ஆந்திராவில் வெள்ளம்: ராயலசீமாவில் பேரழிவு, அணைகளில் உடைப்பு, அடித்துச் செல்லப்பட்ட மக்கள்

வெள்ளம்

வங்கக்கடலில் ஏற்பட்ட புயலால், ஆந்திர மாநிலத்தின் ராயலசீமா மக்கள் பெருத்த சேதங்களை சந்தித்துள்ளனர். அங்கு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாரப்பூர்வ தகவலின்படி, 8 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

ஆந்திராவில் ஏற்பட்ட இந்த பெரு வெள்ளம், கடப்பா, சித்தூர், அனந்தபூர் மற்றும் நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனமழை காரணமாக பென்னா ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அணைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், பொதுமக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

வெள்ள பாதிப்புகளை அறிய பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு "பிபிசி" நேரடியாக சென்றது.

நவம்பர் 16 முதல் ஆந்திராவின் சில பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. இது தொடர்பாக முன்கூட்டியே கணித்த இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி), வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் எனவும், இதனால் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.

இப்புயல் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா அருகே கரையைக் கடக்கும் எனவும் ஐ.எம்.டி. எச்சரித்திருந்தது. கோயில் நகரமான திருமலையில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு 20 செ.மீ. மழை பதிவானது என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியை வெள்ளம் சூழ்ந்ததால் இந்த நிலைமை மிகவும் மோசமானது. சித்தூர் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் இம்மாதிரியான சூழல் ஏற்பட்டது. ஏரிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், ஆறுகள் மற்றும் குளங்களில் நீர்மட்டம் உயர்ந்தது. கனமழையினால் பிஞ்சா ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டது.

போதுமான பாதுகாப்பில்லாத பிஞ்சா அணை

கடப்பா மாவட்டத்தில் டி சுண்டுபள்ளி அருகே உள்ள பிஞ்சா ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது பிஞ்சா அணை. சித்தூர் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் ஏற்படும் வெள்ளம், இந்த அணையில் தான் பெருக்கெடுத்து ஓடும். கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழையினால் இந்த அணைக்கு ஆபத்து ஏற்பட்டது.

கடப்பா மாவட்டத்தில் சேதமடைந்த வீடு
படக்குறிப்பு, கடப்பா மாவட்டத்தில் சேதமடைந்த வீடு

அணையின் பாதுகாப்புக்கு தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், தற்போது ஏற்பட்ட வெள்ளத்தை அதனால் கட்டுப்படுத்த முடியவில்லை. எதிர்பாராத விதமாக, கடந்த நான்கு தினங்களாக பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ள நீர், அணையின் நீர்தேக்க அளவை கடந்துள்ளது.

கனமழை காரணமாக, அணையில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பிஞ்சா அணையிலிருந்து வரும் வெள்ள நீர் மற்றும் பஹுடாவில் இருந்து வரும் வெள்ள நீர் இரண்டும் சேர்ந்து செய்யேரு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அன்னமய்யா அணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பழமையான அன்னமய்யா அணை உடைந்தது

1976 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜலகம் வெங்கலராவ் இருந்தபோது, அன்னமய்யா அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டம், என்.டி.ராமாராவ் ஆட்சிக்காலத்தில் முடிவுற்றது. இந்த அணை மூலம் 10,000 ஏக்கர் அளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், ராஜம்பேட் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர் தேவையும் இந்த அணை மூலம் பூர்த்தியாகிறது.

அன்னமய்யா அணையில் உடைப்பு ஏற்பட்டது
படக்குறிப்பு, அன்னமய்யா அணையில் உடைப்பு ஏற்பட்டது

அன்னமய்யா அணை மேலாண்மை தொடர்பாக சில புகார்கள் ஏற்கெனவே எழுந்தன. அணை தொடர்பான நிர்வாக ரீதியிலான பிரச்சினைகள் சம்மந்தமான செய்தி கட்டுரைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.

"பிஞ்சா அணையில் இருந்து பெருக்கெடுத்து ஒடிய 3.5 லட்சம் கன அடி வெள்ள நீரை தேக்கும் அளவுக்கு அன்னமய்யா அணையின் நீர்தேக்க அளவு இல்லை" என, மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் கடப்பா வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கான சிறப்பு அதிகாரியுமான சசிபூஷன் பிபிசியிடம் கூறினார்.

"அன்னமய்யா அணை ஆரம்பத்தில் 2 லட்சம் கன அடி நீரை தேக்கி வைக்கும் அளவுக்குத் திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது அதன் தேக்க அளவைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணையிலிருந்து நீரை வெளியேற்ற முயற்சித்தோம். ஆனால், அணையின் மேல்பகுதியிலிருந்து வெளியேறிய நீர், அதனை முற்றிலும் சேதப்படுத்தியது.

இதனால், அணையின் கீழ்பகுதியில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. முன்கூட்டியே இதுகுறித்து எச்சரிக்கப்பட்டிருந்ததால், உயிரிழப்புகளை குறைக்க முடிந்தது. நந்தலூர் மற்றும் ராஜம்பேட் மண்டல் பகுதிகளில் உள்ள 9 கிராமங்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கின" என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அடித்துச் செல்லப்பட்ட மக்கள் அச்சத்தில் கிராமங்கள்

செய்யேரு ஆற்றில் கட்டப்பட்டுள்ள அன்னமய்யா அணை, கீழ்பகுதியில் உள்ள கிராமங்களின் பாசன தேவையை பூர்த்தி செய்கிறது. எனினும், இந்த அணை உடைப்பு தங்கள் கிராமங்களை முற்றிலும் மூழ்கடிக்கும் என, செய்யேரு கிராம மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆற்றங்கரையோரத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளதால், நீர்ப்பாசனம், குடிநீர் ஆகியவற்றுக்கு எவ்வித பிரச்சினைகளையும் இதுவரை சந்தித்ததில்லை. ராஜம்பேட்டில் உள்ள புலபுத்தூர், குண்டலூரு, மண்டபள்ளி, நந்தலூரு மண்டலங்களிலும் இதே நிலைதான்.

நவம்பர் 19 அன்று செய்யேறு கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், ஏராளமான வீடுகள் மற்றும் அருகாமை கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பெரும்பாலான மக்கள் அச்சத்தின் காரணமாக பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். சிலர் தங்கள் உயிரைக் காக்க மலை உச்சிகளில் தஞ்சம் புகுந்தனர். சிலர் இன்னும் பயத்துடன் தங்கள் கிராமத்திலேயே உள்ளனர். சிலர், வீட்டு மாடிகளில் அடைக்கலம் புகுந்தனர். சிலர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஸ்ரீவாரி
படக்குறிப்பு, ஸ்ரீவாரி படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளன.

"என் கணவர் காது கேளாதவர். நாம் சொல்வக்தை அவரால் கேட்க முடியாது. சிலர் எங்களுக்கு வெள்ளம் குறித்து தகவல் தெரிவித்தனர். ஆனால், அதற்குள் எங்களின் வாசற்கதவு வரை வெள்ளம் வந்துவிட்டது. மலை மீது ஏற எங்களுக்கு சக்தி இல்லை. இங்கு பல ஆண்டுகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இப்படிப்பட்ட சூழலை நாங்கள் சந்தித்ததே இல்லை. எங்கள் வீட்டின் மாடிக்கு நாங்கள் சென்றுவிட்டோம். எங்களைச் சுற்றி வெறும் தண்ணீரை மட்டுமே பார்க்க முடிந்தது. அது அலைகளைப் போல வந்தது. என்ன நடக்கிறது என்பதே எங்களுக்குத் தெரியவில்லை".

"3-4 மணிநேர பதற்றத்துக்குப் பிறகு, வெள்ளம் சற்று தணிந்தது. எனவே, நாங்கள் கீழே சென்றோம். வெள்ளத்தில் மக்கள் எங்கள் கண் முன்னே அடித்துச் செல்லப்பட்டனர். எங்கள் உறவினர்களின் சடலங்களை எங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை" என, புலபுத்தூரு கிராமவாசி எம் நாகமணி பிபிசியிடம் கூறினார்.

இக்கிராமத்துக்கு அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு நீண்ட வரலாறு உள்ளது. இந்த கோயிலின் பூசாரியின் ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை இன்னும் கண்டறிய முடியவில்லை. அவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

செய்யேரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 12 பேரின் உடல்களை கண்டறிந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வெள்ளத்தில் காணாமல் போனதாக கருதப்படும் 20 பேரை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

வெள்ளம்

பட மூலாதாரம், APCMO

படக்குறிப்பு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்

ஆனால், அதிகாரிகள் கூறும் எண்ணிக்கை, உள்ளூர் மக்கள் கூறும் எண்ணிக்கையின் அருகில் கூட வரவில்லை.

"என் அத்தையும் அவருடைய கணவரும் வெள்ளத்தில் காணாமல் போய்விட்டனர். வீட்டில் உள்ள மதிப்புமிக்க பொருட்களை எடுப்பதில் அவர்கள் ஈடுபட்டதால், பாதுகாப்பான இடத்துக்குச் செல்வதில் காலம் தாழ்த்திவிட்டனர். நாங்கள் சத்தமாக அழைத்தும் அவர்கள் வெளியே வரவில்லை. இப்போது அவர்களின் தடமே தெரியவில்லை".

"எங்கள் கிராமத்தில் எஸ்.சி காலனியை சேர்ந்த 3 பேரைக் காணவில்லை. ராஜம்பேட்டை சேர்ந்த 4 பேரையும் காணவில்லை. எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 10 பேரைக் காணவில்லை. மண்டபள்ளியில் 6 பேர், குண்டலூரில் 10 பேரை காணவில்லை. இவர்களைச் சேர்த்து மொத்தம் 26 பேர் ஆகிறது. ஆனால், அரசு இந்த எண்களை மேற்கோள் காட்டவில்லை" என, புலுபுத்தூரு கிராமத்தைச் சேர்ந்த எம் நாகிரெட்டி தெரிவித்தார்.

சோமசிலா அணையை சுற்றியும் வெள்ளம் காரணமாக ஆபத்தான சூழலே நிலவுகிறது. சோமசிலா நீர்த்தேக்கத்தை பாதுகாக்க நீர்ப்பாசன அதிகாரிகள் தயார்நிலையில் உள்ளனர்.

நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றும் நீரின் அளவை அதிகரிப்பதன் மூலம் அவர்கள் நீரின் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தியுள்ளனர். ஆனால், வெள்ளம் காரணமாக, 5.38 லட்சம் கன அடி நீரை வெளியேற்றும் நிலையை நீர்த்தேக்கம் எட்டியது.

கடப்பா சாலை
படக்குறிப்பு, கடப்பாவில் துண்டிக்கப்பட்ட சாலை

சோமசிலா அணையை உடைப்பிலிருந்து தடுக்க முடியும் என்பதால், அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். சோமசிலா பென்னேறுவில் இருந்து வரும் வெள்ளப்பெருக்குடன், பெண்ணாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நெல்லூர் அருகே வெள்ள பாதிப்புகள் தீவிரமாக உள்ளன.

உயர்மட்ட பகுதிகளில் பெய்துவரும் மழையால் பென்னா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அபாயக் கட்டத்தைக் கடந்தும் வெள்ள நீர் ஓடுவதால், நெல்லூர் மற்றும் கோவூரு சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

நவம்பர் 20 முதல் நெல்லூரில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நெல்லூர் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் இதனால் சேதமடைந்தது. இதன்காரணமாக, சென்னை - ஹவுரா தடம் வழியே செல்லும் 80 ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடப்பா மற்றும் ராஜம்பேட் இடையேயான ரயில் பாதையும் சேதமடைந்துள்ளது. சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பணிகள் நிறைவடைய 3 நாட்களாகும் எனவும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மொத்தமாக 172 ரயில்கள் இதனால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏரியல்

பட மூலாதாரம், APCMO

படக்குறிப்பு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்

விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்ததால் அவை ஏரிகளை போல காட்சியளிக்கின்றன. இதனால், சில லட்சம் ஏக்கர் மதிப்பிலான விவசாய நிலங்கள் சேதமடைந்தன. தேசிய நெடுஞ்சாலையில் (என்.ஹெச். 16) அமைந்துள்ள சாலைகளும் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

1,800 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள், 2,600 மின் கம்பங்கள் இந்த வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான கிராமங்கள் மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த கட்டுரையை எழுதும் சமயத்தில் சோமசிலா இயல்பான நிலையில் இருந்தபோதிலும், பென்னா, மைலாவரம் அணையில் நீர்வரத்து குறையவில்லை.

கனமழையால் 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், 8 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மற்றொருபுறம், பொதுமக்களின் உடமைகளும் பலத்த சேதங்களை சந்தித்துள்ளன. ஆயிரக்கணக்கிலான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆந்திர அரசு கணக்கெடுப்பின்படி, தோராயமாக 3,500 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. பேரிடர் மேலாண்மைத் துறை அளித்த தகவலின்படி, 28 ஏரிகள் மற்றும் ஒடைகளில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளன.

அனந்தபூரில் உள்ள 1,00,000 ஏக்கர் மதிப்பிலான நிலங்கள், கடப்பாவிலுள்ள 1,50,000 ஏக்கரிலான நிலங்கள் சேதமடைந்துள்ளன. 4.85 லட்சம் ஹெக்டேர் மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன.

வெள்ள சேதங்கள் குறித்து பிரதமர் மோதி, ஆந்திர முதல்வரை தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வான்வழியாக சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார். சேதங்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சேதங்களை குறைத்திருக்கும் என்கிறார், ஓய்வுபெற்ற பாசன பொறியாளர் எஸ்.பலவீரன்ஜனேலு.

ரயில்பாதை
படக்குறிப்பு, ரேணிகுண்டா - குண்டக்கல் இடையிலான பல கிலோ மீட்டர் ரயில்பாதை அடித்துச் செல்லப்பட்டது.

"ஐ.எம்.டி எச்சரித்தவுடனேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அணை மேலாண்மை தொடர்பான முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. உயரமான பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரை தேக்க அணைகளிலிருந்து நீரை முறையாக வெளியேற்ற வேண்டும். எனினும், பெரு வெள்ளம், பிஞ்சா அணையில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது".

"கடந்தாண்டு வெள்ளம் ஏற்பட்டபோது, பிஞ்சா கரையில் பிரச்சினைகள் இருந்தபோதிலும் அதனை சமாளிக்க முடிந்தது. ஆனால், தற்காலிக நடவடிக்கைகளை வைத்துக்கொண்டு இத்தகைய பெரு வெள்ளத்தை எதிர்கொள்ள முடியாது. அன்னமய்யாவில் ஏற்பட்ட சேதத்தினால் மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனால், நெல்லூர் மாவட்டத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன" என, எஸ்.பலவீரன்ஜனேலு தெரிவித்தார்.

"கந்திகோட்டா, மைலாவரம், பென்னார் பகுதிகளில் மழைநீர்ப் பெருக்கால், பென்னா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. மற்றொருபுறம், சோமசிலா நீர்மட்டத்தைத் தாண்டி உயர்ந்துள்ளது.

தகுந்த காலத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், நாம் சேதங்களை குறைத்திருக்க முடியும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டன", என்றார்.

கடப்பா
படக்குறிப்பு, கடப்பா மாவட்டத்தில் சேதமடைந்த வீடு

ஆனால், சசிபூஷன் இதனை மறுக்கிறார். அன்னமய்யா அணை விவகாரத்தில் எவ்வித மேலாண்மை குறைபாடுகளும் இல்லை என்கிறார். இத்தகைய பெரு வெள்ளம் எதிர்பாராதது என்கிறார்.

"கீழ்பகுதியில் உள்ள கிராம மக்களை நாங்கள் எச்சரித்தோம். 1,500 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், சிலர் எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளாததால் உயிரிழப்புகள் நேரிட்டன. அரசு பாதிக்கப்பட்டவர்களுடன் உடன் நிற்கும்" என்றார் சசிபூஷன் குமார்.

வெள்ள சேதங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கையில் அரசு, பல்வேறு அரசியல் விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக, எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

"கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, மக்களும் விவசாயிகளும் பெரும் சேதங்களை எதிர்கொண்டுள்ளனர். எல்லாவற்றையும் இழந்தவர்கள் வீதிகளில் நிர்க்கதியாக நிற்கின்றனர். ஆனால், அரசு இந்த பிரச்சினைகளுக்கு போதுமான கவனம் செலுத்தவில்லை. அதிகாரிகள் மற்றும் அரசின் கவனக்குறைவால் இதனை நாம் சந்தித்துள்ளோம்" என, தெலுகு தேசம் கட்சியின் மாநில தலைவர் கிஞ்சரப்பு அச்சநாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

"இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். மீட்பு நடவடிக்கைகளுடன் சேர்த்து நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். கஷ்டப்பட்டு விளைவித்தவற்றை விவசாயிகள் இழந்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என கோருகிறார் அச்சநாயுடு.

திருப்பதியிலுள்ள ராயல ஏரியின் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :