ராமநாதபுரம் இளைஞர் மணிகண்டன் மரணம்: மறு உடற்கூறாய்வு செய்ய மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

மணிகண்டன் குடும்பத்தினர்
படக்குறிப்பு, மணிகண்டன் குடும்பத்தினர்
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

முதுகுளத்தூரில் காவல் துறை தாக்கியதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டப்படும் விவகாரத்தில் அவரது உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமதின்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 4ம் தேதி போலீசார் விசாரணைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மறுநாள், கல்லூரி மாணவர் மணிகண்டன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நீதி விசாரணை நடத்தக் கோரி கடந்த இரண்டு நாட்களாக மணிகண்டனின் பெற்றோர், அவரது உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.

உடலை வாங்குவது தொடர்பாக போலீசார் மற்றும் உறவினர்களிடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இதனையடுத்து, பெற்றோர், விசாரணைக்கு அழைத்துச்சென்ற போலீசார் அடித்து துண்புறுத்தியதால்தான் தங்கள் மகன் உயிரிழந்துள்ளார்; ஆகவே சம்மந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த மாணவர் மணிகண்டன் கடந்த சனிக்கிழமை ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மதுரை மேலூரில் இருந்து திருடப்பட்டது எனவும், திருடப்பட்ட வாகனத்தில் சென்னை பதிவு எண் பொருத்தி பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மதுரை மேலூர் காவல் நிலையத்தில் திருடுபோன இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்று காவல்துறை தெரிவிக்கிறது.

மணிகண்டனின் அம்மா கூறுவது என்ன?

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மணிகண்டனின் தாயார் ராமலட்சுமி, "சனிக்கிழமை இரவு என்னுடன் மணிகண்டன் வந்த போது மிகவும் சோர்வுடன் இருந்தான். நான் காவல் நிலையத்தில் போலீஸ் அடித்தார்களா என கேட்டதற்கு, 'அம்மா போலீசார் என்னை கடுமையாக அடித்தார்கள்,' எனத் தெரிவித்தான்," என்றார்.

மணிகண்டன்
படக்குறிப்பு, மணிகண்டன்

"சாப்பிட்டுவிட்டு படுக்குமாறு கூறினேன். போலீஸ் அடித்ததால் சாப்பிட முடியவில்லை எனக்கூறி உடல் வலி காரணமாக மாத்திரை சாப்பிட்டு தூங்கிவிட்டார். அதிகாலை பார்க்கும் போது வாயில் நுரை தள்ளிய நிலையில் என் மகன் இறந்த கிடந்தான்.என் மகன் இறப்பில் சந்தேகம் உள்ளது எனவே நாங்கள் இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளோம்," என்று ராமலட்சுமி கூறினார்.

அந்த வழக்கில் என் மகன் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும், உடலை மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் தண்டிக்கப்பட்டு என் மகனின் இறப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளோம் என்றார் ராமலட்சுமி.

தொடர்ந்து பேசிய ராமலட்சுமி, காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளியை மட்டும் ஆதாரமாக வைத்து போலீசார் காவல் நிலையத்தில் எனது மகனை காவலர்கள் தாக்கவில்லை என கூறுவதை எங்களால் ஏற்க முடியாது என்றார்.

காவல்துறை கூறுவது என்ன?

உயிரிழந்த மணிகண்டனைக் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி, உயிரிழப்பு குறித்து முதுகுளத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் முழு விசாரணை நடைபெற்றது வருகிறது என்றார்.

காவல் துறை
படக்குறிப்பு, காவல் துறை

"மணிகண்டன் மாணவர் என்பதால் அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் வாகனத்தை திருப்பிக் கொடுத்து அவரது தாயின் முன் எழுதி வாங்கிவிட்டு அவருடன் திருப்பி அனுப்பி உள்ளனர்."

"அதற்கான காணொளி அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவில் தெளிவாக உள்ளது என்பதால், உறவினர்கள் சொல்வதை போல் காவல் நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளானதால் மணிகண்டன் உயிரிழந்தற்கான எந்த பதிவும் இல்லை. இதனால் மணிகண்டன் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது."

மேலும் தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் அவரது உறவினர்கள் முன்னிலையில் காவல் நிலையத்தில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தப்படும். இதில் எந்த ஒளிவுமறைவும் இருக்காது தெளிவாக இந்த மரணத்தில் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்.

மறு உடற்கூராய்வு செய்ய மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் ஆனைசேரியைச் சேர்ந்த மணிகண்டனின் தாய் ராமலட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "எனது மூத்த மகன் மணிகண்டன் முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லூரியில் இளநிலை படிப்பு பயின்று வந்தார். கடந்த 4ஆம் தேதி மணிகண்டனை கீழத்தூவல் காளி கோயில் அருகே காவலர்கள் லட்சுமணன் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். மணிகண்டன் வாகனத்தை நிறுத்தாமல் செல்லவே, அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு வந்து என் மகனை அழைத்துச் செல்ல வேண்டும் என்று காவல் நிலையத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. காவல் நிலையத்திலிருந்து மணிகண்டனை விரைவாக அழைத்துச் செல்லுமாறு அவசரப்படுத்தினார்," என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார் ராமலட்சுமி.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.
படக்குறிப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.

"அடுத்தநாள் (டிசம்பர் 5) அதிகாலை 1.30 மணி அளவில் எனது மகன் உயிரிழந்தார். அவரது உடற்கூராய்விற்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனது மகனின் மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை."

"காவல்துறையினர் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதே மகனின் இறப்பிற்கு காரணம். ஆகவே மகனின் உடலை மறு உடற்கூராய்வு செய்யவும், முதுநிலை காவல்துறையினர் மூலம் இந்த வழக்கை விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார் ராமலட்சுமி.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், "காவல் துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே மணிகண்டன் உயிரிழந்துள்ளார். காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட சிசிடிவி பதிவு 2 நிமிடம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது," எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையேற்ற நீதிபதி, மணிகண்டனின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மறு உடற்கூராய்வு செய்யவும், அதனை முழுமையாக காணொளிப் பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

மறு உடற்கூறாய்வு அறிக்கை வைத்தபின் மணிகண்டன் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் மேலதிக விசாரணை நடக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :