார் இவ்வளவு தெளிவாக எங்கள் பேச்சை அச்சு அசலாக படியெடுத்திருப்பார்கள் என்று விசாரித்தபோதுதான், சண்முக நாதன் பற்றி எனக்கு தெரிய வந்தது." என்று கருணாநிதி நினைவுகூர்ந்தார்.
1969-ஆம் ஆண்டு கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சரானபோது, சண்முகநாதனை தனது உதவியாளராக பணியில் சேர்த்துக் கொண்டார்.
"அவர் என்னுடைய அலுவலகத்திலே வேலை பார்ப்பவர் என்பதைவிட, என்னுடைய அகத்திலே இருந்து பணியாற்றுபவர். வெறும் சம்பளத்துக்காக வந்தவர் அல்ல. இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் அளவுக்கு என்னோடு கலந்து விட்டவர்" என்று கருணாநிதி கூறியிருந்தார்.
சண்முகநாதன் தனது கருணாநிதியிடம் பணியாற்றிய 50 ஆண்டுகளில் இரண்டுமுறை வெளியேறி, மீண்டும் திரும்பிச் சென்றிருக்கிறார்.
"கருணாநிதியின் நிழலாக இருந்தவர்"
கருணாநிதி நோய்வாய்பட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த காலம் வரைக்கும் அவரது உரையின் ஒவ்வொரு சொல்லையும் குறிப்பெடுத்தவர் என்று அவரைத் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.
"கருணாநிதிக்கு என்ன தேவையோ அதை சற்றும் பிறழாமல் செய்தவர். அவரது அனைத்து அறிக்கைகள் அனைத்தையும் ரெமிங்டன் டைப்ரைட்டரில் தட்டச்சு செய்து கொடுப்பார். கருணாநிதியின் அனைத்து நூல்களையும் கடைசியாக பிழைதிருத்தி கொடுத்தார். கருணாநிதியின் மனசாட்சியாகவும் நிழலாகவும் இருந்தார்." என்கிறார் திமுகவின் செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
"நாள்தோறும் வெளியாகும் பத்திரிகைகள் அனைத்திலும் முக்கிய நிகழ்வுகளையும், கருணாநிதி பங்கேற்கும் விழாக்கள் பற்றி செய்திகளையும் தனது டைரியில் குறிப்பெடுத்துக் கொள்வார். பின்னாளில் தகவல்கள் தேவைப்படும்போது அந்த நாள் பற்றிய அனைத்தையும் தருவார். கட்சி தொடர்பான விவகாரங்களில் ஒருபோதும் தலையிடமாட்டர். இப்போது முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும், மறைந்து முரசொலி மாறனுக்கும்கூட உதவியாக இருந்தார்"
எனது உயிராகக் கருதினேன்: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
சண்முகநாதன் மறைவுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். எனது உயிராக அவரைக் கருதினேன் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 'இந்தப் பிறவி தலைவருக்கானது' என வாழ்ந்த பாசச் சகோதரனை இழந்திருக்கிறோம். என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
"உதவியாளர், செயலாளர் என்பதையெல்லாம் தாண்டி தலைவர் கலைஞரின் நிழலாக இருந்தவர் அண்ணன் சண்முகநாதன் அவர்கள். அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரைக்கும் கோபாலபுரம் வீட்டிலேயே இருப்பார்." என்று ஸ்டாலின் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செயலாளருக்கு உதாரணம் சண்முகநாதன்: வைகோ
ஒரு தலைவரின் தலைவரின் செயலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உலகத்திலேயே சண்முகநாதன் ஒரு உதாரணம் ஆவார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- யோகி ஆதித்யநாத்: அஜய் மோகன் முதல்வர் 'மகாராஜா' ஆக மாறியது எப்படி?
- மலேசியா மழை: 100 ஆண்டுகளுக்கு பிறகு கதி கலங்க வைக்கும் காட்சிகள்
- யூ-டியூப் பார்த்து மனைவிக்குப் பிரசவம்: இறந்து பிறந்த குழந்தை - என்ன நடந்தது?
- தாய்மை அச்சுறுத்துகிறதா? - குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்கும் இளம் தலைமுறை
- ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் அமலாக்கத் துறை விசாரணை - பனாமா பேப்பர்ஸ் என்றால் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்