You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தரமற்ற உணவால் ஊழியர்கள் இறந்ததாக பரவிய தகவல்: பெண் தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது
தங்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ஃபாக்ஸ்கானில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள சுங்குவார்சத்திரத்தில் ஃபாக்ஸ்கான் என்ற தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.
இங்கு சுமார் ஐயாயிரம் தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் தொழிற்சாலையைச் சுற்றிலும் காஞ்சிபுரம், ஓரகடம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கிப் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பலர் பூந்தமல்லிக்கு அருகில் உள்ள புதுச்சந்திரம் கிராமத்தில் அமைந்திருக்கும் இன்டர்நேஷனல் மாரிடைம் அகாதெமியின் விடுதியில் தங்கி வேலைக்குச் சென்றுவந்தனர்.
இந்த விடுதியில் தங்கியிருந்தவர்களுக்கு கடந்த புதன்கிழமையன்று வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்பட்டது.
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அளித்த அறிக்கையில், "இது குறித்துக் அறிந்ததும் அங்கு உடனடியாக தற்காலிக மருத்துவமுகாம் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
உணவுக் கூடம் மூடப்பட்டு, வெளியிலிருந்து உணவு வாங்கித் தரப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் அங்கு உடனடியாக வந்து பார்வையிட்டனர். அங்கிருந்த உணவு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 256 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதில் 159 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் 155 பேர் 18ஆம் தேதிக்குள் வீடுதிரும்பிவிட்டனர். நான்கு பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என கூறப்பட்டிருந்தது.
இருந்தபோதும் சிகிச்சை பெற்றுவந்த 8 பெண்களின் நிலை மோசமடைந்ததாக நேற்று வாட்சப்பில் செய்திகள் பரவின. இதனைப் பலர் சமூக வலைதளங்களிலும் பரப்பினர். இதையடுத்து, பெண்கள் மயங்கிய நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது எடுத்த வீடியோக்களை பலரும் வாட்ஸப் ஸ்டேட்டஸ்களாக வைக்கத் துவங்கினர்.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து எவ்வித தகவல்களும் அளிக்கப்படாத நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அவர்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் அமர்ந்தனர்.
இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி போராட்டக்காரர்களுடன் பேசினார்.
தரமற்ற உணவை உட்கொண்டதால் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட ஐஸ்வர்யா, காயத்ரி ஆகிய இருவருடனும் வீடியோ கால் மூலம் பேசிய பிறகு தொழிற்சாலை முன்பாக போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.
இருந்தபோதும் ஓரகடம், சுங்குவார்சத்திரம் பகுதியில் போராட்டம் நடந்துவந்தது. அவர்களிடம் அமைச்சர்கள் த.மோ. அன்பரசன், கணேசன், சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வப் பெருந்தகை உள்ளிட்டவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், போராட்டம் நடத்திய நாட்களுக்கு ஊதியம் அளிப்பது, மன உளைச்சலுடன் உள்ள ஊழியர்களுக்கு ஊதியத்துடன் ஒருவார காலத்திற்கு விடுப்பு அளிப்பது உள்ளிட்டவற்றுக்கு ஃபாக்ஸ்கான் நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக அமைச்சர்கள் ஊழியர்களிடம் தெரிவித்தனர்.
மேலும், உணவு சமைப்பதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் நடந்துவந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
இருந்தபோதும் ஓரகடம் பகுதியில் போராட்டம் தொடர்ந்து நடந்துவந்தது. விடுதிகளில் தங்களுக்கு தரமான உணவு அளிப்பது தொடர்பான கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சு வார்த்தையை ஏற்றுக்கொண்ட ஒரு பிரிவினர் கலைந்து சென்றனர். மற்றொரு பிரிவினர் தொடர்ந்து போராட்டம் நடத்த முயன்றபோது, அவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்து அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து, இந்தப் போராட்டங்களால் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இங்கு பணியாற்றும் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, வாக்குறுதிகளை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டுவிட்டாலும், இன்னமும் பலருக்கு உடல்நலம் சரியில்லை, சிலர் இறந்துவிட்டார்கள் என்ற அச்சம் நீங்கவில்லை. பெயரைத் தெரிவிக்க விரும்பாமல் பிபிசியிடம் பேசிய ஊழியர் ஒருவர், "யாருக்கும் பாதிப்பில்லை என்கிறார்கள். எங்களால் நம்பமுடியவில்லை" என்று கூறினார்.
ஆனால், பெண் தொழிலாளர்களுக்கு பல பிரச்னைகள் இருக்கின்றன, அச்சங்கள் இருக்கின்றன அவற்றை நிர்வாகம் தீர்க்க வேண்டும் என்கிறார் இந்தத் தொழிலாளர்கள் மத்தியில் இயங்கிவரும் பெண் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுஜாதா மோடி.
"இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் யாருமே ஃபாக்ஸ்கானின் நேரடி தொழிலாளர்கள் இல்லை. வேறு வேறு நிறுவனங்களின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இப்போது அமைச்சர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தாலும், அந்த வாக்குறுதிகளுக்கு எந்த நிறுவனம் பொறுப்பேற்கும் என்பது தெரியவில்லை.
இங்கு பணியாற்றுபவர்கள் அச்சத்திலும் சந்தேகத்திலும் கேள்வியெழுப்பும்போது அதைத் தீர்த்திருந்தால் இவ்வளவு பெரிய விஷயமாகியிருக்காது. இப்போது இந்த விவகாரத்தில் சமைக்கும் ஊழியர், விடுதியை நிர்வகிப்பவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பிரச்னைக்கு இது தீர்வல்ல. தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்துவதே தீர்வாக இருக்க முடியும்" என்கிறார் சுஜாதா மோடி.
பிற செய்திகள்:
- நெல்லை பள்ளி விபத்து: 'எழுந்து வா விஷ்வா வீட்டுக்குப் போவோம்' - இடுகாட்டில் கதறி அழுத தாய்
- சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்"
- சிறுபான்மையினர் உரிமை தினம் சுட்டிக்காட்டுவது என்ன?
- 225 கிலோமீட்டருக்கு அப்பால் கிடைத்த கென்டக்கி சூறாவளியால் தொலைந்து போது திருமணப் புகைப்படங்கள்
- கொரோனா இருப்பது தெரியவந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
- 1.7 கோடி உயிரினங்களை பலிவாங்கிய பிரேசிலின் காட்டுத்தீ சம்பவங்கள் - மனித குலத்துக்கு எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்