You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நெல்லை பள்ளி விபத்து: 'எழுந்து வா விஷ்வா வீட்டுக்குப் போவோம்' - இடுகாட்டில் கதறி அழுத தாய்
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் இந்த விபத்து நடந்துள்ளது; எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்த பின் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என, உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
காரணமானவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்த பெற்றோர்
திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்ற மாணவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். மேலும், ஐந்து மாணவர்கள் படுகாயங்களுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, மாணவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், விபத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடல்களை வாங்க மறுத்து, தமிழக அரசு வழங்கிய நிதி உதவியை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர் மற்றும் கழிப்பறை கட்டிய ஒப்பந்ததாரர் என, மூவரையும் போலீசார் கைது செய்தனர் இதனையடுத்து, உடலைப் பெற்றுக் கொண்ட பெற்றோர் உடல்களை அடக்கம் செய்தனர்.
மேலும், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மையை முழு ஆய்வு செய்த பின் பள்ளிகளை இயக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"மாமா விஷ்வா செத்துட்டான்"
உயிரிழந்த மாணவர் விஷ்வ ராஜன் தந்தை கார்த்திக் பிபிசி தமிழிடம் பேசுகையில், "என் மகன் சாப்ஃடர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் எனது மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
என் மகனுடன் படிக்கும் மாணவனின் தந்தை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'பள்ளியில் கலவரமாக உள்ளது, வந்து உங்க பையனை கூட்டிட்டு போங்க' என கூறினார். இதனையடுத்து, உடனடியாக பள்ளிக்கு சென்ற போது பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியே வந்த வண்ணம் இருந்தனர்.
பின்னர், பள்ளிக்கு சென்று என் மகனை தேடிய போது அங்கு நின்று கொண்டிருந்த மாணவன் ஒருவன் 'மாமா விஷ்வா இறந்து விட்டான் என கூறி அழுதான்'. உடனே என் மகனின் வகுப்பு ஆசிரியரிடம் சென்று கேட்கும் போது 'கழிப்பறை சுவர் சாய்ந்து விழுந்ததில் உங்கள் மகன் இறந்து விட்டான்' என சொல்லி விட்டு கதறி அழுதார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு என் மகன் பள்ளியில் உள்ள கழிப்பறை துர்நாற்றம் வீசுவதாகவும், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று இருந்தாலும் பள்ளி நிர்வாகம் அந்த கழிப்பறையை பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்துவதாகவும் கூறினான். இந்த நிலையில் தான் இந்த கோர விபத்து நடந்து எனது மகன் உயிரிழந்துள்ளான்" என கண்ணீர் மல்க கூறினார் கார்த்திக்.
"என் மகன் கண் முன்னே உயிரிழந்த மாணவர்கள்"
கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் காயம் அடைந்த சஞ்சய் தாய் நதியா பிபிசி தமிழிடம் பேசுகையில், "இன்று காலை எட்டு மணிக்கு என் மகன் பள்ளிக்கு கிளம்பி சென்றான். சுமார் 12 மணி அளவில் அரசு மருத்துவமனையில் இருந்து எனக்கு போன் வந்தது. 'உங்களுடைய பையன் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான், உடனடியாக வாருங்கள், பயப்பட வேண்டாம்' என ஒருவர் பேசினார்.
உடனடியாக கிளம்பி வந்து பார்த்தபோது என் மகனும் அவனுடன் நான்கு பேரும் கால், கை, இடுப்பு எலும்பு உடைந்த நிலையில் சிகிச்சைக்காக தங்க வைத்திருந்தனர். விபத்து நடந்தது குறித்து பள்ளி தரப்பில் யாரும் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
என் மகன் கொஞ்சம் பயந்தவன் என்பதால் முதலில் கேட்டதற்கு அழுதான். பின்னர் தான் இடைவேளையின் போது கழிவறைக்கு சென்றபோது சுவர் இடிந்து விழுந்ததில் தனது காலில் முறிவு ஏற்பட்டது என்றான்.
சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் என் மகன் கண் முன்னே உயிரிழந்தது அவனை மனதளவில் அதிகம் பாதித்துள்ளது. இந்த விபத்தில் என் மகன் மன அழுத்தத்துடன் இருக்கிறான்" என்றார் நதியா.
"வாட்ஸ் அப் குறுஞ்செய்தியால் விபத்து தெரிய வந்தது"
கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த இசக்கி பிரகாஷ் சித்தப்பா மாரிமுத்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "நான் பெயிண்டர் வேலை செய்து வருகிறேன்.
இன்று காலை சுமார் 12 மணி அளவில் பாளையங்கோட்டை அருகே பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது என்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவருக்கு வாட்ஸ் அப் குழுவில் நெல்லையில் உள்ள சாஃப்டர் பள்ளியின் கழிப்பறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் உயிரிழந்ததாகவும், சிலர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் புகைப்படங்களுடன் குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
அதை பார்த்து அதிர்ந்து போய் உடனே பள்ளிக்கு தொடர்பு கொண்டு எனது அண்ணன் பையன் குறித்து கேட்டபோது, அவன் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக தெரிவித்தனர்.
உடனடியாக எனது அண்ணனுக்கு தகவல் கொடுத்துவிட்டு நேரடியாக மகனைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்த போது தான் தெரிந்தது மூன்று பேர் உயிரிழந்தது. பள்ளியின் அஜாக்கிரதையின் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது" என குற்றம் சாட்டினார் மாரிமுத்து.
"எஞ்சியுள்ள சுவர்கள் இடியும் நிலையில் உள்ளது"
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விஷ்வாவின் உறவினர் அனந்தகுமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "எனக்கு தகவல் கிடைத்த உடனே பள்ளிக்குச் சென்று பார்த்தேன். பள்ளியில் கழிப்பறை சுவர் கான்கிரீட் போடாமல் வெறும் செங்கலை கொண்டு சுவர் கட்டி இருப்பதால் இடிந்து விழுந்தது தெரிய வந்தது.
தொடர் மழையின் காரணமாக சரியான அடித்தளமிடாமல் நின்று கொண்டிருந்த சுவர் இடிந்து உள்ளது. இடியும் நிலையில் இருந்த சுவர் குறித்து மாணவர்கள் பள்ளி நிர்வாகம், வாட்ச் மேன் உள்ளிட்ட பலரிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் விளைவாகத்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
நான் பார்த்தவரை கழிப்பறை சுவர் இடிந்து வெளிப்பக்கமாக விழுந்துள்ளது. அதேபோல் உள் புறம் சுவர் இடியும் நிலையில் தான் உள்ளது. அந்த சுவர் இடிந்து விழுந்திருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். இப்படி உறுதி இல்லாத அரைகுறை கட்டடங்களால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை" என்றார் ஆனந்தகுமார்.
"பள்ளி ஆசிரியர்கள் மீட்க வரவில்லை"
இந்த விபத்தை நேரில் பார்த்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு படுகாயமடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஷேக் அபுபக்கர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "இடைவேளையின் போது நான் கழிப்பறை சென்றேன். அப்போது என் கண் முன்னே சுவர் இடிந்து விழுந்தது.
அப்போது இடிபாடுகளில் மாணவர்கள் சிலர் சிக்கினார்கள். விபத்தில் சிக்கியவர்களை ஆசிரியர்கள் யாரும் காப்பாற்ற வரவில்லை. உடனடியாக நானும் எனது நண்பர்களும் சேர்ந்து இடிந்து விழுந்த சுவற்றை அப்புறப்படுத்தி இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மாணவர்களை மீட்டோம்.
அதில், எனக்கு இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்" என்றார் மாணவர் ஷேக் அபுபக்கர்.
பிற செய்திகள்:
- சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்"
- சிறுபான்மையினர் உரிமை தினம் சுட்டிக்காட்டுவது என்ன?
- 225 கிலோமீட்டருக்கு அப்பால் கிடைத்த கென்டக்கி சூறாவளியால் தொலைந்து போது திருமணப் புகைப்படங்கள்
- கொரோனா இருப்பது தெரியவந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
- 1.7 கோடி உயிரினங்களை பலிவாங்கிய பிரேசிலின் காட்டுத்தீ சம்பவங்கள் - மனித குலத்துக்கு எச்சரிக்கை
- திருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் பலி; தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்