பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பதவி விலகல்: என்ன காரணம்? காங்கிரசில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், CAPTAIN AMARINDER SINGH/FB
பஞ்சாப் மாநில அரசியலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த உள்கட்சி மோதலின் உச்சமாக இன்று முதல்வர் பதவியை கேப்டன் அமரிந்தர் சிங் ராஜிநாமா செய்துள்ளார்.
இதற்கான கடிதத்தை அம்மாநில புதிய ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்திடம் வழங்கிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தமது முடிவு குறித்து பேசும்போது மிகவும் கோபத்துடன் காணப்பட்டார்.
"பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து நான் விலகி விட்டேன். இப்போதுதான் எனது கட்சித் தலைவரிடம் பேசினேன். ராஜிநாமா முடிவை காலையிலேயே எடுத்து விட்டேன். கடந்த சில மாதங்களில் மூன்றாவது முறையாக கட்சி எம்எல்ஏக்களை கட்சி மேலிடம் அழைத்துப் பேசியிருக்கிறது. அப்படிச் செய்வது நான் ஏதோ அரசை வழி நடத்த திறனில்லாத நிலையில் இருப்பது போன்ற சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. நடக்கும் விஷயங்களால் நான் அவமானப்படுத்தப்படுவதாக உணர்கிறேன்," என்று அமரிந்தர் சிங் தெரிவித்தார்.
"அவர்கள் (காங்கிரஸ் மேலிடம்) இனி யாரை நம்புவார்களோ அவர்களையே முதல்வராக்கிக் கொள்ளட்டும் என்பதால்தான் எனது பதவியை ராஜிநாமா செய்தேன்," என்றும் அமரிந்தர் சிங் கூறினார்.
இதையடுத்து உங்களுடைய அடுத்த திட்டம் என்ன என்று கேட்டபோது, "இப்போதும் நான் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். எனது ஆதரவாளர்களுடன் பேசி விட்டு சரியான நேரத்தில் எனது முடிவை வெளியிடுவேன்," என்று அமரிந்தர் சிங் பதிலளித்தார்.
காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்யும் புதிய முதல்வருக்கு ஆதரவாக இருப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது குறித்து தனது ஆதரவாளர்களுடன் பேசி விட்டு முடிவெடுப்பதாக அமரிந்தர் சிங் கூறினார்.
பின்னர் அவர் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "நவ்ஜோ் சித்துவை முதல்வர் பதவிக்கு நான் ஆதரிக்க மாட்டேன். அது தேச பாதுகாப்பு தொடர்பானது. அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நண்ர். அந்நாட்டு ராணுவ ஜெனரல் ஜாவேத் பாஜ்வாவுக்கு நெருக்கமானவர்," என்று தெரிவித்தார்.
என்ன நடந்தது?
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுமார் 40 எம்எல்ஏக்கள், கேப்டன் அமரிந்தர் சிங் தலைமை மீது அதிருப்தி தெரிவித்தும் அவர் மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறியும் கட்சி மேலிடத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
2017ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது அறிவித்த 18 அம்ச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அவர் அக்கறை காட்டவில்லை என்றும் அதிருப்தி எம்எல்ஏக்களில் சிலர் வெளிப்படையாக குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கட்சியின் சட்டமன்ற குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மேலிடத்தை வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில், அமரிந்தர் சிங்குக்கு எதிரான எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டத்தை இன்று மாலை 5 மணியளவில் நடத்த மாநில தலைமை தீர்மானித்தது. இதற்கு ஆதரவாக காங்கிரஸ் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்த நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டம் நடத்தப்படும் தகவலை காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் ஹரீஷ் ராவத் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அதன்படி இன்று மாலையில் கூடிய கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் புதிய முதல்வர் தொடர்பாக கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹரீஷ் ராவத் தெரிவித்தார்.
சித்துக்கு முக்கியத்துவம்

பட மூலாதாரம், ANI
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே மாநில முதல்வர் அமரிந்தர் சிங்குக்கும் கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கசப்புணர்வு நிலவி வருகிறது. 2019இல் நடந்த மக்களவை தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் பிரசார நடவடிக்கைகளை சித்துவே வழிநடத்தினார். அப்போதே முதல்வர் அமரிந்தர் சிங்குக்கு முக்கியத்துவம் குறைந்ததாக கூறப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு முதல்வரின் செயல்பாடுகளை நவ்ஜோத் சிங் சித்து வெளிப்படையாக விமர்சித்தார்.
ஒரே கட்சியில் இருந்தபோதும் இருவரும் எலியும் பூனையும் போல மோதிக் கொண்டதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டி வந்தனர். இந்த நிலையில், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு அங்கீகாரம் கொடுப்பது போல அவரை மாநில தலைவராக காங்கிரஸ் மேலிடம் நியமித்தது. இதுவும் அமரிந்தர் சிங்கை கோபப்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிபிசி பஞ்சாபி சேவை ஆசிரியர் அடுல் சங்கார் பார்வை
பஞ்சாப் மாநில சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நேரத்தில் தேர்தலுக்கு ஆயத்தமாகும் பணிகளில் கவனம் செலுத்த முடியாத வகையில் சொந்த பிரச்னைகளில் காங்கிரஸ் கட்சி சிக்கிக்கொண்டது.
விலைமதிப்பற்ற நேரத்தை காங்கிரஸ் கட்சி இழந்த அதே சமயம், அமரிந்தர் சிங் தலைமையிலான அரசாங்கமும் தனது பிம்பத்தை இழக்கத் தொடங்கியது. இந்த செயல்பாடுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா என்ற நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்திய நிகழ்வுகளின் விளைவாக, கேப்டன் அமரிந்தர் சிங், முதல்வர் பதவியில் இருந்து வெளியேறும்போது மிகவும் அவமானப்பட நேர்ந்துள்ளது.
பஞ்சாப் மாநில காங்கிரஸில் மூத்த தலைவராக கருதப்பட்டு வந்தவர் அமரிந்தர் சிங். அவர் மொத்தம் 9 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்தார். ஆனால், அவர் இனி காங்கிரஸுக்கு எந்த நன்மையும் செய்யப் போவதில்லை என்பது தெரிய வந்ததும் அவருக்கு இப்படியொரு முடிவை காங்கிரஸ் மேலிடம் கொடுத்திருக்கிறது.
காங்கிரஸ் மேலிடம் போட்ட கணக்கு

பட மூலாதாரம், ANI
பஞ்சாப் காங்கிரஸில் ஏற்பட்ட இந்த அரசியல் திருப்பம் குறித்து அம்மாநிலத்தில் உள்ள சில தலைவர்களுடன் பேசியபோது, அந்த கட்சி போடும் கணக்கு புரிந்தது. அந்த மாநிலத்தில் அமரிந்தர் சிங்குக்கு எதிராக திரும்பிய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகம். அமரிந்தர் சிங்கை இப்போதே முதல்வர் பதவியில் இருந்து அகற்றி விட்டால் எஞ்சிய ஐந்து மாதங்களில் அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து தேர்தலை எதிர்கொண்டு ஆட்சியை தக்க வைக்கலாம் என்பது காங்கிரஸ் மேலிடத்தின் கணக்கு.
கடந்த ஓராண்டாக காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் வேலைவாய்ப்பின்மை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் நிலவும் அதிருப்தி போன்றவை இருந்தாலும், கடந்த தேர்தலில் அறிவித்த ஒரு சில வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவே செய்திருக்கிறது. அதனால், அவை எல்லாம் எரிமலை போல வெடிக்கக் கூடிய பிரச்னைக்கு காரணமில்லை.
இந்த பிரச்னைக்கெல்லாம் அடிப்படையே முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்துக்கு கட்சி மேலிடம் கொடுக்கும் அதீத முக்கியத்துவம்தான் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியர்கள் சென்று வர ஏதுவாக கர்தார்பூர் பாதை திறக்கப்பட்டபோது அந்த நிகழ்ச்சியில் நவ்ஜோத் சித்து பங்கேற்றார். அப்போது அந்நாட்டின் ஜெனரல் பாஜ்வாவை சித்து கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்த நிகழ்வை அமரிந்தர் சிங் கடுமையாக சாடினார். அந்த கர்தார்பூர் குருத்வாரா சீக்கியர்கள் புனித தலமாக போற்றும் இடங்களில் முக்கியமானதாகும். சீக்கிய மதகுரு தமது கடைசி காலத்தை அந்த குருத்வாரா பகுதியிலேயே கழித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அப்போது சித்து அமரிந்தர் சிங் அமைச்சரவையில் அங்கம் வகித்தார். ஆனால், முதல்வருக்கும் அமைச்சருக்கும் இடையிலான கருத்து மோதல்கள் அமைச்சரவை கூட்டங்களிலும் வெளியிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் சித்துவின் துறையை அமரிந்தர் சிங் மாற்றினார். ஆனால், அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய துறையின் அமைச்சர் பதவியை ஏற்காமல் தமது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் சித்து. பின்னர், தமது யூட்யூப் பக்கம் மூலம் அமரிந்தர் சிங் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டத் தொடங்கினார்.
இதன் மூலம் பஞ்சாபில் அகாலி தளமும் ஆம் ஆத்மி கட்சியும் முதல்வருக்கு எதிராக முன்னெடுக்கத் தவறிய எதிர்ப்பு பரப்புரையை தனி நபராக நவ்ஜோத் சித்து முன்னெடுத்தார். போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பது, வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவது, விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது போன்றவை பகுதியளவே நிறைவேற்றப்பட்டதாக சித்து பரப்புரை செய்தார்.
ஆச்சரியமூட்டும் வகையில் சொந்த கட்சியில் இருந்து கொண்டே அந்த கட்சியின் முதல்வருக்கு எதிராக நவ்ஜோத் சிங் சித்துவால் குரல் கொடுக்க அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு இருந்தது. அதன் உச்சமாகவே நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவராக கட்சி மேலிடம் கடந்த ஜூலையில் நியமித்தது.
பஞ்சாபில் சட்டமன்ற தேர்தலுக்கு 4 மாதங்களே இருக்கும் நிலையில், புதிய முதல்வரை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்ய நடவடிக்கை எடுப்பதன் மூலம், மாநிலத்தில் அமரிந்தர் சிங்குக்கு எதிரான அதிருப்தி அலையை சமாளிக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது. அந்த வகையில், அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை நவ்ஜோத் சிங் சித்துவே வழிநடத்துவார் என்று தெரிகிறது.
இந்த மாநிலத்தில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் மூலம், பஞ்சாபில் தமது சக நிர்வாகிகள் மத்தியில் உயரிய தலைவராக இதுவரை விளங்கி வந்த அமரிந்தர் சிங், இனி தமது செல்வாக்கை சொந்த கட்சியில் செலுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டதாக பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், காங்கிரஸ் கட்சி இனி மேற்கொள்ளும் அரசியல் பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்காது என்றே தோன்றுகிறது.
பிற செய்திகள்:
- குத்தி கொலை செய்யப்பட்ட பாலின தொழிலாளியின் பெயரை பெல்ஜியம் ஒரு சாலைக்கு வைப்பது ஏன்?
- பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?
- கொரோனா தடுப்பு மருந்துக்கு பிறகு மாதவிடாய் சுழற்சியில் மாற்றமா? – விரிவான ஆய்வுக்கு கோரிக்கை
- முக்கியமான ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் சேர சீனா விண்ணப்பம்: ஆக்கஸ் எதிரொலியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












