You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமேசான் இந்தியாவில் சந்தித்த பின்னடைவு: ரூ.200 கோடி அபராதம் செலுத்த உத்தரவு
இந்தியாவின் பியூச்சர் கூப்பன் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில், அதன் உண்மையான நோக்கம் மற்றும் விவரங்களை மறைத்ததால், அமேசான் நிறுவனத்துக்கு காம்படிஷன் கமிஷன் ஆ 200 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இது அமேசான் நிறுவனத்துக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
பின்னணி என்ன?
அமெரிக்காவைச் சேர்ந்த இ-வணிக நிறுவனமான அமேசான், கடந்த 2019-ல் பியூச்சர் குரூப்பைச் சேர்ந்த பியூச்சர் கூப்பன்ஸ் எனும் நிறுவனத்தில் 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. இதன்மூலம், அந்நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை அமேசான் கைப்பற்றியது.
பியூச்சர் ரீடெய்ல் என்ற நிறுவனத்தில், அதன் தாய் நிறுவனமான பியூச்சர் கூப்பன்ஸ் 9.82 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தில் 4.81 சதவீத பங்குகளை ஒப்பந்தத்தின் மூலம் அமேசான் மறைமுகமாக வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், பியூச்சர் குரூப் நிறுவனம் தனது சில்லறை வர்த்தகம் தொடர்பான சொத்துக்களை 3.4 பில்லியன் டாலர்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமேசான் நிறுவனம், தங்களது முதலீட்டு ஒப்பந்தத்தின்படி, பியூச்சர் குரூப் நிறுவனம், ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாது என தெரிவித்தது.
இது தொடர்பாக, அமேசானும், அமேசானுக்கு எதிராக பியூச்சர் குரூப்பும் மாறி மாறி வழக்கு தொடுத்தன.
சிசிஐ உத்தரவு என்ன?
இந்நிலையில், சிசிஐ எனப்படும் இந்திய காம்பெடிஷன் கமிஷன், இவ்விவகாரத்தில் 57 பக்கங்கள் அடங்கிய உத்தரவை வழங்கியுள்ளது. இரு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய அமேசான் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி, 2019-ல் தான் வழங்கிய அனுமதியையும் சிசிஐ ரத்து செய்தது.
இது தொடர்பாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்ட செய்தியின்படி, ஒப்பந்தத்தின் உண்மையான நோக்கத்தை அமேசான் மறைத்ததாகவும், அதற்காக, பொய்யான மற்றும் தவறான தகவல்களை அளித்ததாகவும் சிசிஐ தன் உத்தரவில் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய சட்ட நிறுவனமான எஸ்.டி. பார்ட்னர்ஸைச் சேர்ந்த ஸ்வேதா துபே இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய அமேசான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது முன்மாதிரியில்லாத உத்தரவு. இதன்மூலம், பியூச்சர் குரூப்புடன் அமேசான் மேற்கொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். அமேசான் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க முடியும். இதனை ரிலையன்ஸ் நிறுவனம் எளிமையாக கையாண்டுள்ளதாக தெரிகிறது.
சிசிஐ தனது உத்தரவில், அமேசான் நிறுவனத்துக்கு ரூ.200 கோடி அபராதம் விதித்துள்ளது. ஒப்பந்தத்திற்காக மீண்டும் விண்ணப்பிக்க அமேசான் நிறுவனத்திற்கு இரண்டாவது காலக்கெடுவை சிசிஐ அளித்துள்ளது" என அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்துடன் தொடர்புடைய ஒருவர் இதுகுறித்து ராய்ட்டர்ஸ்க்கு அளித்த பேட்டியில், "சிசிஐ முடிவுக்குப் பிறகு அமேசான் நிறுவனம் ஒப்பந்தத்திற்கு இரண்டாவது முறையாக விண்ணப்பித்தாலும், பியூச்சர் குரூப் நிறுவனத்திடமிருந்து பதிலை பெற வாய்ப்பில்லை.
மேலும், அவர் தெரிவிக்கையில், சிசிஐயின் முடிவை பல்வேறு சட்ட அமைப்புகளுக்கு பியூச்சர் நிறுவனம் எடுத்துச் செல்லலாம் என தெரிவித்தார். இவ்விவகாரத்தை எதிர்கொள்ள எவ்வித சட்ட அடிப்படையையும் அமேசான் கொண்டிருக்கவில்லை என பியூச்சர் நிறுவனம் இதன்மூலம் கூறமுடியும்.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் கூற்றுப்படி, "பியூச்சர் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை."
ஆனால், அமேசான் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. "சிசிஐ முடிவை முழுமையாக படித்து வருகிறோம். இதுகுறித்து அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- பிரபஞ்ச இருளில் உயிரின் ரகசியங்களைத் தேடப்போகும் ரூ.70 ஆயிரம் கோடி எந்திரம்
- தமிழ் டெக் யூடியூபர்: '10 பேர் பார்த்தால் போதுமென நினைத்தேன். இன்று 30 லட்சம் பேர் பார்க்கிறார்கள்'
- அமிர்தசரஸ் பொற்கோயிலில் அத்துமீறி நுழைந்த இளைஞர் உயிரிழப்பு - நடந்தது என்ன?
- “கொரோனாவின் ஒமிக்ரான் திரிபு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது”: பிரான்ஸ் பிரதமர்
- தரமற்ற உணவால் ஊழியர்கள் இறந்ததாக பரவிய தகவல்: பெண் தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது
- பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்ற அமைச்சரவை ஒப்புதல்: எதிர்ப்புக் குரல்கள் எழுவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்