You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா இருப்பது தெரியவந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
- எழுதியவர், மிஷல் ரோபர்ட்ஸ்
- பதவி, சுகாதார செய்தி பிரிவு ஆசிரியர்
கோவிட் தொற்றுக்கு ஆளாகிவிட்டால், அடுத்து என்ன செய்யவேண்டும்? வீட்டிலிருந்தபடியே தொற்றுநோயை எதிர்கொள்வது எப்படி?
முதலில், தொற்றுக்கு ஆளானவரிடம் இருந்து அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் பரவாமல் தவிர்க்கவேண்டும். அதற்காக, தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.
அதுபோக, நோய்வாய்ப்பட்டவருடைய நலனுக்காக வல்லுநர்கள் வழங்கிய பரிந்துரைகளை இங்கு பார்ப்போம்.
குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்
யாரிடமும் சொல்லாமல் தனியாகச் சிரமப்படாதீர்கள். கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதன் மூலம், அவர்களால் இயன்ற உதவியைச் செய்வார்கள். வீட்டு வாசலில் உணவைக் கொண்டு வந்து வைப்பது, உடல்நிலை குறித்துச் சரிபார்க்க அடிக்கடி பேசுவது போன்ற அவர்களுடைய செயல்பாடுகள் உதவிகரமாக இருக்கும்.
ஓய்வெடுங்கள்
ஓமிக்ரான், டெல்டா போன்ற கொரோனாவின் வெவ்வேறு திரிபுகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பலருக்கும் லேசான அல்லது அறிகுறிகள் இல்லாமல் போகலாம். அப்படியிருக்கையில், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு கவனம் செலுத்துவதன் மூலம், தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக குணமடைய முடியும்.
பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை வழங்கியுள்ள முக்கிய அறிகுறிகள்:
- புதிதாக, தொடர்ச்சியான இருமல்
- காய்ச்சல்/ அதிக உடல் வெப்பநிலை
- வாசனை அல்லது சுவை இல்லாமல் போவது அல்லது மாறுபடுவது.
ஆனால், நூற்றுக்கணக்கான மக்களிடம் இருந்து, கோவிட் தொற்று பாதிப்பின் அனுபவங்களைப் பற்றிய கருத்துகளைச் சேகரித்து வரும் ஆய்வாளர்கள், அவர்களுக்கு ஏற்பட்ட முதல் ஐந்து அறிகுறிகளும் சளிப் பிரச்னையோடு தொடர்புடையவற்றைப் போலவே இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அவை,
- மூக்கில் நீர் வருதல் (runny nose)
- தலைவலி
- லேசான அல்லது கடுமையான சோர்வு
- தும்மல்
- தொண்டை வலி
உடல்நிலை மோசமாக இருப்பதாக உணர்ந்தால், அதற்கும் சில பரிந்துரைகள்.
அதிகமாக ஓய்வெடுக்கவும். நிறைய தண்ணீர் குடிக்கவும்.
நீங்கள் மிகவும் வசதியாக உணர பாராசிடமால் அல்லது இபுப்ரூஃபனை எடுத்துக்கொள்ளுங்கள்.
இருமலுக்கு, மல்லாக்கப் படுப்பதைத் தவிர்த்து பக்கவாட்டில் படுப்பது, நிமிர்ந்து உட்காருவது போன்றவற்றை முயலுங்கள்.
படுத்திருப்பதை விடவும் எழுந்து நேராக உட்காந்திருப்பது, சுவாசப் பிரச்னையை எதிர்கொள்பவர்களுக்கு நல்லது.
இவற்றையும் முயற்சி செய்யலாம்:
- மூக்கு வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, மெழுகுவர்த்தியை மெதுவாக ஊதுவதைப் போல, உதடுகளைக் குவித்து வாய் வழியாக மென்மையாக ஊதவும்.
- தோள்களைத் தளர்வாக வைத்துக்கொண்டு, உங்கள் முழங்கால்களில் கைகளை வைத்து சற்று முன்னோக்கி சாய்ந்துகொள்ளுங்கள்.
மூச்சுத் திணறலுக்கு உதவும் குறிப்புகள்
ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவைச் சரிபார்க்கக்கூடிய பல்ஸ் ஆக்சிமீட்டர் எனப்படும் கருவியைச் சிலர் ஏற்கெனவே வைத்திருக்கலாம் அல்லது வாங்கும் விருப்பம் இருக்கலாம்.
உங்கள் விரலில் வைத்து, தெர்மோமீட்டரில் உங்கள் வெப்பநிலையை அளவிடுவது போன்ற பயனுள்ள அளவீடாக இது இருக்கும்.
பல்ஸ் ஆக்சிமீட்டரை எவ்வாறு பயன்படுத்துவது?
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து வந்தால், அது உடல்நிலை மோசமாகி வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
95 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் ஆக்சிஜன் அளவு இருந்தால், அது ஆரோக்கியமானது. 93 அல்லது 4 ஆகக் குறைந்து, ஒரு மணிநேரம் கழித்தும் அப்படியே இருந்தால், நீங்கள் வழக்கமாக ஆலோசிக்கும் மருத்துவரிடம் அறிவுரை கேட்கலாம். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 92 அல்லது அதற்கு குறைவாக இருந்தால், (முறையாக அங்கீகரிக்கப்பட்ட கருவியில், அதோடு கொடுக்கப்பட்ட வழிமுறைகளின்படி நீங்கள் பயன்படுத்தவேண்டும்), மருத்துவமனைக்குச் சென்று பரிசோதிக்க வேண்டும்.
எப்போது உதவி பெறுவது எனத் தெரிந்துகொள்ளவேண்டும்
வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருக்கும்போது, உங்களுக்குச் சில கூடுதல் ஆலோசனைகள் தேவைப்பட்டால், அங்கீகரிக்கப்பட்ட மருந்தகத்தையோ உங்கள் பகுதியின் கோவிட் உதவி மையங்களையோ தொடர்புகொண்டு விசாரிக்கலாம்.
கோவிட் தொற்றுக்கு ஆளானவர்களில் சிலருக்கு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது உட்பட்ட மருத்துவ பராமரிப்புகள் தேவைப்படும்.
கீழ்கண்டவை இருந்தால், கோவிட் உதவி மையங்களுடைய அவசரக்கால எண்ணுக்கு அழைப்பதோ அல்லது உங்கள் மருத்துவரிடமோ அதுகுறித்த ஆலோசனைகளைப் பெறவும்:
- சிறிது சிறிதாக உடல்நிலை மேன்மேலும் மோசமடைவது அல்லது மூச்சு விடச் சிரமமாக இருப்பது
- எழுந்து நிற்கும்போது அல்லது நடக்கும்போது சுவாசிப்பதில் சிரமம்
- உடல் வலி அல்லது சோர்வாகவும் மிகவும் பலவீனமாகவும் உணர்வது
- உடல் நடுக்கம்
- பசி எடுக்காமல் இருப்பது
- உங்களை நீங்களே கவனித்துக்கொள்ள முடியாமல் இருக்கும் சூழ்நிலை- உதாரணமாக, குளித்தல், உடை அணிதல், உணவு தயாரித்தல் போன்றவை மிகவும் கடினமாக இருக்கும் சூழ்நிலை
- நான்கு வாரங்களுக்குப் பிறகும் உடல்நிலையில் சரியில்லாமல் இருப்பது - இது நீடிக்கும் கோவிட் தொற்றாக இருக்கலாம்
கீழ்கண்ட பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அவசர உதவியை அழைக்கவும்:
- மிகவும் மூச்சுத்திணறலாக இருப்பது, ஓய்வெடுக்கும்போது குறுகிய வாக்கியங்களைச் சொல்ல முடியாத நிலை
- சுவாசம் திடீரென மோசமடைதல்
- இருமலின்போது ரத்தம் வருவது
- தோல் வெளுத்துப் போவதோடு, குளிரோடு வியர்வையாகவும் இருப்பது
- தோலில் சிறிய காயங்கள் அல்லது ரத்தப்போக்கு போன்ற சொறி ஏற்படுதல் மற்றும் அவற்றின் மீது தெளிவான கண்ணாடி டம்ப்ளரை வைத்துப் பார்க்கையிலும் நிறம் மங்காமல் சிவந்திருக்கும் தோல் தெளிவாகத் தெரியும் அளவுக்கு சொறி ஏற்படுதல்
- மயக்கமடைதல்
- படபடப்பாக, குழப்பமாக, மிகவும் தூக்கமாக இருத்தல்
- சிறுநீர் கழிப்பது குறைதல் அல்லது சிறுநீரே கழிக்காமல் இருத்தல்
குழந்தையைப் பற்றிக் கவலைப்படுபவர்கள், மருத்துவ உதவி பெறுவதைத் தாமதப்படுத்த வேண்டாம். அவர்களுடைய உடல்நிலை மிகவும் சரியில்லாமல் இருந்தால், மோசமாகிவிட்டால் அல்லது ஏதேனும் சரியின்றி இருப்பதாக நீஙக்ள் உணர்ந்தால், தாமதப்படுத்தாமல், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
பிற செய்திகள்:
- "உய்கர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலை நிகழ்த்தியுள்ளது": அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம்
- நகைக்காக தாய் - மகள் வீட்டிற்குள் எரித்து கொலை: கூட்டாளியால் சிக்கிய 2 இலங்கை அகதிகள்
- ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.6 ஆயிரம் வசூலிப்பதாக புகார்
- பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் உடல்கள் ராணுவ மரியாதையுடன் தகனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்