அ.தி.மு.க - பா.ஜ.க உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி: 20 % இடங்கள்; 6 வாய்ப்புகள்

பட மூலாதாரம், @anamalai_k twitter
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க இடையேயான இடப்பங்கீடு முடிவுக்கு வந்துவிட்டது. `` இரு தரப்பிலும் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடந்தாலும் கள்ளக்குறிச்சியில் மட்டும் எங்கள் நோக்கம் நிறைவேறவில்லை" என்கின்றனர் பா.ஜ.கவினர். என்ன நடந்தது?
தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடக்கப் போகும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.கவும், அ.தி.மு.கவும் தங்களின் கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தின. தி.மு.க தரப்பில், `மாவட்ட அளவிலேயே பேசி முடிவு செய்து கொள்ளலாம்' எனக் கூறிவிட்டனர். இதையடுத்து, தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தங்களுக்கு செல்வாக்கான இடங்களைக் கேட்டுப் பெற்றனர்.
அ.தி.மு.க தரப்பில் இடப்பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, செங்கோட்டையன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவினர் அமர்ந்து பேசி கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை முடிவு செய்தனர்.
இதில், பா.ஜ.க சார்பில் பேச்சுவார்த்தைக் குழுவில் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், ஜி.கே.எஸ்.செல்வகுமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு 22 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டாலும் அ.தி.மு.க, பா.ஜ.க தரப்பில் இடங்களை முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டது. அதில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. கூட்டணியில் பேச்சுவார்த்தை முடியும் முன்னரே வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டதை கூட்டணிக் கட்சியினர் எதிர்பார்க்கவில்லை.
`` ஒன்பது மாவட்டங்களில் பா.ஜ.கவுக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஏழு இடங்களை உறுதி செய்துள்ளனர். ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 65 இடங்களை அ.தி.மு.க ஒதுக்கியுள்ளது. அ.தி.மு.கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அவர்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள பல இடங்களை ஒதுக்குவதற்குத் தயக்கம் காட்டினர்."

பட மூலாதாரம், Aiadmk official facebook page
"நாங்களும் இதுவரையில் எங்களின் பலத்தை உள்ளாட்சித் தேர்தலில் நிரூபிக்காததால் சில இடங்களில் விட்டுக் கொடுத்தோம். இதில், குறிப்பிட வேண்டிய விஷயம். எட்டு மாவட்டங்களில் மட்டுமே அ.தி.மு.கவுடன் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் நாங்கள் கேட்ட இடங்களை அவர்கள் ஒதுக்கவில்லை. `அது எங்களுக்குச் சாதகமான வார்டுகள்' என அ.தி.மு.க நிர்வாகிகள் உறுதியாகக் கூறிவிட்டனர். இதனால் அங்கு மட்டும் தனித்துப் போட்டியிடுவதற்கான சூழல் உருவாகியுள்ளது" என்கிறார், பா.ஜ.கவின் மாநில நிர்வாகி ஒருவர்.
தொடர்ந்து பேசுகையில், `` திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாங்கள் சற்று வலுவாக இருக்கிறோம். அங்கு நயினார் நாகேந்திரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் இருப்பதால் அங்கு கூடுதல் இடங்களைக் கேட்டுப் பெற்றோம். வடமாவட்டங்களில் அமைப்புரீதியாக கட்சி வலுவில்லாமல் இருப்பதால் அங்கு எங்களுக்கு சாதகமான வார்டுகளைக் கேட்டோம். அதில் சிலவற்றை மட்டுமே ஒதுக்குவதற்கு அ.தி.மு.க முன்வந்தது. நாங்களும் பெரிதாக அழுத்தம் கொடுக்கவில்லை. மொத்தமாகக் கணக்கிட்டால் அ.தி.மு.க அணியில் 20 சதவிகிதம் அளவுக்கான இடங்கள் பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன" என்கிறார்.
``உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.கவின் வியூகம் என்ன?" என அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இந்தத் தேர்தலில் நமது வலிமையைக் காட்ட வேண்டும் என மாநிலத் தலைமை அறிவுறுத்தியுள்ளது. உள்ளாட்சியில் அதிக இடங்களில் வெற்றி பெற்றால்தான் அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடியும் என்பதால், கட்சி நிர்வாகிகள் அடிமட்ட அளவில் இறங்கி தேர்தல் வேலைகளைச் செய்ய உள்ளனர்.
இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், பா.ஜ.க ஆதரவாளர்கள் வட்டம், தோழமை இயக்கங்கள், சாதி சங்கங்களின் தலைவர்கள், நட்சத்திர தலைவர்கள், உயர்மட்ட நிர்வாகிகள் என 6 வகையான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறோம். தேர்தல் முடிவில், 50 ஒன்றிய கவுன்சிலர் இடங்களையும் அனைத்து மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் வெல்வது என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம்" என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
``முன்னதாக, பா.ஜ.க தனித்துப் போட்டியிட வேண்டும் எனக் கட்சிக் கூட்டத்தில் குரல்கள் எழுந்ததே?" என்றோம். `` அது எங்களின் இறுதி இலக்காக இருந்தது. தற்போது அ.தி.மு.க கூட்டணி உயிர்ப்போடு இருக்கும்போது, எதற்காக அதனை முறிக்க வேண்டும் என்ற எண்ணமே காரணம். உள்ளாட்சி அமைப்புகளில் எங்களின் செல்வாக்கை நிரூபிப்பதற்கான வாய்ப்பு இது. இதற்காக வார்டு வாரியாக புள்ளிவிவரங்களை சேகரித்துள்ளோம். அதில், `மத்திய அரசின் திட்டங்களால் பலன் பெற்றவர்கள், அவர்களுக்கான தேவைகள் என்ன, வேலைவாய்ப்பு வேண்டுமா?' என்பன உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இதில், எந்த வார்டுகளில் எங்களுக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அதனை பேச்சுவார்த்தையில் கேட்டுப் பெற்றோம்" என்கிறார்.
``கள்ளக்குறிச்சியில் மட்டும் ஏன் உடன்பாடு எட்டப்படவில்லை?" என பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.எஸ்.செல்வகுமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினாம். `` அந்த மாவட்டத்துக்கு மட்டும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிலவரம் தொடர்பாக இரு தரப்பிலும் அமர்ந்து பேசி முடிவு செய்வார்கள். மற்ற எட்டு மாவட்டங்களில் போட்டியிடக் கூடிய இடங்களை இன்று இரவு அறிவித்துவிடுவார்கள்" என்கிறார்.
மேலும், ``அனைத்து இடங்களிலும் சுமூகமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. சில இடங்களில் நாங்கள் கேட்கும் இடங்களில் அ.தி.மு.கவை சேர்ந்தவர்கள் சிட்டிங் கவுன்சிலர்களாக உள்ளனர். `இந்த இடம் வேண்டும்' என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். இதுவரையில் 65 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை அ.தி.மு.க ஒதுக்கியுள்ளது. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 7 இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தற்போது பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












