டி.என்.பி.எஸ்.சியில் இனி கட்டாய தமிழ் தேர்வு

தேர்வு எழுதும் மாணவர்கள் கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேர்வு எழுதும் மாணவர்கள் கோப்புப் படம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ்நாட்டினர் அல்லது தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயம் என்கிற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களும் பங்கேற்கலாம் என்று கடந்த 2016ம் ஆண்டு வழிவகை செய்யப்பட்டது. இதன்படி,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெளி மாநிலத்தவர்களும் பங்கேற்கலாம். தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசுப் பணிகளில் சேரலாம் என்கிற நிலை ஏற்பட்டது. இது தமிழ்நாடு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் செயல் என்று அதிமுக மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளை தவிர பெரும்பான்மையான அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழ்நாடு சட்டபேரவையில், கடந்த செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்ற மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையின் போது, "தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் 100 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் தகுதித்தேர்வாக நடத்தப்படும்" என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்தனர்.

தேர்வு எழுதும் மாணவர்கள் கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேர்வு எழுதும் மாணவர்கள் கோப்புப் படம்

இந்நிலையில், இந்த அறிவிப்பு தற்போது அரசாணையாக வெளியாகியுள்ளது. இதன்படி, டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாள் கட்டாயம் இடம் பெறும். தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் 10 வகுப்பு நிலையில் இருக்கும். கட்டாய தமிழ் தாள் தேர்வில், குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் பெறாதவர்களின் பிற தாள்கள் திருத்தப்படாது.

தற்போது நடைமுறையில் உள்ள தமிழ் பொதுத் தமிழ்/ பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் பொது ஆங்கிலம் தாள் தேர்வு நீக்கப்படுகிறது. பொதுத்தமிழ் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக இருக்கும். மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் உள்ளிட்ட மாநிலத்தின் பிற தேர்வு முகமைகளில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை நடத்துவது தொடர்பான மேற்படி வழிகாட்டு நெறிமுறைகள் சம்மந்தப்பட்ட நிர்வாகத் துறைகளால் வெளியிடப்படும்" இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :