பாலியல் வன்புணர்வான பெண் கருக்கலைப்பின்போது பலி - உத்தர பிரதேசத்தில் என்ன நடக்கிறது?

வல்லுறவு.
படக்குறிப்பு, சித்திரிப்புப் படம்.

உத்தர பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில் உள்ள கப்ரயி பகுதியைச் சேர்ந்த பாலியல் வன்புணர்வுக்கு இலக்கான ஒரு பெண் கருக் கலைப்பு செய்தபோது உயிரிழந்தார்.

இது தொடர்பாக கருக்கலைப்பு செய்ய முயன்ற டாக்டர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பெண்ணின் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு நபர் அந்தப் பெண்ணை 6-7 மாதங்களுக்கு முன்பு வன்புணர்வு செய்துவிட்டார். ஆனால், அச்சத்தின் காரணமாக அந்தப் பெண் இது குறித்து யாரிடமும் கூறவில்லை.

ஆனால், இரண்டு நாள்களுக்கு முன்பு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று கருக் கலைப்பு செய்ய முயன்றபோது அவர் உயிரிழந்தார்.

பாலியல் வல்லுறவு.

6 மாதங்களுக்கு முன்பு வன்புணர்வு

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் இந்த வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர், அவரது இரண்டு கூட்டாளிகள் மற்றும் கருக்கலைப்பு செய்ய முயன்ற மருத்துவமனையின் நிர்வாகி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தவிர, இந்த வழக்கையும் அவர்கள் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

"பெண்ணின் தந்தை அளித்துள்ள புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டனர். கருக்கலைப்பு செய்ய முயன்ற டாக்டரும் கைது செய்யப்பட்டுள்ளார்," என்று மகோபா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திர குமார் கௌதம் பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் இதுபற்றிக் கூறிய அவர், "பெண்ணின் மரணத்துக்குப் பிறகு அவரது தந்தை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அவர் 6 மாதத்துக்கு முன்பு வன்புணர்வுக்கு உள்ளானதாக கூறியுள்ளார். ஆனால், அப்போது யாரும் புகார் தரவில்லை," என்றார்.

பாதிக்கப்பட்ட பெண் இறந்ததை அடுத்து, கோபம் கொண்ட உறவினர்கள் புதன்கிழமை அமளியில் ஈடுபட்டதுடன், கப்ரயி காவல் நிலையத்தில் புகார் தந்து முதல் தகவல் அறிக்கை பதியவைத்தனர்.

சுமார் 6 மாதத்துக்கு முன்பு வயலுக்கு சென்று கொண்டிருந்த பெண்ணை பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒரு நபர் வன்புணர்வு செய்ததாக உறவினர்கள் கூறுகிறார்கள்.

6 மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தபோது தங்கள் மகள் இது குறித்து எதுவும் கூறவில்லை என்றும், இப்போது உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்புதான் இது பற்றிக் கூறியதாகவும் அந்தப் பெண்ணின் தந்தை பிபிசியிடம் கூறினார்.

சித்தரிப்புப் படம்.

பட மூலாதாரம், BBC/Nikita Deshpande

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்.

குற்றம்சாட்டப்பட்டோர் கைது

"தனது உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், பக்கத்து ஊரைச் சேர்ந்த ஷைலேந்திரா என்பவர் தன்னை 6 மாதம் முன்பு வன்புணர்வு செய்ததாகவும் இதை யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் என் மகள் கூறினார். இதைக் கேள்விப்பட்டவுடன், எங்கள் ஆள்கள் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கே அந்த நபரின் உறவினர்கள் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து கருக்கலைப்பு செய்துவிடும்படி அவருக்கு அறிவுரை கூறினர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 2 நாள்கள் இருந்த என் மகள் உடல் நிலை, செவ்வாய்க்கிழமை மாலை மோசமடைந்து இறந்துவிட்டாள்," என்றார் பெண்ணின் தந்தை.

வன்புணர்வு, கருக் கலைக்க நிர்பந்தம் செய்தல் ஆகியவற்றின் கீழும் எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் ஷைலேந்திரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது தந்தை ராம்நாத், சித்தப்பா ஷிவ்நாத், டாக்டர் ஆகியோர் மீதும் கருக்கலைப்புக்கு நிர்பந்தம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். புகாரில் குறிப்பிடப்படாத மற்றவர்கள் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தங்களுக்கு வேறு எந்த தகவலும் தெரியாது என்கிறார்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

ஹமீர்பூர் மாவட்டம் மௌதாஹா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில்தான் பாதிக்கப்பட்ட பெண் கருக்கலைப்புக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அந்தப் பெண் ஒரு ஆணோடு மருத்துவமனைக்கு வந்ததாகவும், இருவரும் ஒருவரை ஒருவர் கணவன் மனைவி என்று அழைத்துக்கொண்டதாகவும் அந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறினார்.

"செவ்வாய்க்கிழமை பிற்பகல், ஒரு இளம் பெண்ணும், இளைஞரும் தங்களை கணவன் மனைவி என்று கூறிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தனர். பெண்ணுக்கு பிரசவம் பார்க்கவேண்டும் என்று அவர்கள் டாக்டரிடம் கூறினர். ஆனால், அந்தப் பெண்ணின் உடல் நிலை மோசமாக இருந்தது. அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி டாக்டர் கூறினார். ஆனால், அந்தப் பெண்ணின் உடல் நிலை மோசமாக இருந்த காரணத்தால் அவருக்கு இங்கேயே பிரசவம் செய்ய முயற்சி செய்தார். முடிவில் குழந்தை இறந்தே பிறந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர். ஆனால், போகும் வழியிலேயே அந்தப் பெண் இறந்துவிட்டார்," என்று மருத்துவமனை ஊழியர் கூறினார்.

முழு விவகாரத்தையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :