"ரஜினிகாந்த்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு நீக்கப்பட்டது": மருத்துவமனை அறிக்கை

நடிகர் ரஜினிகாந்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், அதை நீக்கும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை கூறுகிறது.

நடிகர் நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரவித்தனர்.

இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கையை காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், ரஜினிகாந்த் நேற்று சிறிய தலைசுற்றலுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் (Carotid Artery) அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது என்று கூறியுள்ளது.

இதையடுத்து அவருக்கு அந்த அடைப்பை நீக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் அந்த அடைப்பு நீக்கப்பட்டதா அல்லது ஸ்டென்ட் பொருத்தப்பட்டதா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

அவர் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என காவிரி மருத்துவமனையில் அறிக்கை கூறுகிறது.

ரஜினிக்கு இதற்கு முன்பாக 2011ஆம் ஆண்டு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சைபெற்றார். 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டதையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், பக்கவாதத்திற்கு முந்தைய நிலையான மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ரஜினி. ஏற்கெனவே, 2011 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதன்பிறகு, ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது உடல்நலனைப் பரிசோதிப்பதில் ரஜினி அக்கறை செலுத்தினார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பேரிடர் காரணமாக, அவர் வெளிநாடு செல்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதன்பிறகு, மத்திய அரசின் அனுமதியோடு அவர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற தகவலும் வெளியானது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அரசியலுக்கு வருவதாகக் கூறி வந்த ரஜினி, ஐதராபாத்தில் `அண்ணாத்த' படப்பிடிப்பில் இருக்கும்போது ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அங்குள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒருகட்டத்தில், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கிவிட்டார். கடந்த சில நாள்களுக்கு முன் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான `தாதா சாகேப் பால்கே' விருதைப் பெற்ற ரஜினிகாந்த், மிகுந்த உற்சாகத்தில் இருந்தார்.

நேற்று முன்தினம், தனது பேரன்களுடன் அண்ணாத்த திரைப்படத்தைப் பார்த்தார். இதுதொடர்பாக, தனது மகள் சௌந்தர்யாவின் ஹூட் செயலியில் பகிர்ந்த ரஜினி, ` நான், என் மகள்கள், மருமகன் விஷால், மனைவி, சம்பந்தி மற்றும் பேரன்களுடன் அண்ணாத்த படத்தை பார்த்தோம். குறிப்பாக என் பக்கத்தில் உட்காந்து என் பேரன் முதன் முறையாக படம் பார்த்தான். படம் பார்த்து முடித்தவுடன் எனது பேரன் என்னை விடவே இல்லை. கட்டிப்பிடித்து `தாத்து தாத்து படம் வெரி நைஸ்' என்றான்.

அவன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தால் என்னை `தாத்து' என அழைப்பது வழக்கம். படம் முடித்து வெளியே வந்த பிறகு கலாநிதி மாறன் திரையரங்குக்கு வெளியே காத்திருந்தார். அதிர்ச்சியாக இருந்தது.

மணி 10க்கு மேல் இருக்கும்.. அப்போது என்ன சார் இங்க என கேட்டேன். இல்லை உங்களை பார்க்கணும் என்றார். பிசியான ஆளாக இருப்பவர், என்னை சந்திக்கனும் என்றார். எப்போதும் மேன்மக்கள் மேன் மக்களே' எனப் பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, திடீரென மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டது, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி. இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், ` இது வழக்கமான பரிசோதனைதான். அவரது உடல்நிலை குறித்து கவலைப்பட எதுவுமில்லை. அவர் நலமாக இருக்கிறார்' என்றார். மேலும், மருத்துவமனையில் ஒருநாள் தங்கியிருந்துவிட்டு பரிசோதனை முடிந்த பிறகு ரஜினி வீடு திரும்புவார் எனவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :