ரித்து ராக்ஸ்: விரைவில் வெள்ளித்திரையில் தோன்றவிருக்கும் யூட்யூப் ஸ்டார்

(செய்திகளும் தகவல் தொடர்பும் உலகை ஒன்றிணைந்துள்ளன. பலரும் இந்த இரு அறிவு சார்ந்த வழிகளைப் பயன்படுத்தி, தங்கள் கனவு உலகத்தைப் படைத்திருக்கிறார்கள். அப்படி சமூக வலைதளங்களின் மூலம் சாதித்தவர்களின் கதைகளை இத்தொடரில் வழங்குகிறது பிபிசி தமிழ்.)
'ரித்து ராக்ஸ்' என்ற யூட்யூப் சேனலில் தனது சுட்டித்தனமான வீடியோக்களின் மூலம் பிரபலமான கோவையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ரித்விக், இப்போது சினிமாவிலும் நடிக்க உள்ளார்.
இதைப்பற்றி பிபிசி தமிழிடம் பேசிய ரித்விக்கின் தந்தை க. ஜோதிராஜ், ரித்விக் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதாகவும், படப்பிடிப்பு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே ஒரு பிரபலமான ஜவுளிக்கடை விளம்பரத்தில் பல வேடங்களில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பார்க்கப்படும் முகமாகியிருக்கிறார் ரித்விக். இப்போது வெள்ளித்திரையிலும் அடியெடுத்து வைப்பது யூட்யூப் எனும் சமூக ஊடகத்தினால் சாத்தியமாகியிருக்கிறது.
உலகத் தமிழர்களின் பாராட்டு
ஆரம்பித்து ஆறே மாதங்களில் 18.6 லட்சம் சப்ஸ்க்ரைபர்களைத் தொட்டிருக்கும் ரித்து ராக்ஸ் சேனலின் மூலம் தாம் நினைத்ததைவிட பன்மடங்கு புகழும் வாழ்த்துக்களும் தேடி வந்திருப்பதாக சிறுவன் ரித்விக்கின் பெற்றோர் கூறுகின்றனர்.
"இந்தியா மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் கூட அழைத்து வாழ்த்துகின்றனர்," என்கிறார் ஜோதிராஜ்.
இதனால் எதிர்பார்ப்பும் அதிகமாகியிருப்பதாக அவர் கூறுகிறார். "வாரத்திற்கு 1 அல்லது 2 வீடியோக்கள் வெளியிடும்படி கோரிக்கைகள் வருகின்றன. ஆனால் நேரமின்மையால் மாதத்திற்கு 1 அல்லது 2 வீடியோக்கள் தான் வெளியிட முடிகிறது," என்கிறார் ஜோதிராஜ்.
ஆரம்பித்தது எப்படி?
ரித்து ராக்ஸ் சேனல் ஆரம்பித்த கதையை பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்துகொள்கையில், இது கோவிட் லாக்டவுன் சமயத்தில் வீட்டிலிருந்தபோது தோன்றிய யோசனை என்றார்.

"கோவிட் சமயத்தில், இரண்டு மாதங்கள் வீட்டிலேயே இருந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் மனச்சோர்வாக இருந்தபோது, காமெடியான விஷயங்களை கன்டென்ட்டாக செய்யலாம் என்று யோசித்தோம். அப்போது வேறு ஆர்ட்டிஸ்ட்களை வைத்து கன்டென்ட் செய்வதற்கான சூழ்நிலை இல்லை, வெளியே எங்கும் போகவும் முடியவில்லை. அப்போது எங்கள் மகன் அவனே வந்து 'டாடி, என்னோட பேருல ஒரு சேனல் இருக்கு, அதுலயே ஒரு கன்டென்ட் வீடியோ பண்ணலாம்ல,' என்று கேட்டார்," என்று சொல்கிறார் ஜோதிராஜ்.
இதைப்பற்றிக் கூறும் ரித்விக்: "டாடி எப்பவும் சாப்பிட்ட அப்புறம் போய் கம்ப்யூட்டர்ல வேலை செஞ்சிட்டு இருப்பார். எனக்கு போர் அடிச்சதுன்னு சொல்லி யூட்யூப் சேனல் பண்ணலாம்னு கேட்டேன். அப்புறம் ஜாலியா ஒன்னு பண்ணோம். அப்பறம் இன்னொன்னு பண்ணாலாம்னு சொன்னாங்க, அதனால் பண்ணோம். இப்போ அப்டியே போய்ட்டு இருக்கு," என்கிறார்.
தந்தையும் மகனுமாக சேர்ந்து, வீடியோக்களுக்கான கதையை ஆலோசித்து முடிவு செய்து, DSLR கேமராவில் அவர்கள் வீட்டிலேயே படம்பிடித்து வீடியோக்களை தயாரிக்கிறர்கள்.
அத்தனை கதாபாத்திரங்களும் ஒருவரே
டெய்லர், சர்வர், டாக்டர், மன்னர் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் ரித்விக், தானே ஆண் மற்றும் பெண் பாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்.
"அந்தப் பெண் கேரக்டரை தனியாக யாரையோ வைத்து பண்ணீருக்காங்க, பைய்யன் கேரக்டரை தனியா பண்ணீருக்காங்க, இவங்க ரெண்டு பேரும் சிஸ்டர் பிரதர்னு நிறைய பேரு கமென்ட்ஸ் போட்டாங்க. அப்பறம் இப்ப ரீசென்டா உண்மைய சொன்னப்பறம் எல்லாரும் 'அடடா என்ன இப்படி பண்ணீட்டாங்க, ஒருத்தரேதான் இத்தனையும் பண்ணீருக்காரா'னு ஆச்சரியப்பட்டாங்க," என்கிறார் ஜோதிராஜ்.
'வீட்டிலும் துறுதுறுப்பானவர்'
வீடியோக்களில் மட்டுமல்ல, ரித்விக், நிஜத்திலும் மிகவும் துறுதுறுப்பானவர் என்கிறார் அவரது தாய் ஹ ஆஷாதாஸ். "பயங்கர ஆக்டிவா இருப்பான். மத்தியானம் தூங்க சொன்னாலும் தூங்க மாட்டான். எதாவது சொல்லிட்டே இருப்பான், இல்லன்னா கேட்டுட்டே இருப்பான். பேப்பர்ல கலர் பண்ணி, க்ராஃப்ட் மாதிரி பண்ணி கொண்டுவந்து காட்டுவான்," என்கிறார்.

ரித்விக்கின் பள்ளிப் படிப்பையும், யூட்யூப், விளம்பரங்கள், சினிமா போன்றவற்றையும் எவ்வாறு ஒரே சமயத்தில் சமாளிக்கிறார்கள் என்று ஜோதிராஜிடம் கேட்டோம். "இப்போது ஆன்லைன் வகுப்புகள் தான் போய்க்கொண்டிருப்பதால், ஒரு நாளைக்கு 2 அல்லது 2.5 மணி நேரம்தான் வகுப்புகள் இருக்கும். அதை முடித்துவிட்டு, மீதமிருக்கும் நேரத்தில்தான் வீடியோ பணிகளைச் செய்வோம்," என்கிறார் அவர்.
எதிர்காலத் திட்டம்?
சமூக வலைதளம், தொலைக்காட்சி, இப்போது சினிமா பிரவேசம் என்று முன்னேறி வருபவர்களிடம் எதிர்காலத் திட்டங்களைப் பற்றிக் கேட்டோம். "ரித்விக்கை வைத்து நாங்களே ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறோம். நல்ல வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செய்வோம்," என்கிறார் ஜோதிராஜ்.

(உங்கள் சாதனைகளை உலகுக்கு சொல்ல உங்களுக்கொரு வாய்ப்பு! ரித்து போல நீங்களோ உங்களுக்குத் தெரிந்தவர்களோ தங்கள் உலகை விரிவாக்கிக்கொண்டிருந்தால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கீழ்கண்ட விவரங்களை அனுப்புங்கள்:
முழு பெயர்:
வயது:
நீங்கள் யாரை பரிந்துரைக்கிறீர்கள் (தங்களை/ பிறரை):
பிறர் என்றால், உங்களுக்கும் நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபருக்கும் உள்ள உறவு:
உங்கள் கதையைப் பகிர்ந்துகொள்ளுங்கள்:
உங்களை எங்கள் ஆசிரியர் குழு தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:)

பிற செய்திகள்:
- கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்
- குழந்தைகளை விற்கும் தாய்கள்: தமிழ்நாட்டில் குழந்தை விற்பனை எப்படி நடக்கிறது?
- நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினரால் பொதுமக்கள் சுட்டுக்கொலை: விசாரணைக்கு உத்தரவு
- 'மனிதாபிமானமற்ற, இழிவான நிலையில் வாழும் மலையகத் தமிழர்கள்' - ஐ.நா அலுவலர் கவலை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












